ராஜாஜி அரங்கத்தில் நெரிசல்- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

முக்கிய பிரமுகர்களுக்கு தனி வழியும், பொது மக்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.

கருணாநிதியின் உடலை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். சிலர் தடுப்புகளை தகர்த்து விட்டு சென்றனர். ஒரு கட்டத்தில் முக்கிய பிரமுகர்களின் பாதையில் பொதுமக்கள் புகுந்தனர். இதில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் 26 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செண்பகம் (60), ஒரு ஆண் ஆகியோர் இறந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சரவணன் (37), துரை (56) ஆகியோர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

பலியான துரை மதுரை மதிசியம் பகுதியை சேர்ந்தவர். தி.மு.க. முன்னாள் பகுதி செயலாளரான இவர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஏற்கனவே 2 முறை சென்னை வந்துள்ளார். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வந்தவர் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்த சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

காயமடைந்த மற்ற 22 பேரில் 15 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்கள். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த குழந்தை வேலு, அம்பத்தூரை சேர்ந்த பாலகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த தங்கராஜ், சத்யா, கென்னடி, வேலூரை சேர்ந்த ஜெயராமன், காஞ்சீபுரத்தை சேர்ந்த சேட்டு ஆகிய 7 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வீடு திரும்பிய மயிலாப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் கார்த்திக் என்ற வாலிபரும் பலியானார்.

நேற்று காலை 11 மணி அளவில் கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜெகதீஷ் கார்த்திக், மாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். வீட்டுக்கு வந்ததும் மனைவி சுமித்ராவிடம் தண்ணீர் வாங்கி குடித்த அவர் திடீரென சுருண்டு விழுந்து பலியானார்.

இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜெகதீஷ் கார்த்திக்குக்கு 13 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர். ஜெகதீஷ் தனியார் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரிந்து வந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!