அண்மையில் முள்ளிவாய்க்காலில் கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிப் படுகொலை செய்யப்பட்ட சகோதரி இசைப் பிரியா தொடர்பில் சேனல் 4 வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒருசில முஸ்லிம் சகோதரர்கள் புலிகளால் காத்தான்குடிப் பள்ளிவாயிலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை தொடர்பான படங்களைப் பதிவேற்றி, சேனல் 4 இனால் ஏன் இதை வெளியிட முடியவில்லை என்ற ரீதியில் கேள்வி எழுப்பிப் பதிவுகள் இட்டு வருவதை அவதானித்தேன். இது தொடர்பில், காய்தல் உவத்தல் அற்ற வகையில் என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய விழைகின்றேன்.
விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மிக வெளிப்படையானது. ஏராளமான தமிழ் அன்பர்கள் இதை அறிவார்கள்; அது குறித்துத் தமது கருத்தை/ வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். அண்மையில் சகோதரர் சுமந்திரன் அவர்கள்கூட அதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மிகக் கொடூரமானவை. மனித குலத்தின் மனசாட்சியையே உலுக்கும் மாபெரும் அக்கிரமங்களில் ஒன்று. இதை சகலவித பேதங்களுக்கும் அப்பால் மனசாட்சியுடைய யாரும் ஒப்புவார்கள். போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, தம்முடைய வாழ்வாதாரத் தையே இழந்து தவிக்கும் ஒரு சமூகம், தனக்கான நீதியை, நல்வாழ்வை எதிர்நோக்கித் தவிப்போடு காத்திருக்கும் ஒரு தருணத்தில் அவர்களின் நியாயமான குரலை வலுப்படுத்த வேண்டியது மனித நேயமுள்ள அனைவரினதும் தார்மீகக் கடமையாகும். இஸ்லாமும் அதையே எதிர்பார்க்கிறது.
ஆக, எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் ஒன்றுகூடலை மையப்படுத்தி இலங்கை அரசுக்கு இவ்விடயத்தில் அழுத்தம் கொடுக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் பல்வேறு குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பழைய புண்ணைக் கிளறும் வகையில், நொந்துபோன ஒரு சமூகத்தின் ஒருசாரார், – அவர்கள் மிகவும் வன்மமாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில்- முன்னர் செய்த பிழையைக் காரணம் காட்டி, குறித்த முன்னெடுப்பைத் திசைதிருப்பும் வகையில் பதிவுகள் இடுவது எந்த வகையிலும் தார்மீகமான செயல் அல்ல மனிதாபிமான செயலும் அல்ல.
பழைய கசப்புகளைப் புறந்தள்ளி புதிய இன நல்லுறவும் இணக்கமும் முளைவிடும் இத்தருணத்தில் இதுபோன்ற பதிவுகளை மீளவும் மேலெழுப்புவதன் மூலம் நாங்கள் என்ன நன்மையை அடைய முடியும்?
முள்ளிவாய்க்கால் அநியாயங்களை நியாயப்படுத்துவதாக இது அமைந்துவிடாதா? இஸ்லாத்தின் பார்வையில் அது சரிதானா? தனக்குத் தீங்கிழைத்த பெண்மணியைக்கூட நோய் விசாரிக்கப் போன அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிக்கு இது முற்றிலும் முரணானது அல்லவா? ஜெனீவாவில் ஜம்மியத்துல் உலமா செய்த வரலாற்றுத் துரோகத்தையும் பொருட் படுத்தாமல், தம்புள்ளை முதல் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்ந்து இடிக்கப்பட்ட துர்ப்பாக்கியமான நிகழ்வுகளைக் கண்டித்து (சகோதரர் அஸாத் சாலி தவிர) நமது முஸ்லிம் அமைச்சர்கள் வாய்மூடி மௌனிகளாய் இருந்த போது, அவற்றை எதிர்த்துக் குரல் எழுப்பிய சகோதரர் மனோ கணேசன் போன்ற தமிழ் அன்பர்களுக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு இதுதானா? சற்று நடுநிலைமையோடு சிந்தித்துப் பாருங்கள்.
ஆகவே, பல்லின சமூகத்தில் வாழ்கின்ற, மக்கள் மத்தியில் நீதியை நிலைநாட்டி அமைதியை நிலைநிறுத்தும் இறை பணியைச் செய்யும் கடமையைச் சிரமேற்கொண்ட முஸ்லிம்களாகிய நாம், இதுபோன்ற விடயங்களில் இதைவிட சற்றுப் பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது கட்டாயமானது.
Via: Abdul Haq Lareena
















