“இந்திராகாந்தி தமிழ் ஈழத்தை பெற்றுத்தருவார் என நம்பியிருந்தனர். ஆனால் மாகாண சபைதான் தீர்வு என அவர் அன்றே எழுதி வைத்துவிட்டார்”
முப்பது வருட கால யுத்தத்தின் அழிவுகள் உயிரிழப்புகள் அனைத்தையும் மறந்துவிட்ட நிலையில் தற்போது தமிழர் அரசியல் சென்று கொண்டிருக்கின்றது.
-அ.நிக்ஸன்-
பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கான சர்வதேச ஆதரவு அதிகரித்து வருகின்றது. மாநாடு நடை பெறுவதன் மூலம் இலங்கைக்கு பொருளாதார, அரசியல் ரீதியான நன்மைகள் கிடைக்கும் என்று அமைச்சர்கள் அரச ஊடகங்கள் நல்ல நம்பிக்கையுடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இந்தநிலையில் போர்க் குற்ற விசாரணைகள், மனித உரிமைமீறல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் அடையும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. இலங்கைக்கு வருமாறு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸவரனும் அழைப்பு விடுத்துள்ளார். ஆகவே இலங்கைக்கான ஆதரவு உறுதியாகின்றது என்ற முடிவுக்குவரலாம்.
அழிவுகளை மறந்த நிலை-
முப்பது வருடகால யுத்தத்தின் விளைவுகள், அழிவுகள் உயிரிழப்புகள் அனைத்தையும் மறந்துவிட்ட நிலையில் தற்போது தமிழர் அரசியல் சென்று கொண்டிருக்கின்றது. வடமாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்ட நோக்கத்துக்கும் மக்கள் வாக்களித்தமைக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. ஆனால் தற்போது வெற்றி பெற்ற உறுப்பினர்களும் குறிப்பாக முதலமைச்சர் தமது வெற்றிக்கு கூறுகின்ற காரணங்கள் மற்றுமொரு வேறுபாட்டை காண்பிக்கின்றது. அரசியல் தீர்வு என்பதற்கும் அப்பால் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் துன்பங்கள் எது என்பதைக் கூட அறிந்து கொள்ளமுடியாத நிலையில் அல்லது அதுபற்றி பேசவிரும்பாத செயற்பாடுகள் வடமாகாணசபையில் மேலோங்கிக் காணப்படுகின்றன.
பிரதமர் மன்மோகன் சிங் இஙகு வரவேண்டும் என விடுக்கப்பட்ட அழைப்பு மக்களின் சமகால உணர்வுகளை பிரதிபலிக்காத நடவடிக்கை என்பதை கோடிட்டு காட்டுகின்றது. ஆனாலும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் கொழும்புக்கு வந்து கலந்து கொண்டாலும் ஒன்றுதான் வராது விட்டாலும் ஒன்றுதான். ஏனெனில் இந்திய மத்திய அரசு என்பது இலங்கை அரசுக்கு சார்பாகவே எப்போதும் முடிவுகளை எடுத்திருக்கின்றது. பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் பக்கம் நின்று இந்தியா ஒருபோதும் சிந்தித்தது கிடையாது. ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னர் தான் இந்தியா இலங்கை அரசாங்கத்தக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது என்று இல்லை.
இந்திராகாந்தி காலம்
இந்திராகாந்தி பிரதமராக பதவிவகித்த 1983-84 ஆம் ஆண்டுகளில் கூட இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமான நிலைமைதான் காணப்பட்டது. ஆனால் வடக்கு கிழக்குமக்கள் அன்று இந்திராகாந்தி மீது அதீத நம்பிக்கை வைத்திருந்ததால் இந்திய அரசு உதவிசெய்யும் ஏன் தமிழ் ஈழத்தைபெற்றுத் தரும் என்று கூட நம்பினார்கள். ஆனல் உண்மை அதுவல்ல. இன்று இலங்கையில் செயற்படுகின்ற மாகாண சபை முறை இந்திராகாந்தி காலத்தில் தீர்மானிக்கப்பட்ட ஒன்றுஎன இந்திய அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியிருந்தார். இன்னமும் யாருக்கும் வெளிப்படாத இலங்கை ஒப்பந்தம் என்பது இந்திராகாந்தி காலத்தில் இந்திய கொள்கை வகுப்பாளர்களினால் எழுதப்பட்டது அதனைத்தான் 1987ஆம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முன்னாள் ஜனாதிபதி அமார் ஜே.ஆர் ஜயவர்த்தனாவுடன் கைச்சாத்திட்டார். வடமாராட்சியை இலங்கை இராணுவம் கைப்பற்றியதும் புலிகள் நெல்லியடியில் பாடசாலை ஒன்றில் இருந்தமுகாம் மீது நடத்தியதற் கொலைத் தாக்குதலில் 300க்கும் அதிகமானபடையினர் இறந்ததனர். இதனால் இந்தியா உடனடியாக தலையிட்டது. அடுத்த சிலவாரங்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னாள் பிரதமர் அமார் ராஜீவ் காந்தி கொழும்புக்கு வந்தார். இந்த இடத்தில் கேள்வி எழுப்பிய அந்த இந்திய அரசியல் விமர்சகர் இது இந்திராகாந்தி காலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது என கூறியிருந்தர்.
