நமது மகள்களுக்கான நீதி எப்போது கிடைக்கும் பிரதமரே? – ராகுல் காந்தி கேள்வி

கத்துவா, உன்னாவ் பகுதிகளில் கற்பழிக்கப்பட்ட நமது பெண்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடியை அந்த நீதி எப்போது கிடைக்கும்? என ராகுல் காந்தி வினவியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்ககோரி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.

இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொடுமைகளுக்கு மத்திய – மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்த சம்பவங்களை கண்டித்து மத்திய மந்திரிகள் மேனகா காந்தி, வி.கே. சிங் ஆகியோர் கருத்து வெளியிட்டனர். இருப்பினும், பிரதமர் இவ்விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கிடையில், டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்புவிழாவில் பங்கேற்று உரையாற்றியபோது இதுதொடர்பாக மவுனம் கலைத்த பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இருநாட்களாக விவாதத்துக்குள்ளாகி வரும் சம்பவங்கள் நாகரிகம் அடைந்த மனித சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. ஒரு நாடாகவும், ஒரு சமுதாயமாகவும், இதற்காக நாம் அனைவரும் வெட்கப்படுகிறோம்.

எந்த குற்றவாளியையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். முழுமையான நீதி நிலைநாட்டப்படும், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், நமது மகள்களுக்கான நீதி எப்போது கிடைக்கும் பிரதமரே? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘அன்புக்குரிய பிரதமர் அவர்களே! உங்களது நெடிய மவுனத்தை கலைத்தமைக்காக நன்றி! நமது மகள்களுக்கான நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளீர்கள். அது எப்போது? என இந்த நாடு அறிந்து கொள்ள விரும்புகிறது. பதில் கூறுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!