ஜாமீன் வழங்க ரூ.7½ லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி கைது

ஜாமீன் வழங்க ரூ.7½ லட்சம் லஞ்சம் வாங்கிய நீதிபதி உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஐதராபாத்தில் மெட்ரோ பாலிட்டன் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதியாக இருந்தவர் நாம்பள்ளி எஸ்.ராதா கிருஷ்ணமூர்த்தி.

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரிடம் எம்.டெக். மாணவர் தத்துவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இவர் போதை மருந்து கடத்தல் தடுப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவருக்காக வக்கீல்கள் கே.சீனிவாசராவ், சதீஷ்குமார் ஆகியோர் நீதிபதி ராதாகிருஷ்ண மூர்த்தியிடம் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தனர். இதை ஏற்று மாணவர் தத்துவை நீதிபதி ராதாகிருஷ்ண மூர்த்தி ஜாமீன் வழங்கினார்.

2 வக்கீல்கள் மூலம் நீதிபதி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜாமீன் அளித்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக வக்கீல் டி.ஸ்ரீரங்கா ராவ் என்பவர் ஆந்திர ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். இது பற்றி ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நீதிபதி ராதாகிருஷ்ண மூர்த்தி இருகட்டமாக ரூ.7½ லட்சம் பெற்றது தெரிய வந்தது. மாணவரின் தாயார் தனது நகைகளை அடகு வைத்து இந்த பணத்தை கொடுத்துள்ளார். வக்கீல்கள் சீனிவாச ராவ், சதீஷ்குமார் ஆகியோர் இந்த பணத்தை நீதிபதியிடம் கொடுத்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஐகோர்ட்டு அனுமதி பெற்று ஆல்வால் பகுதியில் உள்ள நீதிபதியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில் நீதிபதி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இதையடுத்து நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணமூர்த்தி, வக்கீல்கள் சீனிவாச ராவ், சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து நீதிபதி உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

3 பேரையும் வருகிற 26-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.