அசாம் மாநிலத்தில் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குததில் 7 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் கோல்பரா மாவட்டத்தில் உள்ள கெண்டமாரி கிராமத்தில் நேற்றிரவு மக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களில் ஒரு பகுதியினர், வட்டமாக அமர்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது இரவு சுமார் 9.30 மணி அளவில் நவீன தானியங்கி எந்திர துப்பாக்கிகள் வைத்திருந்த மர்ம நபர்கள் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்.
என்ன நடக்கிறது என மக்கள் புரிந்துக் கொள்வதற்கு முன் அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கப்பட்டு பரிதாபமாக பலியாகினர்.
இத்தாக்குதலில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க ஒருவர் மருத்துவமனையில் பலியானார். மேலும் 9 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் கரோ தேசிய விடுதலை படையைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டிருந்த மக்கள் பலியாகிவிட்டதால் கோல்பராவில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
















