தீபாவளிக்கு தூரப்பயணம் செல்பவரா நீங்கள்? ஆம் எனில் இது உங்களின் கவனத்திற்கு..

question2தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்வோர் மிகவும் அவதானத்துடன் தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தூர இடங்களுக்கு செல்வோரிடம் திட்டமிட்ட குழுவொன்று பணம் மற்றும் பொருட் கொள்ளையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை இங்கே குறிப்பிட்டுக் கூற முனைகிறோம்.

மயில்வாகனம் பாக்கியராஜ் என்ற இளைஞன் கொட்டக்கலை – மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்தவராவார்.

இவர் அவிசாவளையில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

தீபாவளி விடுமுறை நெருங்குவதால் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்களுக்கு புத்தாடை என்பவற்றை கொள்வனவு செய்துள்ளார்.

அத்துடன் தீபாவளி செலவுக்கென தான் பணிபுரிந்த தளத்தில் இருந்து 20,000 ரூபா பணத்தையும் வாங்கியுள்ளார்.

விடுமுறை எடுத்து கடந்த 28ம் திகதி கொட்டக்கலை நோக்கிச் செல்லவென ஹட்டன் பஸ்ஸிற்காக அவிசாவளை நகரில் காத்திருந்தார்.

அவ்வழியாக வந்த முச்சக்கர வண்டியொன்று குறித்த இளைஞனுக்கு அருகில் சென்று நின்றுள்ளது.

´ஹட்டனுக்கு செல்லும் வழி எது´ என முச்சக்கர வண்டியின் சாரதி இளைஞரிடம் வினவியுள்ளார்.

இளைஞரும் வழியைச் சொன்னதும் முச்சக்கர வண்டியில் பின்னால் அமர்ந்திருந்த இருவர் இளைஞனை ´எங்கு செல்கிறீர்கள்´ என்று விசாரித்ததும் இளைஞன் ஹட்டனுக்கு என்று கூறியுள்ளார்.

உடனே ´எங்களுடன் வாருங்கள் நாங்களும் ஹட்டனுக்குத்தான் செல்கிறோம்´ என்று கூறியதும் இளைஞனும் முச்சக்கரவண்டியில் ஏறிவிட்டார்.

சிறிது தூரம் சென்றதும் குளிர்பானம் அருந்துவதற்கு முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளனர்.

அப்போது இளைஞனுக்கும் ஒருவகை குளிர்பானம் வழங்கியுள்ளனர்.

அதனை குடித்த இளைஞன் மயங்கி விழுந்துள்ளான்.

அதன்பின் முச்சக்கரவண்டியில் இளைஞரின் புத்தாடை பை, கையடக்கத் தொலைபேசி, 20,000 ரூபா பணம் என்பவற்றை திருடி இளைஞனை வீதியில் போட்டுச் சென்றுள்ளனர்.

நீண்ட நேரத்திற்குப் பின் அவ்வழியாகச் சென்ற கொழும்பு – ஹட்டன் பஸ்ஸில் இருந்தவர்கள் மயக்க நிலையில் இருந்த இளைஞனை பஸ்ஸில் ஏற்றிச் சென்று கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின் மயக்கம் தெளிந்து எழுந்த இளைஞன் தனக்கு நடந்ததை கூறினார். (அவருடைய வாக்குமூலமே மேலே கதையாகச் சொல்லப்பட்டுள்ளது)

இந்நிலையில் இளைஞன் தனது பெற்றோருடன் திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

திம்புள்ளை-பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் நபர்கள் திட்டமிட்டு செயற்படும் கொள்ளைக் கும்பலிடம் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply