நாம் இப்போ நடத்துவது இன ஒடுக்கு முறைக்கு எதிரான ஒரு யுத்தம். இதில் ஒட்டு மொத்தமான தந்திரோபாயமும் நிலைமைகளுக்கேற்ற யுத்ததந்திரமும் முக்கியமானவை. இவற்றில் எதில் நாம் பலவீனமடைந்தாலும் பெரியபின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும்.
1977’ஆம் ஆண்டு எம்மை விட்டுக் கடந்து போய் 36 ஆண்டுகளாகிவிட்டன. இப்போது நாம் 2013 ஆம் ஆண்டில் நிற்கிறோம். இந்த 30 ஆண்டுகள் எத்தனையோ சாதனைகளை, எவ்வளவோ வேதனைகளை, பெருமளவு இழப்புக்களை, நினைக்க முடியாத தியாகங்களை என அழிக்க முடியாத வரலாற்றுப் பதிவுகள் கடந்துவிட்டன. நாம் சிந்திய குருதி காய்ந்துவிட்டது. விடுதலைப் பயணத்தில் எம்மை வழி நடத்திய தலைமையை இழந்துவிட்டோம். உலகமே வியக்கும் வீர வரலாற்றை எழுதி வைத்த எமது வீரர்களின் கல்லறைகள்கூட அழிக்கப்பட்டு விட்டன.
ஆனால் எமது உணர்வுகள் இன்னும் பசுமையாகவே உள்ளன. அவை ஒரு பெரும் உலைக்களமாக அனல் கக்கி கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. ஒரு விடிய லைத் தேடும் தாக்கத்துடன் வானை நோக்கி மேலெழுந்து அவை சுடர்விடுகின்றன. 1977 இல் விலங்கு பூட்டப்பட்ட கரங்களின் விரல்களுக்குள் முனைப்படைந்திருந்த அந்த உணர்வு இப்போது 2013 இலும் அதே வீச்சுடன் விழுந்து கிடக்கும் போதும் வீறுகொண்டெழுந்து நிற்கிறது. 1977இல் தனித்தமிழ் ஈழத்துக்கு ஆணை வழங்கினோம். அந்த ஆணையை நிறைவேற்ற நெருப்புக் கடலில் நீந்தினோம். 2013இல் வடக்குக் கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஓர் அதிகார அலகுக்காக ஆணை வழங்கினோம். அதே பாதையில் இன்னல்களைக் கடந்து முன்செல்வோம்.
காலம் 30 ஆண்டுகளை விழுங்கி விட்டது. அதனால் எங்கள் இலட்சிய வேட்கையை விழுங்க முடியவில்லை. எங்கள் உயிர்களும் உடைமைகளும் அழிக்கப்பட்டன. எங்கள் உணர்வுகளை எவராலும் அழித்து விட முடியவில்லை.
1977
வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட்டில் வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக் கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஏற்கனவே தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன வல்வெட்டித்துறையில் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தனித் தமிழ் ஈழக் கோரிக் கையைப் பிரகடனம் செய்தது.
1977இல் தனித் தமிழ் ஈழக் கோரிக்கைக்கு தமிழ் மக்களின் ஆணை கோரி வடக்குக் கிழக்கில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம் பெற்ற மே தினப் பேரணியில் அமிர்தலிங்கம் அடுத்த மேதினம் தமிழீழத்தில்தான் என முழங்குகிறார். அதுமட்டுமன்றி தேர்தல் மேடைகளில் அடுத்த தீபாவளி மே தினத்தில் எனப் பரப்புரைகள் மேற் கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்கள் 90 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வழங்கி தமிழீழத்துக்கு ஆணை கொடுக்கின்றனர். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகிறார். தொண்டமான் வடக்குக் கிழக்கு தமிழரின் பிரச்சினை வேறு, மலையக மக்களின் பிரச்சினை வேறு எனக் கூறி தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்கிறார்.
அமிர்தலிங்கம் பதவியேற்றுக் கொள்ளும்போதுதான் மரபு ரீதியாகப் பதவியேற்றும் கூட தமக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றும் வகையிலேயே செயற்படப் போவதாகச் சூளுரைக்கிறார்.
