இந்தியாவின் ராஜபக்ஷ மோடியோடு கூட்டணி வைத்து பத்ம வியூகம் அமைப்பதில் முன்னணியில் நிற்பவர்களும் விக்னேஸ்வரன், ராஜபக் முன்னிலையில் பதவியேற்றதில் எனக்குத் துளியும் மகிழ்ச்சியில்லை என்று சொல்வதும் விமர்சனம் செய்வதும் எந்த விதத்திலும் நியாயமில்லை.
07.10.2013 அன்று, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கடந்த 11ஆம் திகதி பதவியேற்றனர். முதன்முறையாக வடக்கில், தங்களுக்கான ஒரு மாகாண அரசைத் தமிழ்மக்கள் அமைத்திருக்கிறார்கள்.
இந்த வெற்றியானது, ஈழத்தமிழர்களைப் பற்றி இரண்டு வெவ்வேறு விதமான எண்ணங்களை, உலகநாடுகளுக்கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தோற்றுவித்துள்ளது. இந்த வெற்றி, சுயஉரிமையே, தமிழ்மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியிருக்கிறது. மற்றொருபுறம், சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒருவிதமான அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
உண்மையில் இப்போது அமைந்துள்ள வடக்கு மாகாண அரசு, மத்திய சிங்கள ஆட்சிக்குக் கீழ் அமைந்துள்ள அரசு. ஒரு மாநில அரசுக்குரிய முகாமையான அதிகாரங்களான நிலம்சார்ந்த அதிகாரமும்,பொலிஸ் அதிகாரமும் மாகாண அரசுக்குக் கிடையாது. இனி மேலும் வழங்கப்படக்கூடாது என்று, ஜாதிக யஹல உறுமய உள்ளிட்ட இனவாதக் கட்சிகள் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு வளர்ச்சி நடவடிக்கையையும், சிங்கள ஆளுநரின் ஒப்புதலுடன்தான் மேற்கொள்ளப் படமுடியும். சுருக்கமாகச் சொன்னால், ஆட்சியில் இருந்தாலும், அதிகாரமற்ற அரசாகத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசு இருக்கும்.
எதற்காக அச்சம்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தான், தேர்தலில் நின்று வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அரசியல் தந்திரத்தின் மூலம், தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற்று விடுவார்களேயானால், அதனைச் சிங்களவர்களால் திரும்பப் பெறமுடியாது. தமிழ் இன வாதம் புதிய வடிவில் ஆரம்பித்துள்ளது” என்று ஜாதிக யஹல உறுமய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் உதயகம்மன்பில சொல்கிறார். “”மீண்டும் நந்திக்கடல் நோக்கிப் போகவேண்டாம் என்று விக்னேஸ்வரன் ஐயாவைக் கேட்டுக்கொள்கிறோம்” என்றும் எச்சரிக்கிறார்.
இப்படிப் பேசி, சிங்கள மக்களிடம் அச்சத்தையும், இனவெறியையும் தூண்டி விடுகின்ற வேலைகளில் சிங்கள அமைப்புகள் இறங்கியிருக்கின்றன.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் உலக நாடுகளின் கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட தேர்தல்தானே அன்றி, தமிழர்களுக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட தேர்தலன்று என்பதையே இதுபோன்ற பேச்சுகள் காட்டுகின்றன.
எச்சங்களை அழிக்கும் நடவடிக்கை ஏன்?
வடக்குப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படாது, இலங்கை மத்திய அரசு தமிழ் மாகாண அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் என்றெல்லாம் ஒரு பக்கம் சொல்லப்பட்டாலும், நிலவுகின்ற சூழல் அதற்கு மாறாகவே உள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட நினைவுகளை அந்த மண்ணில் இருந்து சுவடே இல்லாமல் அழித்துவிட நினைக்கின்றனர் சிங்கள ஆட்சியாளர்கள்.
ஏற்கனவே மாவீரர் துயிலும் இல்லங்களும், புலிகளின் தலைவரின் பிறந்த வீடும் சிதைக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து, புதுக்குடியிருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய கட்டடம் என்று சொல்லி, நிலக்கீழ் மாடிகளைக் கொண்ட கட்டடத்தை இராணுவம் குண்டு வைத்துத்தகர்த்துள்ளது.
“”நாம் பிரபாகரனின் பதுங்குகுழியை அழித்துள்ளோம். தீவிரவாதியின் ஆவியை உயிரோடு விட்டுவைத்திருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் தடயங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை” என்று விளக்கமளித்திருக்கிறார், இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய.
தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும், சிங்களக் குடியேற்றங்களை நீக்க வேண்டும், 13ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பனவற்றைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
இலங்கை இந்திய அரசுகளின் இரட்டை வேடம்
வட மாகாண அரசும் இவற்றை, ஜனாதிபதி ராஜபக், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் வலியுறுத்தி இருக்கிறது. 13ஆவது சட்டத்திருத்தம் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்று இலங்கையில் சொன்ன குர்ஷித், இந்தியா திரும்பியதும் அதைப் பற்றி எதுவுமே பேசாமல், பாகிஸ்தான் பற்றிப் பத்திரிகையாளர்களிடம் பேசி விட்டுப் போய்விட்டார்.
13ஆவது திருத்தம் பற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு, அது குறித்து முடிவு செய்ய வேண்டிய இடம் இலங்கை நாடாளுமன்றம்தான்’ என்று ராஜபக் விடை சொல்லி இருக்கிறார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ, “”வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது என்றைக்கும் சாத்தியமில்லை. தமிழர்களுக்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது” என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
இப்படி இந்தியாவும், இலங்கையும் இரட்டை வேடம் போடுகின்ற நிலையில், நம்முடைய அணுகுமுறையிலும் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டி ருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் வடக்குத் தேர்தல் வெற்றி.
ராஜபக் முன்னிலையில், பதவியேற்றுக் கொண்ட பின்பும் விக்னேஸ்வரன் மீது விமர்சனங்கள் அதிகமாகியிருக்கின்றன. அவருடைய அணுகுமுறை, குற்றவாளிக் கூண்டிலிருந்து ராஜபக்வைக் காப்பாற்றவே உதவும் என்றும், தண்டிக்க உதவாது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நடந்த தேர்தலின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்னும் போது, அந்நாட்டு அதிபரின் முன்பாகப் பதவியேற்றது ஒன்றும் பிழையானதாகிவிடாது.
எவரும் எதிர்பார்க்காத தமிழரின் ஒட்டுமொத்த குரல்
போர்க்குற்றங்களை முன்னெடுத்துள்ள உலக நாடுகளிடம், தமிழர் பகுதிகளில் ஜனநாயகமான முறையில் தேர்தல் நடத்துகின்ற அளவுக்கு இங்கே அமைதியான சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக இந்தத் தேர்தல் பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருக்கும் மக்களைக்காக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
இந்தத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், அந்நாடுகளின் கவனம் தமிழர் பகுதிகளின் மீது இருக்கும்படிச் செய்ய வேண்டியது அவசியம். காரணம், ஈழத்தமிழர்கள் இந்தத் தேர்தலில் இப்படிப்பட்ட ஒருமித்த வெற்றியைப் பெறுவார்கள் என்பதை இந்தியாவே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை, வெளிவிவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பேச்சு காட்டுகிறது.
சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க ஒப்பந்தம் செய்துகொண்டு வந்திருக்கிறார் சல்மான் குர்ஷித். அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பினால், சிங்கள அரசு செய்யத் தயங்கிக் கொண்டிருந்த ஒன்றை, இந்திய அரசு போய் முடித்து வைத்திருக்கிறது. இதுதான் உண்மை நிலை என்னும்போது, பாறாங்கல்லில் மோதி மண்டையை உடைத்துக் கொள்வது புத்தி சாலித்தனமாகுமா?
தேர்தலின் மூலம் கிடைத்த பிடிமானம்
இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில், வடமாகாண சபையைப் பொறுப் பேற்றிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஆனால், அவர்களுக்குள்ளும் பதவிச் சண்டைகள் வந்து போயுள்ளது என்னும் செய்தி வேதனையைத்தரக் கூடியதாக இருக்கிறது. திக்கு திசை புரியாமல் இருந்த நிலையில், தேர்தலின் மூலம் ஒரு பிடிமானத்தைப் பெற்றிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்துத் தேர்தலில் வாக்களித்த, ஈழத்தில் வாழும் மக்களுக்கும், அவர்களின் விருப்பங்களுக்குமே மாகாண அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
நெருப்புக்கு அருகில் இருப்பவனுக்குத் தான் அதன் கொடுமை தெரியும். எயர் லங்கா விமானம் ஏறி கலை இலக்கிய சங்கமத்துக்கு மட்டும் இலங்கை வந்து போகின்றவர்களும், இந்தியாவின் ராஜபக், மோடியோடு கூட்டணி வைத்து, பத்ம வியூகம் அமைப்பதில் முன்னணியில் நிற்பவர்களும், விக்னேஸ்வரன், ராஜபக் முன்னிலையில் பதவியேற்றதில் எனக்குத் துளியும் மகிழ்ச்சியில்லை’ என்று சொல்வதும், விமர்சனம் செய்வதும் எந்த விதத்திலும் நியாயமில்லை.
















