பொதுநலவாய மாநாட்டால் பெரும் சிக்கலில் இலங்கை

meetingசர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை யார் புறக்க ணிக்கிறார்கள்? யார் புறக்கணிக்க வில்லை? என்பதாக இருக்கக் கூடாது. மாறாக, இது போன்ற தொரு புறக்கணிப்பை பற்றி ஏனையோர் சிந்திக்கும் விதத்தில் நம் நாட்டின் மனித உரிமைகளின் நிலை இருப்பதை பற்றியே நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான நாள் நெருங்கி வருகின்றது.அதனால் மாநாடு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன. குறிப்பாக இந்த மாநாட்டில் பங்கேற்க கனடாவின் பிரதமரை அனுப்பாமல் இருக்கும் முடிவை கனடா எடுத்துள்ளமை பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கனேடிய பிரமர் ஸ்டீபன் ஹர்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழ்காணும் விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது:

2013 ஆண்டில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்ட போது, அந்நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக நிலவி வந்த மோசமான நிலையை சீர் செய்வதற்கும், நல்லிணக்கத்தை கட்டியயழுப்புவதற்கும், பொறுப்புக் கூறல் செயற்பாட்டில் முன்னேற்றம் அடைவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என கனடா எதிர்பார்த்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு நடைபெறவில்லை

கனடா பங்கேற்காது

போரின் போதும், அதன் பின்பும் மோசமான விதத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டும் சர்வதேசம் ஏற்றுள்ள மானுட விழுமியங்கள் மற்றும் பொறுப்புக் கூறலைப் புறக்கணித்தும் வரும் இலங்கையின் போக்கைக் கனடாவால் ஏற்க முடியாது. மேலும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிராக நம்பிக்கையில் லாத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமையையும் கனடாவால் ஏற்க முடியவில்லை. அத்துடன் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல், அவர்களைக் கைது செய்தல், சிறுபான்மை இனத்தவரைத் துன்புறுத்தல், காணாமால் போதல்கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக மேற்கொள்ளப்படும் கொலைகள் போன்றவையும் கனடாவைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. இவைகள் மூலம் பொதுநலவாய நாடுகளின் அடிப்படையான பெறுமானங்களை நிலை நிறுத்தும் விடயத் தில் இலங்கை தோல்வியையே சந்தித்துள்ளமை தெளிவாகின்றது. இவைகளின் அடிப்படையில் இலங்கையில் கொழும்பு நகரத்தில் நடைபெறவுள்ள 2013 ஆண்டு பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடாவின் பிரதமர் என்ற தோரணையில் பங்கேற்பதை நான் தவிர்த்துக் கொள்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார். கனடாவின் இந்த நிலைப்பாடு இலங்கை அரசை அதிருப்திக் கொள்ளச் செய்துள்ளதுடன் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை அரசியல் மயப்படுத்துவதற்கான ஓர் எத்தனிப்பு என இதை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சாடியுள்ளார்.

புறக்கணிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டும்

இத்தருணத்தில் இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக சிந்தித்தபடி கனடாவைச் சாடுவதை விடுத்துக் கனடாவின் இந்த முடிவில் பொதிந்துள்ள யதார்த்தமான விடயத்தின் பக்கம் தன்னுடைய கவனத்தைச் செலுத்துவது பயன் தரும். இலங்கையர் என்ற அடிப்படையில் நம்முடைய மனோபாவம் நமது நாட்டில் நடத்தப்படும் இது போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை யார் புறக்கணிக்கிறார்கள்? யார் புறக்கணிக்கவில்லை? என்பதாக இருக்கக் கூடாது. மாறாக, இது போன்றதொரு புறக்கணிப்பை பற்றி ஏனையோர் சிந்திக்கும் விதத்தில் நம் நாட்டின் மனித உரிமைகளின் நிலை இருப்பதை பற்றியே நாம் அதிகம் கவலை கொள்ள வேண்டியுள்ளது.

கனடாவின் இந்த முடிவு பற்றிய விமர்சனங்களைச் செய்து கொண்டிருப்பதற்கே இலங்கை அரசு திட்டம் இடு மெனில், அதற்கு முன் நம் நாட்டின் மனித உரிமைகள் உள்ள மோசமான நிலையைப் பற்றி அக்கறை கொள்ளும் ஒரே நாடு கனடா மட்டும் அல்லவென்ற உண்மையை நம் அரசு முதற்கண் உணர வேண்டும்.

