அமெரிக்க சிறையில் உள்ள பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டதாக அண்மையில் ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன. அமெரிக்காவின் கலிபோனிய சிறையில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த 148 பெண்கைதிகளுக்கே கட்டாய கருத்தடை செய்யப்பட்டது.
அமெரிக்க சிறையில் உள்ள பெண்களுக்கு ஏற்பட்ட நிலையே வன்னியில் சிறந்த வெளிச்சிறையில் வாழும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி ஆகிய இடங்களில் வசிக்கும் இளம் தாய்மார்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
ஐம்பதுக்கு மேற்பட்ட தாய்மாருக்கு அரச வைத்தியசாலை ஊடாக கட்டாய கருத்தடை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையகத்தின் அருட்தந்தை மங்களராஜா வெளிப்படுத்தியுள்ளார். வத்திகானின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி ஜோசப் ஸ்பிட்டிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்ததாக பி.பி.சி ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
வற்புறுத்தப்பட்ட கருத்தடை தொடர்பான விடயத்தை விசாரிப்பதற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டதாக வடமாகண சுகாதார அமைச்சின் செயலாளர் Dr ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
போரினால் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்தது மட்டுமல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். யுத்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகளிகளினாலும் உறவுகளை பிரிந்ததனாலும் ஏற்பட்ட மன உளைச்சலினால் பிறப்பு வீதம் குறைந்தே காணப்பட்டது.
தற்போது போரின் வடுக்களிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு இயல்பு வாழ்கைக்கு திரும்பும் மக்களின் வாழ்வில் மீண்டும் மறைமுகப் போர் தொடுக்கப்பட்டுள்ளது. இது இனச்சுத்திகரிப்பின் வடிவமாகவே பார்க்கப்படுகிறது.
அடிப்படை மனித உரிமையைச் சட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும் மனித உரிமை மீறல்கள் நடந்தவண்ணமே உள்ளன. சில நாட்களுக்கு முன்பு BBC ஊடகவியலாளர் பர்காய் கீனன் ‘வடக்கில் தமிழ் பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர்’ என்ற காணொளியை வெளியிட்டிருந்தார். இவ் ஆவணப்படத்திலிருந்து வடக்கில் ஒரு மௌன யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது.
வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி ஆகிய பிரதேசங்கில் மேற்கொள்ளப்பட்ட கருத்தடை தொடர்பாக பூநகரி பிரதேச தேசிய இளைஞர் சேவை மன்ற இளைஞர் முகாமைத்துவ உத்தியோகஸ்தர் கருத்துக்கூறுகையில் ‘குறித்த பிரதேச மக்களுக்கு இனவிருத்தி சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு மிக அவசியமானது. குழந்தைகளுக்கு இடையிலான இடைவெளி தொடர்பான முக்கியத்துவத்தை புரியாதவர்களாகவே உள்ளனர். செயற்கை கருத்தடை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் ஆனால் கட்டாய கருத்தடை மனித உரிமை மீறல்’ என்றார்.
கிளிநொச்சியில் தனியார் மருத்துவ பகுதி ஒன்றில் பணிபுரியும் பெண்மணி தெவிக்கையில் ‘ இங்கு கருத்துக்களை கூறுவதற்கு பயம் இருப்பினும் மன ஆதங்கத்தை கூறவேண்டியுள்ளது. யுத்ததில் அழிந்த இனம் தன்னை விருத்தி செய்ய கொள்ளத்தடை, ஆனால் அந்த மக்களைக் கொன்ற சீருடைக்காரர் மூன்றாவது குழந்தை பெற்றால் ஊக்குவிப்பாக ஒரு இலட்சம் கொடுக்கிறாங்கள், இது எப்படி இருக்கு…..? மாகாணசபை, மாண்பு மிகு முதலமைச்சர் எண்டு வெளில நல்ல ஆலவட்டம் தான், சனங்கள் அல்லற்படுறது ஆண்டவனுக்கு கூட தெரியவில்லை’ என ஆதங்கப்பட்டார்.
கிளி பிரதேச வாசியான கணேஸ் என்ற முதியவர் இது தொடர்பாக புராணக்கதை ஒன்றை சொன்னார். ‘கம்சன் என்னும் அரக்க குணம் படைத்த அரசனின் சகோதரி தேவகியின் திருமணத்தன்று கம்சனுக்கு ஓர் அசரிரீ கேட்கிறது ‘உனது சகோதரிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை அழிக்கும்’ என்ற அந்த அசரீரி இதனால் அச்சமடைந்த கம்சன் சகோதரியையும் கணவனையும் சிறையிட்டார்.
எட்டாவது மகனாக கண்ணன் பிறந்தான். அதுபோல எங்களுக்கும் எட்டாம் நம்பவர்காரன் பிறந்தான் காலவெள்ளத்தில காணாமல் போட்டான். கண்ணன் வருவான் கதை சொல்லுவான்…… கண்ணன்களும், கந்தன்களும் பிறப்பாங்கள் எண்டு கருத்தடை செய்கின்றாங்கள்’ என பெருமூச்சுடன் கூறி முடித்தார்.
-துவாரகா கலைக்கண்ணன்
















