புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு அடுத்த வருடம் ஜூலை மாதம் மோரீஷஸில் நடைபெறவுள்ளது.
சென்னை ஆசியவியல் நிறுவனம், மோரீஷஸ் நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இது குறித்து சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல் கூறியது:
ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இப்போதும் கல்வி, வேலை, ஆய்வு, வணிகம் போன்ற பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்காக அமெரிக்கா, வளைகுடா நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
இவ்வாறு சென்ற தமிழர்களின் வாழ்வியல் நிலை, பண்பாட்டுக் கூறுகள் போன்றவை புலம்பெயர்ந்து சென்ற நாடுகளில் அந்த மக்கள் மத்தியில் எவ்வாறு உள்ளன என்பதை விரிவாக விவாதிக்கும் நோக்கிலும், அவற்றைப் பதிவு செய்து ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நோக்கிலும் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
2014-ஆம் ஆண்டு ஜூலை 16, 17, 18 ஆகிய திகதிகளில் மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு அறிஞர்கள் கலந்து ஆய்வுரைகள் வழங்க உள்ளனர். உலக வங்கியின் மூத்த ஆலோசகரும், யுனெஸ்கோ நிறுவனத்தின் இயக்குநருமான ஆறுமுகம் பரசுராமன் மாநாட்டு அமைப்புக் குழுவின் தலைவராக உள்ளார்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஈரான், ஈராக், அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இதில் பங்கேற்க உள்ளனர் என்றார்.
















