பொருளாதாரத்தில் முன்னேறி வரும் தமிழகம்!

தமிழ்நாட்டு ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவும் சூழலிலும் தமிழ்நாட்டில் முதலீடுகள் மோசமாகப் பாதிக்கப்படவில்லை. ரஷ்யா-உக்ரைன் போர், சர்வதேச மந்தநிலை, தனியார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு, கொரோனா பாதிப்பு எனப் பல சவால்கள் இப்போது உள்ளன. இருப்பினும், அதையும் தாண்டி தமிழ்நாடு தனது ஒரு டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
    
சர்வதேச அளவில் மந்தநிலை காரணமாகப் பொருளாதார வளர்ச்சி அனைத்து பகுதிகளிலும் முடங்கியுள்ளது. அதையும் தாண்டி பல்வேறு துறைகளிலும் முதலீடுகள் கிடைப்பதால் தனது ஒரு டிரில்லியன் இலக்கை நோக்கி தமிழகம் வேகமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இரண்டு முக்கிய துறைகள்
தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகம், விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் இப்போது கவனம் செலுத்துகிறது. இந்த துறைகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவ அல்லது ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகள் விரிவுபடுத்தத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு ஏதுவாக மாநிலம் முழுக்க ஆறு தொழில் பூங்காக்களை உருவாக்கத் தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 75,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை கொள்கையைத் தமிழக அரசு கடந்தாண்டு வெளியிட்டது.

ஐடி துறை
இந்த புதிய கொள்கைகளால் இந்தாண்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதன் மூலம் ரேடார்கள் முதல் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் வரை பல வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் வசதிகளைத் தமிழ்நாடு பெறும். இது ஒருபக்கம் இருக்க, தமிழ்நாட்டில் எப்போதுமே அதிக வருவாய் ஈட்டும் ஒரு துறையாக இருப்பது ஐடி துறை. கடந்த 2022இல் கோவை மற்றும் மதுரை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் ஐடி ஏற்றுமதி 1.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் ஐடி வளர்ச்சி பாசிட்டிவாக உள்ளதையே இது காட்டுகிறது.

ஆப்பிள்
சிப்காட் வல்லம் வடகல் தொழிற்பேட்டையில் 30.83 ஏக்கரில் 19,500 பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டும் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் முதல் கட்டம் வரும் 2023ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தியாளரான பாக்ஸ்கான், அடுத்த ஆறு ஆண்டுகளில் ரூ.2,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 25,000 நேரடியாகவும் அவுட்சோர்ஸ் முறையிலும் வேலை பெறுவார்கள்.

ஆட்டோமொபைல்
ஆட்டோமொபைல் துறையில், போர்டு தொழிற்சாலை மூடப்பட்டது பெரிய பின்னடைவாக உள்ளது. இருப்பினும், இந்த இடத்தை மின்சார வாகனங்கள் நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் கூட ஏற்கனவே சில முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் மின்சார கார் தொழிற்சாலைகளை ஆரம்பித்து வருகிறது. அதேநேரம் 2023இல் அரசின் அதிக கவனம் தேவைப்படும் துறைகளில் ஒன்றாக ஜவுளித்துறை உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பருத்தி நூல், துணிகள் மற்றும் கைத்தறி பொருட்களின் ஏற்றுமதி சுமார் 20.81% வரை குறைந்துள்ளது.

ஜவளித்துறை
குறிப்பாக நவம்பர் மாதம் மட்டும் இதில் ஏற்றுமதி 28% குறைந்துள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தை குறைவதே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பூர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மூன்று ஷிப்ட்களில் இயங்கும் தொழிற்சாலைகள் கூட இப்போது ஒரு ஷிப்ட்டில் மட்டுமே இயங்குகிறது. அமெரிக்காவில் ஆர்டர் குறைந்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஜவளி துறை மிக மோசமான நிலையில் உள்ளதால் அரசின் ஆதரவு தேவை என்கின்றனர் திருப்பூர் ஜவளித்துறையினர்.

ஒரு டிரில்லியன் டாலர்
இப்படி சில சிக்கல்கள் இருந்தாலும் கூட, நாம் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, தமிழக பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளது. தொடர்ச்சியாக மாநிலத்தில் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. இந்தாண்டு அனைத்தும் எதிர்பார்த்த போல நடந்து, மின்சார கார் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டால், அது தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். இது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கையும் ஈஸியாக அடைய உதவும் என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!