சேலம் காந்தி ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பெட்ரோல் கலந்த சாக்குப்பையை தீ வைத்து வீசிய வழக்கில் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரை இன்று காலை ம.தி. மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணியை பொய் வழக்கில் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் என்றும் வன்முறைக்கு சென்றது இல்லை. அவரை பொலிசார் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எந்த தொடர்பும் இல்லாத அவரை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற கைது சம்பவங்களால் அச்சுறுத்தினாலோ, மிரட்டினாலோ நாங்கள் பயந்து விடமாட்டோம். இலங்கையில் இசைப்பிரியா கொல்லப்பட்டுள்ளார். இதை நாங்கள் ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இவர் கொல்லப்பட்டதற்கும், அப்பாவி தமிழர்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதற்கும் மன்மோகன்சிங் அரசு தான் காரணம்.
இனப் படுகொலைக்கு இலங்கை அரசு தான் காரணம். இந்த பிரச்சினை குறித்து மத்திய மந்திரி சிதம்பரம் பேசுகிறார். கடந்த 3½ ஆண்டுகளில் அவர் எங்கே சென்றார். இதுவரை அவர் கோமாவிலா இருந்தார். மாற்றி மாற்றி பேசினால் தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது.
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும். இது தான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. அப்போது தான் இலங்கை ஜனாதிபதியை குற்றவாளி கூண்டில் நிறுத்த முடியும். அவர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
















