தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற 27 வயது இளம் பெண்ணை இலங்கை இராணுவத்தினர் உயிருடன் பிடித்த பின்னரே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதாக சனல் 4 புதிதாக வெளியிட்டுள்ள காணொளிச் செய்தியை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.
சனல் 4 காணொளி ஒரு நாடகம் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். அடிப்படையற்றக் குற்றச்சாட்டுக்கள் அவை. இசைப்பிரியா என்பவர் விடுதலைப் புலிகளின் ஆயுதப்பயிற்சி பெற்ற லெப்டினன் கேணல் தரத்திலுள்ள போராளி. புலிகளின் தொலைக்காட்சியிலும் தீவிரமாக இயங்கியவர் என்று எங்களுக்குத் தெரியும். ஒருபோதும் அவரோ வேறு யாருமோ உயிரோடு பிடிபடவில்லை.
நாங்கள் உயிரோடு பிடித்த 12 ஆயிரம் பேர் வரையில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். ஒருபோதும் இசைப்பிரியா அவர்களுடன் இருக்கவில்லை என்றார் இலங்கை இராணுவப் பேச்சாளர்.
ஆனால், இசைப்பிரியா இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுகின்ற காட்சியையும் பின்னர் அவர் கொல்லப்பட்டிருக்கின்ற காட்சியையும் காட்டுவதாக சனல் 4 வீடியோ கூறுகிறதே என்று அவரிடம் மீண்டும் கேட்டபோது, ´அந்த வீடியோ உண்மையானதா என்று நிபுணர்கள் தான் ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் சொல்லுகின்ற வீடியோவில் அந்தப் பெண்ணைத் தான் காட்டுகிறார்களா அல்லது யாரையாவது நடிக்க வைத்திருக்கிறார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை.
இது நடிப்பாகக் கூட இருக்கலாம். இந்த வீடியோவை தொழிநுட்ப ரீதியில் ஆராய்ந்துபார்க்க வேண்டும். இந்த வீடியோ ஒரு நாடகம் என்று தான் நாங்கள் கருதுகிறோம்´ என்றார் ருவன் வணிகசூரிய.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பான காணொளிகளை சனல் 4 கடந்த நான்கு ஆண்டுகளாக வெளியிட்டுள்ளது
இதற்கு முன்னர் இவ்வாறான வீடியோ காட்சிகளை சனல் 4 வெளியிட்டிருந்தபோது, அவை உண்மையானவை தான் என்று சுயாதீனமான நிபுணர்களை மேற்கோள்காட்டி சனல் 4 கூறியிருந்தது தானே என்று கேட்டபோது, அவை பொய்யானவை என்றும் வேறு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள் என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் வாதிட்டார்.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உண்மையில் இந்தப் பிரச்சனை பற்றி தெரிந்துகொள்ளும் தேவை இருந்தால், இலங்கைக்கு வந்து அவர்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு அவற்றைக் கொண்டுவர முடியும் என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
சனல் 4 இந்த வீடியோவை காமன் வெல்த் மாநாட்டை இலக்கு வைத்து தான் வெளியிட்டிருக்கிறது. நீங்கள் பொறுமையோடு இருந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் இன்னும் ஒரு வீடியோவோ நிழற்படமோ வெளியாகலாம். அது தான் சனல் 4வின் பழக்கம் என்று எல்லோருக்கும் தெரியும் என்று கூறிய இலங்கை இராணுவப் பேச்சாளரிடம், பிரிட்டனிலிருந்து இயங்கும் சனல் 4 நிறுவனம் எதற்காக இலங்கை அரசாங்கம் மீதோ இராணுவம் மீதோ பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர், ´இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும், இலங்கையில் தனிநாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற பிரிவினைவாதிகளின் செயற்பாடுகள் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற பல அமைப்புகள் இருக்கின்றன. யுத்த காலத்தில் அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்தார்கள். இன்று அவர்கள் அந்தப் பணத்தை இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக செலவிடுகிறார்கள். தமிழ் பிரிவினைவாதிகளின் பணத்தின் பிடியில் சனல் 4வும் சிக்கியிருக்கிறது´ என்றார்.
இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது மோதலில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் லெப்டினன் கேணல் இசைப்பிரியா என்றழைக்கப்படும் ஷோபா என்ற 27 வயது இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது தப்பிச் செல்ல முற்படுகையில் இலங்கை இராணுவத்திடம் உயிருடன் பிடிபடும் காட்சியையே வெளியிட்டுள்ளதாக சனல் 4 செய்தியாளர் கலம் மக்ரே கூறியிருக்கிறார்.
அந்தக் காட்சியில் மேலாடை இல்லாத நிலையில் சேறு நிரம்பிய குட்டை யொன்றுக்குள் இருந்து வருகின்ற இளம் பெண்ணின் உடம்பை இராணுவத்தினர் வெள்ளைத் துணியொன்றால் மூடி அழைத்துச் செல்கின்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் தான் அவர் என்று அருகிலிருக்கின்ற மற்ற இராணுவச் சிப்பாய்கள் கோசமிட, அதற்கு ´ஐயோ அவர் நானில்லை´ என்று அந்தப் பெண் கூறுகின்ற காட்சிகளே சனல் 4 வில் புதிதாக வெளியாகின.
இசைப்பிரியா விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியவர். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு, நிர்வாண கோலத்தில் கொல்லப்பட்டுள்ள அவரது சடலத்தின் படங்களை சனல் 4 ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ காட்சியில், பிடிபடும் போது காயங்கள் எதுவுமின்றி இருக்கின்ற இசைப்பிரியா, பின்னர் குழியொன்றுக்குள் மயங்கிய நிலையில் அல்லது பெரும்பாலும் உயிரிழந்து விட்ட நிலையில் காணப்படுவதாக சனல் 4 செய்தியாளர் கூறுகிறார்.
பாலியல் கொடூரங்களுக்கு உள்ளாகி முகத்தில் மோசமான காயங்களுடன் இசைப்பிரியா இறந்து கிடக்கும் ஏற்கனவே வெளியான காட்சியையும் சனல் 4 இதனுடன் காட்டியிருக்கிறது. அதனுடன் தொடர்புடையவாறு ஏற்கனவே வெளியான, நிராயுதபாணிகள் கண்கள் கட்டப்பட்டு நிர்வாணகோலத்தில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகளும் உள்ளன.
ஏற்கனவே, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்றுகூறி கனடா பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டை இந்தியப் பிரதமரும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தமிழகத்திலிருந்து குரல்கள் ஒலித்த வண்ணமுள்ளன.
பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரோனும் இலங்கையின் உரிமைப் பிரச்சனையை காமன்வெல்த் மாநாட்டில் எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் மாநாட்டுக்கு இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், தாம் வெளியி்ட்டுள்ள புதிய ஆதாரம் உலகநாடுகளின் தலைவர்கள் மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டுமென்ற அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்று சனல் 4 கூறியிருக்கிறது.
இலங்கை அரசாங்கம் அதுகுறித்து சுயாதீனமான விசாரணைகளை நடத்தாவிட்டால், சர்வதேச விசாரணை ஒன்று தேவைப்படலாம் என்று ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் இதற்கு முன்னர் சுமத்தியிருந்த இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் மறுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
