நெல்லியடியில் மில்லரின் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று அடுத்த சிலவாரங்களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எவ்வாறு தயாரித்திருக்க முடியும் என்றஅந்த இந்திய விமர்சகரின் சந்தேகம் தற்போதைய அரசியல் நிலைமையில் நோக்கும் போது நியாயமானதாகவே தெரிகின்றது. 1987 ஆம் ஆண்டு யூலை 5ஆம் திகதி மில்லர் தற்கொலைத் தாக்குதல் நடத்துகின்றார். யூலைமாதம் 29 ஆம் திகதி கொழும்பில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. ஆகவே ஒருமாதத்திற்குள் அந்த நீண்ட ஒப்பந்தத்தை எழுதியிருக்க முடியாது இந்திராகாந்தி காலத்தில் எழுதப்பட்டிருக்கின்றது. இந்திராகாந்தி தமிழ் ஈழத்தை பெற்றுத் தருவார் என கனவுகண்ட தமிழ் மக்களுக்கு மாகாணசபை தான் தீர்வு என அவர் அன்று எழுதி வைத்திருந்தமை தெரியாமல் போய்விட்டது.
பிரதமர் மன்மோகன் சிங் –
இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கைவரக் கூடாது என்றும் இலங்கைக்கு செல்லாது விட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு அது நல்லபாடத்தையும் எச்சரிக்கையையும் கொடுக்கும் என தமிழ்தரப்பு கருதுவதில் எந்தவிதவிதமான அர்த்தமும் இல்லை. ஆனால் முதலமைச்சர் விக்னேஸவரன் அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் அந்த அழைப்பு தமிழ்த் தரப்பும் இலங்கை அரசாங்கத்துக்கான ஆதரவு தளத்தை காண்பித்திருக்கினறது என்ற ஒருதோற்றப்பாடு சர்வதேசச மூகத்துக்கு தென்படக் கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி விடும்.
ஆகவேதான் தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய நிலைப்பாட்டில் முதலமைச்சர் விக்னேஸவரன் நின்றிருக்கலாம். ‘பொதுநலவாய மாநாட்டில் பங்கு கொள்ள அழைக்கவில்லை அவரை யாழ்ப்பாணத்துக்கு வருமாறுதான் அழைத்தேன்’ என முதலமைச்சர் விக்னேஸவரன் காரணம் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. கடந்த 30 வருடபோரில் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகள் தேவைகள்; எது என்பதை அறிந்து கொள்ளாத ஒருசெயல்.
யாழ்ப்பாணம் செல்வாரா?
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க அவ்வாறு இலங்கைக்கு வந்தாலும் யாழ்ப்பாணம் செல்லக் கூடிய நிலைமை இருக்கின்றதா? அவ்வாறு யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் விக்னேஸவரனை சந்தித்து உரையாடினாலும் தமிழ் மக்களுக்கான வடக்குகிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு என்பது சாத்தியப்படுமா? அவ்வாறான ஒருதீர்வுக்கு இந்திய உடன்படுமா? தனியே யாழ்ப்பாணத்துக்கு மட்டும் செல்லவதால் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற சமகால பிரச்சினைகளை அவரால் உடனயாக அறிந்து கொள்ளமுடியுமா? அப்படியானால் அவர் வன்னி திருகோணமலை மட்டக்களப்பு பிரதேசங்களுக்கும் செல்லவேண்டும். அதற்கான அனுமதியை இலங்கைஅரசாங்கம் கொடுக்குமா?
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு வருகைதரும் ஒரு அரசதலைவர் எவ்வாறு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்லமுடியும்? ஆகவே இனப்பிரச்சினையின் வரலாற்றை முதலமைச்சர் மாத்திரமல்ல வடமாகாணசபையின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு தடைவ ஒன்று சேர்ந்து மீட்டிப் பார்க்கவேண்டும்.
மாகாணசபைதான் தீர்வா?
