ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலம் தமிழர் மனங்களை வெல்லலாம்

sam-vikiஒன்றுபட்டு நின்று வென்று காட்டிய போது, மிரண்டு போன சிங்கள பெளத்த பேரினவாதச் சக்திகள் அமைச்சுப் பதவிக்கான மோதல் தொடங்கியதும் ஆறுதல் அடைந்தன.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ஏற்பட்டுள்ள முரண்பாடுகள்தான் அண்மை நாள்களில் முக்கியமாகப் பேசப்படும் விவகாரமாக அமைந்திருந்தன. அதற்குக் காரணம், இந்த முரண்பாடுகள், தமிழ் மக்கள் மத்தியில், விசனத்தையும், கவலைகளையும் ஏற்படுத்தியதால்தான்.

மேலதிக ஆசனப் பகிர்வில் தொடங்கிய இந்த இழுபறி, அமைச்சர்கள் நியம னத்தின்போது, உச்சக்கட்டமாக வெடித்தது. இதன் காரணமாக, ஒருவருக்கு ஒருவர், குற்றம்சாட்டிக் கொண்டனர். அறிக்கைகளாலும், ஊடகங்களில் செய்திகளைக் கசிய விட்டும், மோதிக்கொண்டனர்.

இவற்றையயல்லாம் பார்த்த போது, வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களிடம் மட்டுமன்றி, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும், ஒருவித தவிப்பு ஏற்பட்டதை உணர முடிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது, இலங்கையில் தமிழர்களின் அரசியல் பயணத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாறியுள்ள போதிலும், அதற்குள் முரண்பாடுகள் வெடிப்பதும், இயல்பானதாகி விட்டது. பெரும்பாலும் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னருமான காலகட்டங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கலகம் வெடிப்பது வழக்கமானதே.

தேர்தலுக்கு முன்னர், போட்டியிடுவதற்கான வேட்பாளர் ஒதுக்கீட்டில், முரண்பாடுகள் நிலவும். அது போலவே, தேர்தலில் வெற்றி பெற்றதும், இத்தகைய நெருக்கடிகள் எழும்பும். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் தொடங்கிய சர்ச்சை, வேட்பாளர் ஒதுக்கீடுவரை தொடர்ந்தது. தேர்தல் முடிந்த பின்னர், போனஸ் ஆசனங்களைப் பகிர்ந்து கொள்வதில் தொடங்கிய முரண்பாடு, ஓரளவுக்கு இலகுவாகத் தீர்க்கப்பட்டாலும், அமைச்சர்கள் நியமனத்தில் ஏற்பட்ட சிக்கல், பெரிதாக வெடித்தது. நான்கு அமைச்சுப் பதவிகளை, ஐந்து கட்சிகளுக்கு இடையில் ஐந்து மாவட்டங்களுக்கு இடையில் விருப்பு வாக்குகள், கட்சிகளின் விருப்பத் தெரிவுகள், என்பவற்றுக்கு அப்பால் திறமைக்கு முன்னுரிமை கொடுத்து பகிர்வு செய்வது மிகவும் சிக்கலான காரியம்.இத்தகையதொரு சிக்கலான சூத்திர அமைப்பின் மூலம், ஒரு போதும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்த முடியாது.

இந்த உண்மையை, சாதாரண மக்களாலேயே உணர முடிந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், புரிந்து கொள்ளத் தவறியமை ஆச்சரியமானதே. இந்தப் புரிதல், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர்களுக்கு இருந்த போதிலும், அரசியல் நலன் சார்ந்து அவர்கள் காய்நகர்த்த முற்பட்டதால் தான், நகைப்புக்கிடமான பல நிகழ்வுகள் நடந்தேறின.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் சின்னம்

இந்த முரண்பாடுகளின் உச்சமாக, ஐந்து கட்சிகளும் பொதுவேட்பாளராக நிறுத்திய, முதலமைச்சர் விக்னேஸ்வரனும், தேவையற்ற விமர்சனங்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளானார். அத்தகைய விமர்சனங்கள், ஒரு இலட்சத்து 32 ஆயிரம் விருப்பு வாக்குகளின் மூலம், தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மரபு சாராத ஓர் அரசியல் தலைவருக்கு எத்தகைய அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என்று உணர்ந்து கொள்வது சிரமமானதல்ல.