பிரிட்டனின் நிலைப்பாடு

மேற்படி மாநாட்டில் பங்கேற்பதற்குப் பிரிட்டன் முடிவு செய்துள்ள போதிலும், அது மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டதொரு முடிவு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். 2011 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் இலங்கையில் மர்மான விதத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜை ஒருவரான குரம்ஷேக்கின் கொலை தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையைச் சுட்டிக்காட்டி மாநாட்டைப் பிரிட்டன் புறக்கணிக்க வேண்டும் என எலிஸபெத் இராணியார் பலமாக வலியுறுத்தி வருகின்றார்.

இதே வேளை, இலங்கை விடயத்தில் ஒரு வித கோழைத்தனமான, நிலையற்ற போக்கையே பிரிட்டன் கடைபிடிப்பதாகப் பிரிட்டனின் நாடாளுமன்றக் குழுவொன்று குற்றம் சாட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடத்துவதற்கு முன், அந்நாட்டில் உள்ள மனித உரிமை தொடர்பான நிலைகளை சீர் செய்வதை ஒரு நிபந்தனையாக இலங்கை அரசு இட்டிருக்க வேண்டும் எனவும், இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களின் அடிப்படையில் பிரிட்டன் இதை விடச் சிறந்த, கொள்கைப்பிடிப்பு மிக்கதொரு தீர்மானத்தை எடுத்திருக்க வேண்டும் எனவும் அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பிரிட்டன் பங்கேற்பதை இலங்கையின் தற்போதையை நடவடிக்கைகளை பிரிட்டன் அங்கீகரிப்பதாக இலங்கை பொருள் செய்யக் கொள்ளக் கூடாது என பிரிட்டன் அரசு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

மனித உரிமை விடயங்கள், சட்டத்தின் ஆளுகை, நீதித்துறையின் சுயாதீனம் போன்ற விடயங்கள் தொடர்பான இலங்கை அரசின் போக்குப் பற்றி தான் கவலை கொள்வதாக இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஜோன்ரன்கின் சில வாரங்களுக்கு முன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். அத்துடன் இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தனது நாடு முடிவு செய்ததற்கான காரணம் அது உலகில் எங்கு நடைபெறுகின்றது என்பதை விட பொதுநலவாயக் கட்டமைப்பின் அந்த நிகழ்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் நிலைப்பாடேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த மாநாடு காரணமாக மாநாட்டின் போதும் அதன் பின்பும் இலங்கை மீது விழும் சர்வதேச பார்வையானது, பொதுநலவாய நாடுகளின் முக்கியமானதொரு அம்சமான நல்லாட்சியை இலங்கை செயல் வடிவத்தில் காட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கைக்கு ஏற்படுத்துவதற்கான ஒரு காரணியாக அமையும் என்றும், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு ஆகியவை தொடர்பாகக் காத்திரமான முன்னேடுப்புக்களை இனியாவது இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியுடனேயே பிரிட்டனின் டேவிட் கமரூன் இம்மாநாட்டில் பங்கேற்க வருகின்றார் என்றும் ரன்கின் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முடிவு இன்னமும் இல்லை

இலங்கையில் நடைபெறும் பொது நலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்ற விடயம் இந்தியாவுக்கும் ஒரு பெரும் பிரச்சினையாகவே இந்த நிமிடம் வரை இருந்து வருகின்றது. மனித உரிமைகள் தொடர்பாக இலங்கையின் போக்கைக் கண்டிக்கும் விதத்தில் மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற உள் நாட்டு அழுத்தம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. இறுதியாக கிடைத்த செய்திப்படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்றே தெரிகின்றது.
உலகின் முக்கிய பல நாடுகளில் ஏற்பட்டு வரும் இந்த குழப்பமான சூழலை அவதானிக்கும் போது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் உட்பட்ட ஏனைய விடயங்களாவன பொதுநலவாய நாடுகள் மாநாட்டுடன் மட்டும் தொடர்பான அல்லது அதனுடன் முடிந்து போகும் ஒரு பிரச்சினை அல்ல என்பது தெளிவாகின்றது.
சில வாரங்களுக்கு முன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பிரகடனத்தில், 2014 மார்ச் மாதத்துக்கு முன் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஆகிய விடயங்களில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையாத பட்சத்தில் சர்வதேச விசாரனை ஒன்றை சந்திக்க அது தயாராக வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இப்பிரகடனமானது. ஐநா சபை இலங்கைக்கு எதிராக இரு தீர்மானங்களை நிறை வேற்றி அவற்றை இலங்கை பொருட்படுத்தாமல் அசட்டையாக இருக்கும் பின்னணியிலேயே விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதன் போது ஐ.நா சபை புதிதாக எதையும் இலங்கைக்குக் கூறவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் வைத்த பரிந் துரைகளைச் செயற்படுத்துமாறே ஐ.நா இலங்கை அரசை வலியுறுத்தியது.