ஜனநாயக வழிமுறைகள் மூலம் நாடாளுமன்றத்தினூடாக தமிழ் ஈழக் கோரிக்கையை வென்றெடுக்க முடியாது என்பதைத் தெரிந்த போதிலும் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தமது பேராதரவை வழங்கினர். ஏனெனில் அந்தக் காலப் பகுதியில் ஆயுதப் போராட்டம் வேகமாக வளர்ச்சி பெற்று வந்தது. எனவே தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆயுதப் போராட்டத்துக்கு சமாந்தரமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்குமென மக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா “போர்’ என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என ஒரு போரை பிரகடனம் செய்து பெரும் இன அழிப்புக் கலவரத்துக்கு வழி சமைத்தார். அமிர்தலிங்கம் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் இந்தியாவுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. காலப்போக்கில் அவர்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டது மட்டுமன்றி இந்தியாவின் தூண்டுதலின் பேரில் ஆயுதப் போராளிகளுக்கு விரோதமான செயற்பாடுகளிலும் அவர்கள் முற்றுமுழுதாகவே மக்கள் வழங்கிய ஆணையைக் கைவிட்ட போதிலும் ஆயுதப் போராட்டம் தீவிரமாக வளர்ச்சிபெற்றது. இறுதியில் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் சிலர் விடுதலைப் போராளிகளாலேயே தண்டிக்கப்படும் நிலை எழுந்தது
1977 இல் மக்கள் வழங்கிய ஆணையை மறந்து வாக்களித்த இலட்சியங்களுக்குத் துரோகம் செய்த காரணத்தால் அவர்கள் தங்கள் உயிர்களையே விலையாகக் கொடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
2013
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து தோற்கடிக்கப்பட்டு 4 வருடங்கள் கழிந்த நிலையில் வட மாகாண சபைக்கான தேர்தல் இடம் பெற்றது. இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்தத் தேர்தலை மனப்பூர்வமான விருப்பத்துடன் நடத்தினர் என்று கூறிவிட முடியாது. எவ்வளவோ இழுபறிகளின் பின்பு சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் இந்தியா இந்த விடயத்தில் சற்று இறுக்கமாக நின்ற காரணத்தாலும் இலங்கை அரசு இந்தத் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குக் கிழக்கு இணைந்த உள்ளக சுயநிர்ணய உரிமை கொண்ட அதிகாரப் பரவலாக்கம் என்ற கோரிக்கையை முன் வைத்து வடபகுதி மக்களின் ஆணையைக் கோரியது.
தமிழ் மக்களும் மேற்படி கோரிக்கைக்கு வரலாறு காணாத பேராதரவை வழங்கி ஆணை கொடுத்தனர்.
1977இல் தமிழீழக் கோரிக்கை ஜனநாயக வழிமுறை மூலம் நிறை வேற்ற முடியாது என் பது தெரிந்திருந்தும் தமிழ் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினர். ஏனெனில் முனைப்புப் பெற்று வந்த ஆயுதப் போராட்டம் தமிழீழத்தை வெற்றி கொள்ளும் என நம்பினர்.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்குப் பலமாக விளங்கிய ஆதரவு சக்திகளை ஒன்றிணைந்து தலைமை தாங்கி முன்செல்ல வேண்டிய ஒரு மையமாகத் திகழ வேண்டும். இதற்கு மாகாண சபையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும்.
1977இன் பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தக் கடமையைச் சரியாகச் செய்யத் தவறியமையால்தான் அரசியலிலிருந்து தூக்கி வீசப்பட்டது மட்டுமன்றி அதன் தலைவர்கள் தமிழ் மக்களிடம் செல்வாக்கு இழக்கும் நிலையும் ஏற்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணி இப்படி ஓர் அவலத்தை சந்திப்பதற்கு அவர்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையைக் கைவிட்டதும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களால் வழிநடத் தப்பட்டமையும் காரணங்களாகும்.
இப்படியான ஓர் ஆபத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழுந்துவிடக் கூடாது என்பது தான் தமிழ் மக்களின் விருப்பமாகும்.
எதிர்காலம்
தமிழ்த் தேசியக் கட்டமைப்பு என்பது 5 கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணி. இதற்குள் முரண்பாடுகள், மோதல்கள் எழுவது தவிர்க்க முடியாதது.
ஆனால் ஒரே மையத்தைச் சேர்ந்த வெவ்வேறு நபர்கள் ஒவ்வொரு கட்சியையும் தனித்தனியே கையாள்வார்கள். அவர்கள் ஒற்றுமையாகத் திட்டமிட்டு கட்சிகளை ஒற்று மைப்படவிடாமல் பார்த்துக் கொள்வார்கள்.
இது இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அன்று முதல் இன்று வரை கையாளும் ஒரு ராஜதந்திரம்.
இந்த விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மக்கள் வழங்கிய ஆணையை மனதில் கொண்டு சர்வதேச ஆதரவை சரியான முறையில் கையாண்டு முன்சென்றால் மட்டுமே நாம் எமது இலட்சியத்தை எட்டமுடியும்.
நாம் இப்போது நடத்துவது இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போர். இதில் ஒட்டுமொத்தமான தந்திரோபாயமும் நிலைமைகளுக் கேற்ற போர்த் தந்திரமும் முக்கிய மானவை. இவற்றில் எதில் நாம் பலவீனமடைந்தாலும் பெரிய பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். 1977 தொடக்கம் 2013 வரையான அனுபவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் வேண்டுகை.
















