‘அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்’ என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியதால் ஆடியோ பங்ஷனில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுமுகங்கள் நடிக்கும் ‘வலியுடன் ஒரு காதல்’ படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட டைரக்டர் மு.களஞ்சியம் நடிகை அஞ்சலி மீது புகார் பத்திரம் வாசித்தார்.
அவர் பேசும்போது, சினிமாவில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி சங்கம் என டஜன் கணக்கில் சங்கங்கள் உள்ளன. ஆனாலும் இந்த சின்ன பட்ஜெட்ல தயாரான ‘‘வலியுடன் ஒரு காதல்’’ படம் மாதிரி தயாராகி வரும் என்னோட ‘‘ஊர்சுற்றி புராணம்’’ படத்திலிருந்து நடிகை அஞ்சலி பாதியில் ஓடி விட்டார். இதுபற்றி எத்தனையோ முறை மேற்படி சங்கங்களிடம் நான் புகார் கொடுத்து விட்டேன். ஆனால் யாருமே என்ன ஏது என்று அதைப்பற்றி என்னிடம் விசாரிக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு தயாரிப்பாளர் பல கோடி ரூபாய் போட்டு இந்த மாதிரி சின்ன பட்ஜெட் படங்களில் முதலீடு செய்து, படம் வெளிவரும் என நம்பிக்கையில் இருக்கையில் அதற்கு ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை பேசித் தீர்க்கத்தான் இந்தமாதிரியான சங்கங்கள் உள்ளது.
ஆனால் அவர்கள், அவர்களது கடமைகளை செய்வதில்லை. இதனால் தமிழ்சினிமாவுக்குள் சின்ன பட்ஜெட் படத்தயாரிப்பாளர்கள் வருவது அஞ்சலி மாதிரி நடிகைகளால் கேள்விக்குறியாகி உள்ளது.
அஞ்சலி மாதிரியான நடிகைகளை யாருமே கேள்வி கேட்கவில்லை என்றால் அப்புறம் எப்படி சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் தமிழ்சினிமாவுக்குள் வருவார்கள், டெக்னீஷியன்கள் எப்படி பிழைப்பார்கள், இதற்கெல்லாம் இதுமாதிரி சங்கங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும், அப்படியாவது எனது ‘‘ஊர்சுற்றி புராணம்’’ படம் ரிலீசாக வேண்டும் என்று பேசினார்.
அவரது பேச்சைக் கேட்டு உஷ்ணமான ஸ்டண்ட் மாஸ்டரும், தயாரிப்பாளருமான ஜாக்குவார் தங்கம், “இனி அஞ்சலி மாதிரி எந்த நடிகையாவது தமிழ்சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டால் அவரை செருப்பால் அடிக்க வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
இந்த பிரச்னைக்கு இன்றைக்கே தீர்வு காண களமிறங்க வேண்டும், அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம். இனி இதுமாதிரி பிரச்னைகளில் நடிகைகள் பாதியில் கழன்று கொண்டார்கள் என்றால் அவர்களிடம் பேசி மீண்டும் நடிக்க வைக்க வேண்டும் அல்லது அதுவரை அப்படப்பிடிப்பிற்கான செலவை வட்டியுடன் வசூலிப்பது என முடிவெடுப்போம்.
கில்டில் செயலாளராக இருக்கும் நான், தற்போதைய தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் செயற்குழு உறுப்பினர் என்ற பொறுப்புடனும் தான் இதைப் பேசுகிறேன். தற்போதைய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பவர், நீங்கள் அவரிடம் புகார் செய்யுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று பேசி பரபரப்பை உண்டாக்கினார் ஜாக்குவார் தங்கம்.
ஒரு ஆடியோ பங்ஷனில் நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பேசிய ஜாக்குவார் தங்கத்துக்கு நடிகர் சங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது?
எதற்கெடுத்தாலும் பஞ்சாயத்து வைத்து பழக்கப்பட்ட ராதாரவி, சரத்குமார் அன்கோ இந்த விவகாரத்தில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
















