வவுனியாவில் தமிழ் சிறுவர்களை வேட்டையாடிய பிக்கு கைது செய்யப்படாதது ஏன்?

vau-monkயுத்தம் முடிவடைந்த பின்னர் சிறுவர் உரிமை மீறல்கள் பலவும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. சிறுவர்களை கடத்துதல், பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்குதல் என்பன சிறுவர்களின் உள்ளத்தை கடுமையாக அச்சுறுத்துகின்றது. யுத்தத்தின் பின்னர் அநாதரவான சிறுவர்களும் இராணுவ மயத்திற்குள் வாழும் சிறுவர்களும் முற்றிலும் பாதுகாப்பை இழந்தநிலையில் உள்ளனர்.

வவுனியா அட்டம்பகஸ்கடவில் சிறுவர் இல்லம் ஒன்றை பௌத்த பிக்குவான கல்யணா திஸ்ஸ தேரர் நடத்தி வந்தார். குறித்த சிறுவர் இல்லத்தில் ஏழு வயதிற்கும் 18 வயதிற்கும் இடையிலான 84 சிறுவர்கள் வசித்து வந்தனர். 2010 மற்றும் 2012 முதலிய வருடங்களில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடுகளைப் பெறுவதற்காக 84 சிறுவர்களின் விபரங்கள் குறித்த இல்லத்தினால் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவன் ஒருவன் இல்லத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டான். தந்தையை இழந்த அச் சிறுவன் நன்றாக படிக்ககூடியவன். வீட்டில் வறுமை காரணமாக அவனது தாயார் இவ் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தார். அவனை சிங்கள மொழி மூலப் படசாலையில் தரம் ஒன்று வகுப்பில் கல்யாணதிஸ்ஸ தேரர் சேர்த்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களும் வறுமையில் வாடிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த இல்லத்தில் சேர்க்கப்பட்டார்கள். கல்வி கற்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் இங்கு வந்த மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் தோட்டத்தில் கடுமையாக வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டு இருந்ததாக குறித்த சிறுவர் இல்லத்தை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த இல்லத்தில் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மாணவர்களே. அவர்களில் பலரும் வன்னியைச் சேர்ந்தவர்கள். யுத்தம் காரணமாக தாய், தந்தையை இழந்தவர்கள். அநாதரவான சிறுவர்கள் இங்கு வந்து தங்கி கல்வி கற்றுள்ளனர். குறித்த இல்லம் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சூழலிலேயே இயங்கி வந்தது. இந்த இல்லத்தில் யாரையும் பார்வையிட முடியாத சூழலை தேரர் பேணிவந்துள்ளார்.

இல்லத்தில் உள்ள சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவங்கள் அங்கிருந்து கசியக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு இல்லத்திற்குள் வருவதற்கு அனுமதியை தேரர் மறுத்து வந்தார். இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினரின் பாலியல் இச்சைகளை தீரப்பதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்று சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

குறித்த இல்லத்திலிருந்து வவுனியா வைத்திசாலைக்கு கொண்டுவரப்பட்ட 9 வயதான சிறுவன் ஒருவன் இல்லத்தை நடத்திய கல்யாண திஸ்ஸ தேரரால் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டான் என்று அக்டோபர் 9ஆம் திகதி அன்று வவுனியா சட்ட வைத்திய அதிகாரி வெளியிட்ட மருத்துவச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சான்றிதழே குறித்த இல்லத்தில் நடந்த துஸ்பிரயோக நடவடிக்கைளை முதன் முதலில் வெளியில் கொண்டு வந்த ஆதாரமாகும்.

துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப் பட்டு பாதிக்கப்பட்ட சிறுவனின் உடலில் கடந்த சில காலமாக அவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி இருந்தமையை உறுதிப்படுத்தும் வலுவான சில காயங்கள் காணப்பட்டுள்ளன. கல்யாண திஸ்ஸதேரர் சிறுவர்களை தொடர்ந்தும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இந் நிலையில் குறித்த சிறுவன் துஸ்பிரயோகததிற்கு இணங்காமையின் காரணமாகவே அந்த சிறுவனின் உடலில் காயங்களை தேரர் ஏற்படுத்தியுள்ளார்.

அச் சிறுவனின் ஆண்குறியை நூலால் கட்டி பிளேட் கொண்டு கல்யாணதிஸ்ஸ தேரர் வெட்டியிருக்கின்றார். சிறுவன் முதலில் தனக்கு நடந்த நிகழ்வை வெளியில் கூறாமல் இருந்துள்ளான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெற்றோர் ஊடாக தனக்கு நிகழ்ந்த கொடுமையை சொல்லியிருக்கிறான். இந்தச் சிறுவனின் வாக்கு மூலத்தை அடுத்தே அங்கே துஸ்பிரயோகம் செய்யப்படும் சிறுவர்கள் தொடர்பான விடயங்கள் வெளியில் அறியப்பட்ட பொழுதும் கடந்த சில வருடங்களாகவே அங்கு துஸ்பிரயோகம் இடம் பெறுவது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயதுச் சிறுவனின் சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் குறித்த சிறுவர் இல்லத்திற்குச் சென்ற பொழுது அவர்கள் தேரரின் ஆதரவாளர்களால் கற்கள் வீசி துரத்தப்பட்டனர். எனினும் குறித்த சிறுவர் இல்லத்தின் முறைகேடுகள், தேரரின் பாலியல் முறைகேடுகள் உள்ளிட்ட பல சம்வங்களுக்கான ஆதாரங்கள் தற்பொழுது வெளியாகத் தொடங்கியுள்ளன.

