இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள், சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு புதுவை உப்பளம் கோலாஸ் நகரிலுள்ள பிஎஸ்என்எல் நிறுவன செல்போன் டவரில், தமிழ் அமைப்புகளை சேர்ந்த வாலிபர்கள் 7 பேர் ஏறி திடீரென போராட்டம் மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சுமார் 400 அடி உயரமுள்ள டவரில் 100 அடி உயரத்திற்கு சென்று இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது காங்கிரஸ் கட்சி கொடியை தீவைத்து கொளுத்தி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் உப்பளம் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிசார் மற்றும் அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று 7 பேரையும் கீழே இறங்குமாறு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து மதியம் 12 மணிக்கு டவரில் இருந்து கீழே இறங்கிய போராட்டக் குழுவினரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
















