பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த தீர்மானித்தது இந்தியாவா?

sarath-kumarபொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று முடிவு செய்தது இந்தியாதான் என்ற குற்றச்சாட்டு உண்மையானதாக இருக்கும் போல் தெரிகிறது என, சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ, தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள காங்கிரஸ் உயர்மட்ட குழு அனுமதியளித்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை இந்திய மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று வேண்டுகோள் வைத்தும், தமிழக சட்டமன்றத்திலே வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், பிரதமர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்ற முடிவை பார்க்கும்போது, 2011–ம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்று முடிவு செய்தது இந்தியாதான் என்ற குற்றச்சாட்டு உண்மையானதாக இருக்கும் போல் தெரிகிறது.

இலங்கையில் எத்தனை மாநாடுகள் நடத்தினாலும் இலட்சக்கணக்கான தன் சொந்த மக்களையே கொன்று குவித்த இலங்கை ஜனாதிபதியின் போர்க்குற்றங்களை உலக மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியின் தமிழின விரோத போக்கிற்கு ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் தண்டனை தரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. உயர்மட்ட குழுவின் பரிந்துரையை காங்கிரஸ் கட்சி திரும்பப்பெற வேண்டும். இந்தியா பொதுநலவாய மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags: , ,

Leave a Reply