84 சிறுவர்கள் தங்கியிருந்த இல்லத்தில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் 22 சிறுவர்கள் மாத்திரமே மீட்கப்பட்டுள்ளனர். 9ஆம் திகதி குறித்த இல்லத்தின் நடவடிக்கைகள் கசியத் தொடங்கிய பொழுது 15ஆம் திகதிக்குள் அங்குள்ள சிறுவர்கள் இல்லத்திலிருந்து அகற்றப்பட்டனர். அவர்கள் வேறு எங்கேனும் கொண்டு செல்லப்பட்டார்களா? அல்லது காணாமல் போனார்களா என அறியப்படவில்லை.

இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசே பொறுப்பு என்று குற்றம் சுமத்தப்படுகிறது. அரசாங்கம் சிறுவர் நன்டத்தைப் பிரிவு, சிறுவர் பாதுகாப்பு அதிகாசபை என பலதரப்பட்ட துறைகளை உருவாக்கிச் செயற்பட்ட போதும் இந்த சிறுவர் துஸ்பிரயோககங்களைத் தடுக்க முடியாது அவற்றுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

வவுனியா பொலிசார் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் முகமாக எதனையும் செய்யாமல் துஸ்பிரயோக நடவடிக்கைக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் இந்த சிறுவர் இல்லத்தில் துஸ்பிரயோகங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் நற்சான்றிதழ் அளித்திருந்தார்.

குறித்த இல்லத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம் பெறுகின்றன என்று வடமத்தியமாகாண சிறுவர் நன்னடத்தைப் பிரிவு எழுத்து மூலம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆணையாளர் நிலமைகளை கண்காணித்த பின்னர் குறித்த நற்சான்றிதழை வழங்கினார்.

அத்துடன் வடமத்தியமாண சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட பொழுதும் தம்மை கண்காணிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் குறித்த இல்ல நிர்வாகி கல்யாண திஸ்ஸ தேரர் அனுமதி மறுத்து வருவதாக வடமத்திய மாகாண சிறுவர் நன்னடத்தைப் பிரிவின் ஆணையாளர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி முன் வைக்கப்பட்ட வேண்டு கோளுக்கு இணங்க 28 நாட்களுக்குப் பின்னர் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டார். துஸ்பிரயோககங்கள் நடக்கின்றன என்று எச்சரிக்கப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளின் பின்னரே சிறுவர்கள் குறித்த இல்லத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கின்றார்கள்.

இது இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வினை திறனற்ற செயற்பாட்டை மாத்திரமின்றி வடக்குகிழக்கில் உள்ள சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான நிலவரத்தை தெளிவாக காட்டுகிறது. இராணுவம் மற்றும் பொலிசார் இதற்கு உடந்தையாக இருந்து சிறுவர்களை வேட்டையாட அனுமதிந்திருந்ததுடன் இதற்கு பாதுகாப்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் செயற்பட்டிருக்கிறது.

இவ்வளவும் நடந்த பின்னரும் சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பிக்கு கைது செய்யப்படவில்லை. அவர் அரசு, பாதுகாப்பு, காவல், நீதி என பலதரப்பட்ட மட்டங்களுடனும் செல்வாக்குமிக்கவர் என்று கூறப்படுகிறது. மருத்துவ சான்றிதழில் 9 வயதுச் சிறுவன் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்வவம் உறுதிப்பட்டுத்தப்பட்ட போதும் பிக்கு கைது செய்யபடவில்லை.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் மீட்கப்பட்ட 22 சிறுவர்களும் பெற்றோர்களின் தொடர்பற்ற நிலையில் உள்ளனர். அந்த 22 சிறுவர்களும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனரா என்று ஆராயும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

மூன்று வருடங்கள் வரை சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதை பார்த்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை இனியும் என்ன செய்யும் என்ற அவநம்பிக்கை பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மத்தியில் காணப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட அநாதரவான சிறுவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு பொண்டு சென்று சிறவர்களை விட்ட பெற்றோரும் உறவினர்களும் பிக்குவால் மிரட்டப்பட்டு வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம் மனிதபிமானப் போர் என்றவகையில் நடத்தியயுத்தத்தில் வன்னியில் இயங்கிய சிறுவர் இல்லங்களும் சிதறடிக்கபட்டன. கூடற்ற பறவைகளாக சிறுவர்கள் அந்தரித்துப் பறந்து அலைகின்றனர். இப்பொழுது அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கல்யாணதிஸ்ஸ தேரரின் சிறுவர் இல்லம் சிறுவர்களை வேட்டையாடும் இல்லமாக இயங்கியதுடன் சில இல்லங்கள் குழந்தைகளை தற்கொலை செய்யுமளவில் ஊக்குவிக்கும் சித்திரவதைக் கூடங்களாக மாற்றியமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தெற்கில் இடம்பெற்ற சில சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களுக்காக பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தில் கடந்த பலவருடங்களாக தமிழ்ச் சிறுவர்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த கல்யாணதிஸ்ஸ தேரர் கைது செய்யப்படாதது ஏன்?

Tags: , , ,

Leave a Reply