இலங்கைக்கான வாய்ப்பு நய வஞ்சகத்தின் உச்சம்

ஒரு நாடு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்தளவு உள்நாட்டு வெளிநாட்டு விமர்சனங்களுக்கு இலக்காகி இருக்கும் போதே பொதுநலவாய நாடுகள் மாநாடு போன்றதொரு முக்கிய நிகழ்வுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு அதற்கு வழங்கப்பட் டிருக்கும் அசாதாரண நிலை பற்றி உலக நாடுகள் பொதுவாக துனுக்குற்றுள்ளதோடு மிகுந்த அவதானிப்புடனேயே அதனை கண்காணித்து வருகின்றன.

இலங்கைக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டாம் எனப் பொதுநலவாய நாடுகளின் வெளி நாட்டமைச்சர்களுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தே வருகின்றது. இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் பணிப்பாளர் ப்ரேட் எடம்ஸ் பெரும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்பட்டுள்ள ஒரு நாட்டுக்குப் பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளமை பெரும் முறைகேடான ஒரு நடவடிக்கை மட்டுமன்றி ஜனநாயக கோட்பாடுகளை மதிக்காத. தன்னுடைய குற்றச் செயல்களுக்கு மனம் வருந்தாத ஓர் அரசுக்கு இந்த வாய்ப்பை அளித்திருப்பது நயவஞ்சகத்தின் உச்சமாகும் என்று சாடியுள்ளார்.

மாநாட்டை யார் புறக்கணிப்பார்கள் அல்லது பங்கேற்பார்கள் என்பது இலங்கையரான நமக்கு ஒரு பெரும் பிரச்சினை அல்ல. அது தொடர்பான தீர்மானங்கள் அந்தந்த நாடுகளின் உரிமையாவதோடு அதை நாம் மதிக்க வேண்டும். பிரிட்டனின் கூற்றுப் படி தான் இம்மாநாட்டில் பங்கேற்பதை இலங்கையின் செயற்பாடுகளுக்கான அங்கீகாரமாக இலங்கை அரசு கொள்ளக் கூடாது என்பது தெளிவாகின்றது. மேலும் பிரிட்டன் இதில் பங்கேற்பதன் மூலம் வேறு சில விடயங்களை இலக்கு வைத்திருக்கவும் இடமுண்டு. அதாவது மாநாட்டைப் புறக்கணிக்காமல் அதில் பங்கேற்று, அந்த பங்கேற்பின் உரிமை ஊடாக மனித உரிமை மற்றும் ஏனைய விடயங்களுக்காக அதிக அழுத்தத்தை இலங் கைக்கு கொடுக்க பிரிட்டன் எண்ணியிருக்கலாம்.

இதே வேளை, இலங்கையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மாநாட்டைப் புறக்கணிக்கும் கனடாவின் முடிவும் போற்றத்தக்கதே. கனடாவின் இந்த நடவடிக்கையை இலங்கைக்கு எதிராக அந்நாடு மேற்கொள்ளும் ஓர் அரசியல் தாக்குத லாக இலங்கை அர்த்தம் செய்வது விவேகமாகாது. கனடாவின் இந்த நடவடிக்கையானது அந்நாடு உலகில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக மேற்கொண்டு வரும் பல் வேறுபட்ட நடவடிக்கைகளின் ஓர் அங்கம் மாத்திரமே. கனடாவின் இது போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் என்றும் போற்றியும் பாராட் டியும் வந்துள்ளமை யாவரும் அறிந்ததே.

கனடாவின் நடவடிக்கை பாராட்டுதற்குரியது

உலகில் மனித உரிமையை நிலை நாட்டும் விடயத்தில் கனடாவின் பங்களிப்பு மிகவும் பிரசித்தம் பெற்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவாக இன்று செயற்பட்டு வரும் சர்வதேச சமாதானப் படை கனடாவின் ஒரு முன்மொழிதலேயாகும். அதே போன்று கறுப்பர்களுக்கு வேற்றுமை காட்டும் தென்னாபிரிக்காவின் போக்கை கண்டித்து 1980 ஆண்டில் அந்நாட்டுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற யோசனையும் கனடாவே ஐ.நா சபையில் முன்வைத்தது.

