வடக்கு மாகாண முதல்வருக்கு ஐரோப்பிய நாடுகளும் அழைப்பு; நேரில் விடுத்தார் ஒன்றியத் தூதுவர்

european-union-flagஐரோப்பிய நாடுகளுக்கு வருகை தருமாறு வடக்கு மாகாண முதலமைச்சரிடம் நேரில் அழைப்பு விடுத்தார், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி.

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தூதுவராகக் கடந்த மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டேவிட் டெலி, யாழ்ப்பாணத்துக்கு முதற்தடவையாக நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை, யாழ்ப்பாணத்திலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமாலை இரண்டு மணி நேரம் சந்தித்துக் கலந்துரையாடினார் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஐரோபபிய ஒன்றியத்தின் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டேவிட் டெலி தெரிவிக்கையில், இலங்கையுடன் நாம் சிறந்த நட்புணர்வை பேணுகின்றோம். இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பங்காளனாக ஐரோப்பிய ஒன்றியமே விளங்குகின்றது.

700 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை இலங்கைக்கு வழங்கவுள்ளோம். 10 ஆண்டு காலத் திட்டத்தின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு வரை இவை தொடரும்.

வாழ்வாதார உதவிகள் மற்றும் வீட்டுத்திட்டங்களை வடக்கு – கிழக்குப் பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்கின்றது. 20 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் 16 ஆயிரம் வீடுகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

நீண்ட காலத்துக்குப் பின்னர் நடத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சராகத் தேர்வானமைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் அவர் சுருக்கமாக விளக்கினார். இலங்கைக்கான உதவிகளை நாம் நடுநிலைமையாகவே வழங்க விரும்புகின்றோம் – என்றார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்:

தற்போது வழங்கியுள்ள உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டுமெனவும் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். இந்த நாட்டில் சமாதானம் நிலைபெற ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு அவசியம்.

இலங்கை அரசுடன் இணைந்து செயற்படும் அவர்கள், எங்கள் நிலைமைகளையும் தெரிந்து எடுத்துச் சொல்வதன் ஊடாக மேலும் சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும் தெரிவித்தேன்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருகை தருமாறு அவர் என்னிடம் அழைப்பு விடுத்தார். எதிர்காலத்தில் நாம் மேலும் நெருக்கமாக அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும் – என்றார்.

Tags: , , ,

Leave a Reply