தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து, பின்னர் கொன்றதற்கான புதிய ஆதாரத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறியிருந்தபோதிலும், அவர் இலங்கை ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரத்திற்கு பின்னர் கொல்லப்பட்டு கிடக்கும் காட்சிகளை சேனல் 4 ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இலங்கை ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டதற்கான ஆதாரத்தை சேனல் தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த காட்சியில் கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை, இலங்கை ராணுவத்தினர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வருகின்றனர்.
அப்போது அவர்கள், இசைப்பிரியாவை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று கூறுகின்றனர். அதனைக்கேட்கும் இசைப்பிரியா, “ஐயோ அது நானில்லை..!” என்று அழுவதும் அந்த காட்சியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
















