ஆர்னோல்ட்டுக்கு ஆப்பு வைத்த முதலமைச்சர்!

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் ஆர்னோல்டுக்கு உத்தியோக பூர்வ இல்லம் ஒன்றை அமைக்கும் யோசனையை, வட மாகாண முதலமைச்சர் நிராகரித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தின் மூலம் மாநகர முதல்வரிற்கான வாசல்தலம் ஒன்றை அமைக்க அனுமதிக்கப்பட்ட போதிலும், உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சரினால் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வரிற்கான ஓர் உத்தியோக பூர்வ இல்லம் வாடகைக்கு அமர்த்துவதற்கு கடந்த மாதாந்த அமர்வின் போது முதல்வர் அனுமதியை கோரியிருந்தார். இதனை சபை ஏற்றுக்கொண்டது. இதற்கமைய சுண்டுக்குழிப் பகுதியில் ஓர் வீடு வாடகைக்கு அமர்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இருப்பினும் குறித்த வாடகை கொள்வனவிற்காக மாநகர சபை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக விண்ணப்பித்த நிலையில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் குறித்த விடயத்தினை வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இதனை ஆராய்ந்த முதலமைச்சர் மாநகர முதல்வருக்கு உத்தியோகபூர்வ இல்லம் ஏதும் தொடர்பில் சட்ட ஏற்பாடு கிடையாது எனத் தெரிவித்து குறித்த விடயத்தினை நிராகரித்துள்ளார்.

இதன் காரணமாக மாநகர சபை தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதனால், அடுத்த அமர்வில் குறித்த விடயம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!