பொதுநலவாய உச்சி மாநாட்டால் பயணிகள் விமானசேவை பாதிப்பு; கூறுகிறது சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை

lk-airlineகொழும்பில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ள காலப் பகுதியில் இலங்கைக்கான பயணிகள் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் சி.நிமலசிறி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

பொதுநலவாய மாநாட்டுக்காக முக்கிய பிரமுகர்களின் விமானங்கள் வரும்போது, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை முடிந்தளவில் குறைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும்.

மாநாட்டின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில், முக்கிய பிரமுகர்களின் விமானங்களின் வருகைக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

அதனால், திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம். எனினும் அத்தகைய பாதிப்புகளை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பெரும்பாலான, அரச தலைவர்கள் குறிக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள் மாநாட்டுக்காக வருகை தரலாம் என்பதால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த நெருக்கடிகள் மாநாடு முடிந்து அவர்கள் புறப்பட்டுச் செல்லும் வரை நீடிக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நாளாந்தம் வரும் பயணிகள் விமானங்களை விட மேலதிகமாக 35 வரையிலான விமானங்கள் மாநாடு இடம்பெறும் சமயத்தில் வரக்கூடும்.

சில நாடுகளின் தலைவர்கள் தமது சொந்த விமானங்களில், பாதுகாப்பு விமானங்களின் துணையுடன் வரக்கூடும். சில தலைவர்கள் பயணிகள் விமானங்களிலும் வருவர்.

முக்கிய பிரமுகர்கள் வரும் விமானங்களால், கட்டுநாயக்க விமான நிலையத் தரிப்பிடங்கள் நிரம்பினால், ஏனைய விமானங்கள் மத்தல மற்றும் இரத்மலான விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும்.

பெரும்பாலான வெளிநாட்டுத் தலைவர்கள் சொந்தமான சிறப்பு விமானங்களிலேயே வருவர் என்பதால், அதிகளவில் தனியார் விமானங்கள் கட்டுநாயக்க வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து சகல அரச தலைவர்களுக்கும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது. அவர்கள் அதற்குப் பதிலளிப்பார்கள்.-என்றார்.

Tags: ,

Leave a Reply