இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளில் இந்தியா மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அந்நாட்டுடனான உறவு தொடர்வது அவசியம் என்று தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான மணிசங்கர் ஐயர் வலியுறுத்தி யுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து இருவேறு கருத்துக்களை கூறி வரும் நிலையில், மணிசங்கர் ஐயர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் பிரதமர் உட்பட யாரும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் மாநாட்டில் பங்கேற்பது அவசியம் என்று வலியுறுத்தினார். அதேபோல் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் வலியுறுத்தியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் தங்காபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
















