ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம்: காமன்வெல்த் அரச தலைவர்களுக்கு மின்னஞ்சல்!

Thirumavalavanஇனக்கொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவைக் கைவிட வலியுறுத்தி நவம்பர் 5இல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கடந்த அக்டோபர் 30ம் நாள் டெல்லியில் கூடியது. அக்குழுவில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் இந்த முடிவு தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக ஒருமித்த குரலில் வலியுறுத்திவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இப்படியொரு முடிவை எடுத்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான ஜி.கே.வாசன் உடனடியாக இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்து இது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இந்திய அரசு காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பைக் கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக தலைவர் கலைஞருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவெடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாக்குறுதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காது என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், இந்தத் தகவல் ஏமாற்றத்தை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காமல் இந்திய அரசு புறக்கணித்துவிட்டால் இரு நாடுகளுக்குமிடையிலான அரச உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பது நொண்டிச்சாக்காகும்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற உள்ள சூழலில், சேனல் 4 தொலைக்காட்சி விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவை இலங்கைப் படையினர் பிடித்துச் செல்லும் காட்சியை வெளியிட்டுள்ளது. இசைப்பிரியாவை படையினர் திட்டமிட்டுக் கொல்லவில்லை என்று இலங்கை அரசு ஏற்கனவே கூறிவந்த நிலையில், அவர்கள் கூறியது பொய் என்பதை சேனல் 4 தொலைக்காட்சி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசின் உண்மை முகம் அம்பலப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய அரசு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமானால் தமிழ் மக்களின் உணர்வுகளை மேலும் காயப்படுத்துவதாகவும், போர்க்குற்றங்களை மறைக்கும் இனவெறியர்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருவதும் அம்பலமாகும்.

மனித உரிமைகளை மீறிய இலங்கை ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கனடா அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், தமிழ் மக்களுக்கான நீதியைக் காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு, இனவெறியர்களின் போர்க்குற்றங்களை மறைப்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் துணை நிற்குமேயானால் அரசியல் வரலாற்றில், எக்காலத்திலும் அழிக்க முடியாத களங்கத்தை காங்கிரஸ் கட்சி சுமக்க வேண்டிவரும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகும்.

எனவே, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவைக் கைவிட வேண்டும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 5-11-2013 அன்று சென்னையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மேலும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த இரண்டாண்டுகளுக்குரிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், காமன்வெல்த் நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி காமன்வெல்த் நாடுகளின் அரச தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வேண்டுகோள் விடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply