4.5 மில்லியன் பனைகள் போரில் அழித்தொழிப்பு

panaiபனை மரம் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளம். இதனால்தான் கடந்த காலப் போரின் போது 4.5 மில்லியன் பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

நாம் பனை வளத்தைக் கட்டியயழுப்பி, அதனை ஆதாரமாகக் கொண்டு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தால் யாரிலும் தங்கி வாழவோ அல்லது யாருக்கும் அடிபணிந்து போகவோ வேண்டியதில்லை என்று மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

கொழும்பு, வெள்ளவத்தை றோட்டரக் கழகம் முன்னெடுத்துள்ள, இலங்கையில் ஒரு லட்சம் பனை மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் ஆரம்ப வைபவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறுப்பிட்டியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வலி.கிழக்குப் பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார், பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.சீவரத்தினம், றோட்டரக்கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இஙகு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு கிழக்கில் 11 மில்லியன் பனைமரங்கள் உள்ளன. இவற்றில் 9.5 மில்லியன் பனை மரங்கள் வடக்கு மாகாணத்திலுள்ளன. உலகில் அதிகளவு பனை மரங்கள் இந்தியாவிலேயே உள்ளன.

அங்கும் 50 வீதத்துக்கும் அதிகமான பனை மரங்கள் தமிழ் நாட்டிலேயே காணப்படுகின்றன. அந்த வகையில் பனை மரம் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளம் வரண்ட வலயமான எமது பிரதேசத்தில் பெருங்காடுகள் இல்லாத குறையைப் போக்குபவையும் இந்தப் பனங்கூடல்கள்தான்.

ஆனால், சூழலியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த பனை வளத்தை நாம் இன்னும் உணராமல் இருக்கின்றோம்.

எல்லா நாடுகளும் தங்கள் இயற்கைத் தாவர வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியயழுப்புகின்றன. ஆனால் நாம் பனை மரத்தைப் குறிப்பிட்ட சமூகத்துக்குரிய மரமாக ஒதுக்கி வைத்துள்ளோம்.

பனைப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் முகமாக அது தொடர்பான கல்வியையும், நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய தொழில்முறைகளையும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

சமூக வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் இந்தத் துறையில் ஈடுபடவேண்டும்.
போரில் அதிகம் பாதிக்கப்பட்ட தாவரம் பனை வளம்தான். 4.5 மில்லியன் பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதும் அழிப்புத் தொடர்கின்றது.

அரச தரப்பின் ஆதரவோடு புதுக்குடியிருப்பில் மரக்காலை அமைப்பதற்கு 250 பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இயற்கையிலேயே பனை எவரது கவனிப்புமின்றி வளரக் கூடியதாக உள்ளபோதும், முளைதிறன் குறைந்த மரம். எனவே இவ்வாறான பனை மரம் நடுகைத் திட்டம் மூலமே இழந்த பனை வளத்தை ஈடுசெய்ய முடியும் என்றார்.

Tags: ,

Leave a Reply