மேலும் 1996 ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தடன் இணைந்து பர்மாவுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை கொண்டு வரும் விடயத்திலும் கனடாவே முன்னின்று செயற்பட்டது. அதைத் தொடர்ந்து 2007 ஆண்டில் பெலாரஸ்ஸில் பெரும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்ற போதும், சிரிய அரசு தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராகவே கொடுமைகளைக் கட்ட விழ்த்த போதும், ஈரானின் கடந்த பத்தாண்டு கால தெளிவற்ற மனித உரிமைக் கோட்பாடுகளின் போதும் அந்நாடுகளுக்கு எதிராக ஐ.நாவை நடவடிக்கைகள் எடுக்க ஊக்குவிக்கும் விடயத்தில் கனடாவே முன்னின்றது. அது மட்டுமின்றி சர்வதேசக் குற்றச் செயல் நீதிமன்றக் கோட்பாட்டையும் கனடாவே முன் மொழிந்ததோடு அது அமைக்கப்பட்டதன் பின் அதன் முதல் தலைவராகச் சில காலம் பணியாற்றிய நீதியரசர் பிலிபே கர்­ம் ஒரு கனேடியரே ஆவார்.

இந்தளவு சாவதேச நன்மதிப்பை பெற்றுள்ள கனடா போன்றதொரு ஒப்பற்ற தேசம் நம் நாட்டில் நடைபெற விருக்கும் ஒரு சர்வதேச வைபவத்தில் பங்கேற்க மறுத்துள்ளமையை தான் நம்முடைய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அது பொருட்படுத்த வேண்டிய விடயமே அல்ல என்று ஒதுக்கித் தள்ளியுள்ளார். உண்மையில் இது ஒரு விவேகமான, செல்லுபடியாகக் கூடிய ஒரு நிலைப்பாடு அல்ல. மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக கனடாவின் அர்ப்பனிப்புகளை இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட்ட பல உலக நாடுகள் வானளவு மெச்சும் போது பேராசிரியர் அவர்கள் கனடாவைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்கு முன் இரு முறை சிந்தித்துப் பார்த்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

தென்னாபிரிக்காவும் சிந்திக்க வேண்டும்

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான விடயம் இவ்வாறு சர்ச்சைக்குரியதாக இருக்கும் நிலையில் தென்னாபிரிக்கக் குடியரசும் இது பற்றி நன்றாகச் சிந்தித்து ஒரு முடிவை எடுப்பதே பொருத்தமாகும். தன்னுடைய நாட்டு மக்க ளில் ஒரு சாராருக்கு அநீதிகளை இழைத்த வண்ணம் தென்னாபிரிக்கா அழிவின் பாதையில் நடை போட்டுக் கொண்டிருந்த போது உரியதருணத்தில் ஐக்கிய நாடுகள் சபை பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்ததன் பயனாகத் தென்னாபிரிக்கா சுதாரித் துக் கொண்டு தன்னை திருத்திக்கொண்டது. அதன் வெளிப்பாடாக இன்று அந்நாடு நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சகவாழ்வு, அபிவிருத்தி போன்ற அம்சங்களில் ஒரு சிறந்த முன்மாதிரியாக உலகில் திகழ்கின்றது. நிலைமை அவ்வாறிருக்க தன்னுடைய கடந்த காலத்தை மறந்து விட்டது பொல தென்னாபிரிக்கா நடந்து கொள்ளாமல் தன்னுடைய கடந்த காலத்துடன் இலங்கையின் நிகழ்காலத்தை ஒப்பிட்ட வண்ணம், பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக நல்லதொரு முடிவை அந்நாடு எடுக்க வேண்டும்.

இதேவேளை, இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேசம் குறை கூறும் போதெல்லாம், குறுகிய அரசியல் இலாபம் கருதி அதை வெளிநாட்டு சதி, அது, இது என்றெல்லாம் கூறியபடி அதற்கு அரசியல் முலாம் பூசுவதற்கு முயற் சிப்பதை நம் அரசும் இனியேனும் விட்டு விட நம் நாட்டுக்கு எதிரான கடந்த கால ஐ.நா தீர்மானங்கள் முதல், தற்போதைய பொதுநலவாய மாநாடு தொடர்பாக இன்று ஏற்பட் டுள்ள சர்ச்சைக்குரிய நிலை வரை பல்வேறுபட்ட விதங்களில் இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வந்தாலும் அவை அனைத்திலும் பொதிந்துள்ள செய்தி ஒன்றேயாகும். மேலும் இந்த அழுத்தங்களின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதையும் அரசு உணர வேண்டும்.

காதுகளில் விரல்களை வைப்பதனால் கோசங்கள் குறைந்து விடும், மறைந்து விடும் என எண்ணுவது விவேகமாகாது. மாறாக, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வுகளைக் காண்பதன் மூலமே கோசங்களையும் எதிர்ப்புக் களையும் வெற்றி கொள்ள முடியும்.

Tags: ,

Leave a Reply