வடமாகாணசபைதான் இறுதி அரசியல் தீர்வு என்றநிலையை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். 13 ஆவது திருத்தச்சட்டம் அமூலில் இருந்தால்தான் இல்ங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுக்க முடியும் என்பது இந்திய அரசின் நிலைப்பாடு நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற பேச்சுக்கள் உறுதியான தன்மையை பெறமுடியாமல் போனதற்கு இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவு கொள்கைகள்தான் காரணம் என்பது கடந்தகாலபட்டறிவு. இந்திய வெளியுறவு கொள்ளையை மீறி இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டை முன்னெடுப்பதில் சிக்கல் இருப்பதாக நோர்வேயின் பிரதியமைச்சர் விதார் ஹெல்கீசன் கொழும்பில் 2003ஆம் ஆண்டுகொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
சுனாமி நிவாரண நடவடிக்கைகளை வடக்குகிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்க அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிதிகளை பரிமாற 2005ஆம் ஆண்டு நிதிக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தகட்டமைப்பில் அமெரிக்காவும் உள்ளடங்கியிருந்தது. அதற்கானஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முன்னர் அந்த கட்டமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது. அதற்காக இரண்டு காரணங்கள் கூறப்பட்டிருந்தன. ஒன்று விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளமை இரண்டாவது இந்திய நிலைப்பாடு. சுமாதான தூதுவர் எரிக்சொல்கேய்ம் இந்தவிடயத்தை கொழும்பில் செய்தியாளர்களிடம் தயக்கத்துடன் கூறியிருந்தார்.
இந்தியாவுக்கு அறிவித்தனர்.
சுமாதான பேச்சுநடை பெற்றகாலத்தில் வன்னிக்கு சென்றுவருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எரிக்சொல்கேய்ம் புதுடில்லிக்கும் செல்வர். அதுபற்றி அவர் கூறும் ‘போது இலங்கை அரசாங்கத்தக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடத்தப்படும் பேச்சுக்களின் அனைத்து விடயங்களையும் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி வருகின்றேன்’ என கூறியிருந்தார். ஆகவே அன்றில் இருந்து இன்று வரை இந்திய தலையீடுகள் இருக்கின்றன என்பது வெளிப்படையாகின்றது. ஆனால் அந்ததலையீடுகள் இனப்பிரச்சினைக்கு ஆரோக்கியமான ஒரு அரசியல் தீர்வுக்கானவை அல்ல. இந்த நிலையில் பொதுநலவாய மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வராமல் விடுவதன் மூலம் போர்க் குற்றவிசாரணை, மனித உரிமைமீறல் விடயங்களை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என தமிழ்த் தரப்பு கருதினால் அது அறியாமைதான்.
என்ன செய்யலாம்?
ஆகவே இனப்பிரச்சினை விடயத்தில் இதுதான் நிலைமை என்றால் தமிழத் தரப்பு எதிர்காலத்தில் என்ன செய்யலாம் எப்படி அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளலாம் என்ற கேள்விகள் எழுகின்றன. சர்வதேச தேவைக்கு ஏற்ப நகர்ந்து செல்ல வேண்டும் என்று கூறினாலும் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தலாம்? தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைவர்களுக்கு இந்தியாவுடன் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புகள் உண்டு. ஆனால் அந்த உறவுகளை அவர்கள் இந்திய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பயன்படுத்தவில்லை. அல்லது அவர்களையும் இந்தியா நம்பாமல் விட்டிருக்கலாம் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதியிருக்கலாம். ஆனால் முதலமைச்சர் விக்னேஸவரன் அரசிலுக்கு புதியவர் புலிகளின் ஆதரவாளனும் அல்ல. ஆகவே தன்னுடைய சட்ட அறிவை பயன்படுத்தி இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.
பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்காமல் மேற்படி கூறப்பட்டுள்ள கடந்தகால இந்திய செயற்பாடுகளை மாற்றியமைக்கும் திட்டம் ஒன்றை ஏன் வகுக்க முடியாது? மாகாண சபை அல்லது அதனைவிட இன்னும் கொஞ்சம் கூடுதலான அதிகாரங்களை பெற்றுத் தரலாம் என்று இந்தியா சொல்வதை கேட்பதை விட தமிழர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வுக்கு இந்தியாவை இணங்கச் செய்யும் ஒரு பொறி முறையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் உருவாக்க முடியும் 2006ஆம் ஆண்டு சம்பந்தன் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை ஒன்றில் இந்திய நிலைப்பாட்டின் தவறான போக்கை சுட்டிக் காட்டியதுடன் தமிழர்களின் இறைமையை ஏற்றுக் கொள்ளும் தீர்வுக்கு முன்வர வேண்டும் என இந்தியாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆதனை விக்னேஸ்வரன் அறிந்துகொள்வாராக.
-GTN
















