தன்னிச்சையான முடிவுகள் தமிழருக்குச் செய்யும் துரோகம்; கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவிப்பு

Thurairatnamதமிழ்த் தேசியத்துக்காக செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம் இதய சுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையின் அவசியம் தொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தமிழ் மக்களின் உரிமைக்காக, நல்லாட்சி முறைமைக்கான, தலைமைத்துவத்தை உருவாக்க முன்னின்று உழைப்பதை விடுத்து ஒரு கட்சி சார்ந்த பக்கச்சார்பான தனிநபர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது உடன் நிறுத்தப்படல் வேண்டும்.

கூட்டமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சகல கட்சிகளும் பேசி தெளிவான முடிவுகளை இதய சுத்தியுடன் எடுக்க முன்வர வேண்டும்.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்தின் விடுதலை என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஒன்றிணைந்துள்ளன.

வட மாகாண சபைத் தேர்தல் மூலம் வடக்கு மக்கள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கும் அவமானங்களுக்கும், தங்கள் வாக்கு பலத்தின் ஊடாக தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். தங்கள் உரிமைகள் அபிலாசைகள் தொடர்பாக அரசுக்கும், சர்வதே சத்துக்கும் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி உள்ளனர்.

பல கட்சிகளின் கூட்டு முயற்சியில் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டமைப்பிலும் ஒரு கட்சியின் மேலாதிக்கப் போக்கும் ஏதேச் சதிகாரப்போக்கும் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளன.

இந்த நிலையில் உரிமைகள் தொடர்பாகப் பேசுவோர் தமிழர் போராட்டத்தில் தங்கள் நிலை தொடர்பாக ஒரு கணம் தம்மை சுய மதிப்பீடு செய்து கொள்ளவேண்டும்.

தமிழர் போராட்டத்தின் இழப்புக்களையும் தியாகங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடக் கூடாது. மக்கள் தமிழ்த் தேசியத்துக்காகச் செய்த தியாகங்களை வாக்குகளாகப் பெற்ற நாம், இதய சுத்தியுடனே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதனைக் கொச்சைப்படுத்தும் தன்னிச்சையான முடிவுகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைமைகள் பேதங்களைக் கைவிட்டு ஒன்றிணைந்து அது குறித்து கூட்டான அறிக்கையை வெளியிட முன்வரவேண்டும் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: , , ,

Leave a Reply