அரசாங்கம் திட்டமிட்டு வட மாகாணத்தில் இனவாத ரீதியில் பலாத்காரமாக சிங்கள மக்களை குடியேற்றினால் அது பிழையான செயலாகும். இதனை எதிர்க்கிறோம். இவ்வாறு இடம்பெற்றால் கூட்டமைப்பு அதனை தமிழ் இனவாதத்திற்கு பயன்படுத்தும் என ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
வடமாகாணத்தில் மட்டுமல்ல ஆளுநராக நாட்டில் எங்கும் சிவில் நிர்வாகத்தில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக ரில்வின் சில்வா மேலும் தகவல் தருகையில்,
வட மாகாணத்தில் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. வடமாகாண ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளமையை எதிர்க்கின்றோம். அங்கு மட்டுமல்ல நாட்டில் எப்பிரதேசத்திலும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை சிவில் நடவடிக்கைகளுக்கு நியமிப்பதை எதிர்க்கின்றோம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அரசாங்கம் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதை காண முடியவில்லை. சிவில் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகளை நியமித்து நாட்டை இராணுவ மயமாக்கும் திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வட மாகாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரச்சினையை மறைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பயணங்களையும் தமக்கான சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொண்டு அரசியல் குளிர் காயவே நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அது மட்டுமல்லாது இந்தியாவின் அரசியல் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுகின்றது.
அரசாங்கம் திட்டமிட்டு பலாத்காரமாக சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றுவது பிழையான விடயமாகும். இவ்வாறு இடம்பெற்றால் கூட்டமைப்பு தமது தமிழ் இனவாதத்திற்கு உந்து சக்தியாக அதனை பயன்படுத்தும். அரசு சிங்கள இனவாதத்தையும் கூட்டமைப்பு தமிழ் இனவாதத்தையும் நடைமுறைப்படுத்துகின்றன.
தமிழ் மக்களாகட்டும் சிங்கள, முஸ்லிம் மக்களாகட்டும் இந்நாட்டில் அனைவரும் தமது சுயவிருப்பத்தின் பிரகாரம் எங்கும் வாழ முடியும். அதற்கு தடை போட முடியாது.பலாத்காரமாக இனவாதக் குடியேற்றமே பிழையான செயலாகும்.
இவ்வாறு இனவாதம் தொடருமானால் மீண்டும் பிரிவினை வாதம் தலைதூக்கும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
















