சிவில், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை வடக்கு மக்கள் அனுபவிப்பதற்கு இராணுவம் தடையாக உள்ளது. இந்த இராணுவமயமாக்கல் செயற்பாடு தொடர்ந்துகொண்டே தான் இருக்கப்போகின்றது என்று குற்றம் சாட்டியுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான மத்திய நிலையம், இராணுவ மயப்படுத்தல் தேர்தல் செயன்முறைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தியுள்ளது என்றும் சுட்டடிக்காட்டியுள்ளது.
இருப்பினும் வடக்கின் மொத்த வாக்களிப்பு வீதமும் அதன் பெறுபேறும் இராணுவ மயப்படுத்தலுக்கு மக்கள் பணியமாட்டார்கள் என்பதையே எடுத்துக் காட்டியுள்ளது என்றும் அந்த நிலையம் மேலும் கூறியுள்ளது.
தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தினால் வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையை வெளியிட்டு வைத்த தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி பாக்கியசோதி சரவணமுத்து அங்கு மேலும் தெரிவித்ததாவது:
தேர்தர் பிரசாரங்களின் போது தேர்தல் தொடர்பான வன் முறைகளில் கடுமையான 27 சம்பவங்களையும், 57 சிறு சம்பவங்களையும், தேர்தல் தினத்துன்று கடுமையான 34 சம்பவங்களையும் 13 சிறு சம்பவங்களையும் பதிவு செய்துள்ளோம்.
இராணுவமயமாக்கல்
இராணுவ மயப்படுத்தல் வடக்கு மாகாணத்தின் சிவில், அரசியல் மற்றும் சமூக, பொருளாதார உரிமைகளை அனுபவிப்பதில் முக்கியமான தடையாக இருப்பதுடன், தொடர்ந்தும் அது இருக்கப்போகின்றது.
சிவில் பாதுகாப்புப் படை உட்பட பாதுகாப்புப் படை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், ஆளும் கட்சி வேட்பாளர்கள் நான்கு பேருக்குச் சார்பாக இராணுவம் செயற்பட்டமை ஆகியவற்றை நாமும் ஏனைய கண்காணிப்பாளர்களும் பதிவு செய்துள்ளோம்.
பொது மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இராணுவ மயப்படுத்தலின் அளவு அவர்கள் ஆற்றுகின்ற அரசியல் ரீதியான நோக்கங்களுக்கு, தேர்தல் பரப்புரைகள் மற்றும் வாக்களித்தல்கள் நடைபெற்ற சூழமைவில், ஊடுருவி நிலை நாட்டப்பட்டிருக்கின்றமையை வெளிப்பத்தியது.
இராணுவ மயப்படுத்தல் தேர்தல் செயன்முறைகளுக்குத் தெளிவாகவே குந்தகம் ஏற்படுத்தியது. எனினும் மொத்த வாக்களிப்பு வீதமும் அதன் பெறுபேறும். இராணுவ மயமாக்கலுக்கு பணிய மறுத்தமையையே எடுத்துக்காட்டியது,
போருககுப் பின்னரான நல்லிணக்கச் செயன்முறையில் முக்கிய அம்சமாகவும் முரண்பாட்டுக்கான மூலங்கள் நீடித்தல் கூடாது அல்லது மீள் உருவாக்கப்படலாகாது என்று வரையறுக்கப்பட்டவாறும் வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும் என்று அரசை வேண்டிக்கொள்கின்றோம்.
18 ஆவது திருத்தம் நீக்கப்படவேண்டும்
தேர்தலின் போது அரச வளங்கள் அப்பட்டமாகத் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன. இது சட்டத்தின் மீதான மற்றொரு அதிர்ச்சி தரும் மீறல்.
இதற்குக் காரணம் 17 ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 18 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதாகும். எனவே பொலிஸ் பொதுச் சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகச் செயற்பட, 17 ஆவது திருத்தத்தை மீள நிலைநாட்ட வேண்டும் என்று அரசை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆளுநரின் தலையீடு
தேர்தல் பரப்புரைகளின் போது வடக்கு மாகாண ஆளுநர் பங்கெடுத்தமை தொடர்பில் கரிசனை கொள்கின்றோம்.
இது ஆளுநரின் வகிபாகம் மற்றும் அதிகாரங்கள் குறித்த ஒரு சர்ச்சையையும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மீதும் பரந்த சூழமைவில் வடக்கு மாகாணத்தின் அதிகாரப் பகிர்வுகள் மீதும் தாக்கங்களை ஏற்படுத்துவதாக இருந்தது.
அரச அதிகாரிகள் சுயாதீனத்துடனும் பக்கச் சார்பில்லாமலும், பயமோ அல்லது விருப்புகளோ இல்லாமலும் நாட்டின் அரசயலமைப்பை நிலைநாட்டுவதற்கான ஒருபற்றுதியைச் சொல்லிலும் செயலிலும் வெளிக்காட்ட வேண்டும்.
இவ்வாறு செய்வதிலிருந்து தவறுபவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் முறையான செயன்முறைகளின் பின்னர் பதவியிலிருந்து அகற்றப்படுவதையும் ஏற்படுத்துவதாக அமைதல் வேண்டும்.
ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு
சில செய்தித் தாள்களுக்குத் தடையேற்படுத்தியமை மற்றும் தவறான தகவல்களைப் பிரசுரித்தமை, ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகியன தொடர்பிலும் கரிசனை கொள்கின்றோம்.
தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர்,பரப்புரைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக “உதயன்’ பத்திரிகையின் கிளிநொச்சி விநியோக நிலையம் அழிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தில் அதன் அச்சகமும் தாக்கப்பட்டது.
கருத்துப் பரிமாற்றம் நிலை நிறுத்தப்படவேண்டும் மீளவும் 17 ஆவது திருத்தத்தை வலியுறுத்துகிறோம் – என்றார்.
















