நிலவின் தென்துருவத்தை அடையும் முதல் நாடு: சாதிக்குமா இந்தியா?

நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை அனுப்பி ஆய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை. அந்த முயற்சியில் இந்தியா களமிறங்கியது. இதற்காக சந்திரயான் – 2 விண்கலத்தை 2019-ம் ஆண்டு இந்தியா நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் நிலவில் தரையிறங்க முயற்சித்தபோது நிலவின் மேற்பரப்பில் மோதியது. இதனால், நிலவின் தென்துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவின் முதல் முயற்சி தோல்வியடைந்தது. ஆனாலும், முயற்சியை கைவிடாத இந்தியா கடந்த மாதம் 14ம் தேதி சந்திரயான் – 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.
    
இந்த விண்கலம் வரும் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கினால் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். இந்த சூழ்நிலையில், கடந்த 11ம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய ரஷியாவும் லூனா-25 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்தியாவின் சந்திரயான் – 3 விண்கலம் ஏவப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இந்த விண்கலம் ஏவப்பட்டாலும் முதலில் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் நோக்கத்தோடு இந்த விண்கலம் ஏவப்பட்டது.

இந்தியாவின் சந்திரயான் – 3 விண்கலம் வரும் புதன்கிழமை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ரஷியாவின் லூனா விண்கலம் திங்கட்கிழமை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு முன்பாக நிலவின் தென் துருவத்தை அடைந்துவிடலாம் என்ற முனைப்பில் ரஷியா முயற்சி மேற்கொண்டது. இந்தியாவின் நட்பு நாடாக இருந்தாலும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற ரஷியா முயற்சி மேற்கொண்டிருந்தது.

ஆரோக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டாலும் விண்வெளி துறையில் சந்திரயான் – 3 க்கு போட்டியாகவே லூனா – 25 விண்கலம் ஏவப்பட்டதாக கருத்துக்கள் நிலவி வந்தன. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு என்ற பெருமையை பெறும் முயற்சியில் ரஷியா தோல்வியடைந்துள்ளது. ரஷியா ஏவிய லூனா – 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது. லூனா – 25 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்று வந்த நிலையில் தென் துருவத்தில் தரையிறங்கும் வகையில் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைக்கும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.

அப்போது மதியம் 2.57 மணிக்கு லூனா-25 விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும், லூனா – 25 விண்கலம் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஞ்ஞானிகள் நேற்று முதல் விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தனர். ஆனால், விஞ்ஞானிகளின் முயற்சி வீணானது. இந்த சூழ்நிலையில் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப்பாதையை விட்டு விலகிய லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் நாடு என்ற பெருமையை பெரும் முயற்சியில் ரஷியா தோல்வியடைந்துள்ளது. அதேவேளை, இந்தியாவின் சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி தன் பயணத்தை தொடர்ந்து வரும் நிலையில் அனைத்து செயல்பாடுகளும் சரிவர நடைபெறும்பட்சத்தில் வரும் புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கும். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!