பொதுநலவாய அமர்வில் மன்மோகன் சிங் பங்குபற்றினால் மகிந்த ராஜபக்சவின் மனித உரிமை மீறல்களை இந்தியா ஏற்றுக் கொள்வதற்கு சமனாகும் என சர்வதேச மன்னிப்பு சபையில் இந்திய சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி ஜி. அனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது என பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை இந்தியாவில் மேற்கொண்ட எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு 35 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இதுவரை ஆதரவை வெளியிட்டுள்ளனர் என தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பிரசாரம் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் நவம்பர் மாதத்தில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு ஆரம்பமாகும் வரை நடத்தப்படவுள்ளது.
எனவே இலங்கையில் இருந்து இந்தியா விலகியிருப்பது மகிந்த ராஜபக்சவின் மனித உரிமை மீறல்களுக்கு முடிவை கொண்டு வரும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா பொதுநலவாய நாடுகளில் பங்கேற்றால் மன்மோகன் சிங் மகிந்த ராஜபக்சவின் மனித உரிமை மீறல்களை ஏற்றுக் கொள்வதற்கு சமனாகும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபையில் இந்திய சிரேஸ்ட நிறைவேற்று அதிகாரி ஜி அனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பு மகிந்த ராஜபக்சவுக்கு செல்லுமானால் அது பொதுநலவாய நாடுகளின் விழுமியங்களுக்கு எதிரான செயலாகவே இருக்கும் என்றும் அனந்தபத்மநாதன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் மன்மோகனின் பங்கேற்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்தியாவில் தேர்தல் காலமாக உள்ளமையினால் பெரும்பாலும் மன்மோகன் மாநாட்டைப் புறக்கணிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















