யுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கையிடம் கோரப்படும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தாமும் பிரதமர் டேவிட் கமரூனும் இலங்கை அரசாங்கத்திடம் கோரவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை தவிர்க்குமாறும், கருத்து சுதந்திரத்திரத்தை உறுதி செய்யுமாறும் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நேரடியாக இலங்கை அரசாங்கத்திடம் இந்த தகவல்களை பரிமாறிக் கொள்வது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் கமரூன் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இலங்கையின் நிலைமைகளை நேரில் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக விசாரணை நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், பல விடயங்களில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















