இலங்கையில் குண்டுகள் வெடிப்பது நிறுத்தப்பட்டுள்ளபோது ஜெனிவாவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை திறந்து வைத்து அங்கு பேசும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் பேசுகையில்,
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னர் நாட்டில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவமோ, பயங்கரவாத செயலோ இடம்பெறவில்லை. ஆனால் இது பற்றி யாரும் கதைப்பதில்லை. இதன்காரணமாக இந்த சம்பவங்களை மக்கள் மறக்கின்றார்கள். அதுவும் நன்மைக்குத் தான்.
30 வருடகாலம் யுத்ததால் பாதிக்கப்பட்ட நாட்டை 3 வருடத்தில் அபிவிருத்தி என்ற சவாலை ஏற்றுக் கொண்டோம். அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி வருகிறோம். உலகில் வேற எந்த நாட்டிலும் இப்படியான அபிவிருத்தி இடம்பெற்றிருக்காது.
அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் இலங்கையின் இன்றைய நிலையை நேரில் பார்க்க முடியும்.
நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து 2005ஆம் ஆண்டுவரை தேர்தல் காலங்களில் முன்பிருந்த தலைவர்கள் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கினார்கள்.
பாதை அமைத்து தருவதாக சொன்னார்கள், சுகாதாரம், கல்வி, சமாதானம் பெற்றுத் தருவதாக என பல தேர்தல் பிரச்சாரங்களை செய்தனர்.
ஆனால் அதை எல்லாம் இன்று நாங்கள் மக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.
இந்த நாட்டு மக்களுக்கு சமாதானத்தை பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தோம். அதன்படி சமாதானத்தை பெற்றுக் கொடுத்துள்ளோம்.
எனவே இனி தேர்தல் பிரச்சாரத்தில் சமாதானம் பெற்றுத்தருவதாக யாரும் வாக்குறுதி கொடுக்க முடியாது.
நெடுஞ்சாலைகள் பற்றியும் யாரும் பேச முடியாது. அதனையும் மக்களுக்கு செய்து கொடுத்துள்ளோம். எனவே நெடுஞ்சாலைகளும் வாக்குறுதி பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் பெற்றுத்தருவதாக கூறி வாக்கு கேட்டன். அதனையும் நான் வழங்கி விட்டேன். 35 – 40 வீதமான வழங்கப்பட்டிருந்த மின்சாரம் இன்று 95 வீதமான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்திலும் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்பு ஒரு வைத்தியசாலைக்கு 5-10 வைத்தியர்களே இருந்தனர். இப்போது 125-130 வரையான வைத்தியர்கள் கடமையாற்றுகின்றனர்.
இந்த வருட முடிவில் நாட்டின் அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விடும்.
ஆனாலும் நாட்டின் அபிவிருத்தி பற்றி சிலர் எங்களுக்கு எதிராக பேசுகின்றனர்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இது சரியான சந்தர்ப்பம் இல்லை என்கின்றனர். இந்த அபிவிருத்தியால் பிரியோசனம் இல்லை என்கின்றனர். எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. சிலருக்கு தாய் நாட்டின் மீது பற்றில்லை.
இந்த நெடுஞ்சாலையை சிறப்பாக அமைப்பதற்கு கடன் வழங்கிய சீனாவுக்கும், சிறப்பாக அமைத்தவர்களுக்கும் நாட்டு மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.
