பொதுவேட்பாளராக, நிற்கச் சம்மதித்த பின்னர், செவ்வி ஒன்றின் போது கருத்து வெளியிட்ட முதல்வர் விக்னேஸ்வரன், தனக்கு அரசியல் மூலம் நல்ல பெயர் கிடைக்காது என்றும், இருக்கின்ற பெயர் தான் கெட்டுப்போகும் என்றும் குறிப்பிட் டிருந்தார். அது உண்மை என்பதை அமைச்சர்கள் நியமனத்தை அடுத்து எழுந்த விமர்சனங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. சொந்த அரசியல் நலன்களுக்கு அப்பால் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை நகர்த்தியாக வேண்டும் என்ற தேவை இருந்த போதிலும், அதைப் பலரும் கருத்தில் எடுக்காதது நிச்சயம் கவலைக்குரிய விடயம். மாகாணசபையிடம் என்ன அதிகாரம் உள்ளது, என்று விமர்சித்தவர்களே, அமைச்சர் பதவிக்காக மோதிக் கொண் டது தான் ஆச்சரியம்.

அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டிக்காக, முள்ளிவாய்க்காலைப் பயன்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவு, ஒரு மோசமான முன்னுதாரணம். ஏனென்றால், முள்ளிவாய்க்கால் என்பது தமிழினத்தின் பேரவலத்தின் அடையாளம். அழிக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசிய சின்னம். குறுகிய அரசியல் நலனுக்காக, அதனைப் பயன்படுத்திக் கொள்ள எடுக்கப்பட்ட முயற்சியானது, முள்ளிவாய்க்காலில் சாவைத் தழுவிய ஆயிரக்கணக்கான மக்களை அவமதிக்கும் செயல். பதவிச் சண்டைக்காக, முள்ளிவாய்க் காலைப் பயன்படுத்திக் கொண்டமை தவறே.
மன்னார் ஆயரின் தலையீட்டினால், முள்ளிவாய்க்கால் இத்தகைய பெரும் அவப்பழியில் இருந்து தப்பியது, ஆனால் முழுமையாக அல்ல.

சுமுகத்துக்குத் திரும்பியது நிலமை

எவ்வாறாயினும், தற்போது நிலைமைகள் ஓரளவுக்கு சுமுக நிலையை எட்டியுள் ளதாகத் தெரிகிறது.
ஆனால், இந்த சுமுகநிலை நிரந்தரமானதா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இந்தளவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு ஆறுதலளிக்கும் விடயம் என்ன வென்றால், கூட்டமைப்பின் சார்பில் தெரிவான எந்தவொரு உறுப்பினரும் தனித்து செயற்படப் போவதாக தீர்மானிக்கவோ, அறிவிக்கவோ இல்லை. கூட்டாகச் செயற்படுவோம், மாகாண நிர்வாகத்தை ஒன்றாக செயற்படுத்துவாம் என்றே, அனைவரும் கூறியுள்ளனர்.

இது ஒன்றுதான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் பலவீனமும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எல்லாவற்றுக்கும், அதற்கு வெளியே வந்து எதையும் சாதிக்க முடியாது என்பது நன்கு தெரியும். எனவே, எந்தக் கட்சியாலும் பிரிந்து போக முடியாது. இது கட்சிகள் அனைத்தினதும் பலவீனம். இந்தப் பலவீனம் இருப்பதால் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் ரீதியாக பலமான நிலையில் இருக்க முடிகிறது.

Tags: ,

Leave a Reply