நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தை வாரி இறைப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. ஆனாலும் சந்தானம் வந்த பிறகு ஆபாசம் ஆறாக ஓடுவதாக குற்றச்சாட்டு.
சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படத்தின் ட்ரெய்லரில், வேலை செய்யும் பெண் ஒருவர், ஐந்து மணி பத்து நிமிடத்துக்கு வேலையை முடித்து வீட்டிற்கு போகட்டுமா என்பதை, ஐந்து பத்துக்கு போகட்டுமா என்று கேட்க, சந்தானம், நல்லாதானே இருக்கே? ஐநூறு ஆயிரத்துக்கே நீ போகலாமே என்று பதிலளிப்பதாக ஒரு காட்சி வருகிறது.
வீட்டுக்கு போவதை விபச்சாரத்துக்கு போவதாக கிண்டல் செய்யும் இந்தக் காட்சி பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பா சந்தானத்தின் கொச்சை பேச்சை கண்டித்துள்ளார்.
எல்லா படங்களிலும் கையில் மதுக் கோப்பையுடன் போதையில் இப்படி பெண்களை கிண்டல் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பெண்களை ஆபாசமாக கிண்டல் செய்வதை சந்தானம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவரது வீட்டுமுன் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
















