மன்மோகன்சிங் வடபுலத்திற்கு வர அருகதை உள்ளவரா ? தமிழினப் படுகொலையின் உண்மைக் குற்றவாளிகள் யார்? – யாதவன் நந்தகுமாரன்

question2மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 2008 இல் வன்னிப் பகுதியில் மோதல்களுக்கு மத்தியில் 350,000 க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது தெரிந்திருந்தும் 70,000 பேருக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் மட்டுமே அங்கே அனுப்பப்படுகிறது என்று நன்கு அறிந்திருந்தும் பட்டினிச் சாவுடன் தமிழ் இனப் படுகொலை இடம்பெற்ற போது மௌனமாக இருந்தது. மட்டுமன்றி இலங்கை அரசுக்கு பெருமளவு ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் யுத்தம் நடத்துவதற்குத் தேவையான பொருளாதார உதவிகளையும் வழங்கியது. இத்தகைய ஆதரவு வழங்கிய பின்பும் இலங்கை இராணுவம் போரில் வெல்ல முடியாமல் திணறிக் கொண்டு இருந்த போது இரகசியமாக இந்திய இராணுவத்தையும் இறக்கி தமிழின அழிப்பிற்குத் தோள் கொடுத்தது.

போரின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்த விடுதலைப்புலிகளின் தலைமைத் தளபதிகளும் மிகச்சிறந்த போராளிகளும் (‘Cream of The Tigers’ as mentioned by DBS Jeyaraj in his controversial column: Theepan: A Heroic Saga of a Northern Warrior) தங்கள் முழுப் பலத்தையும் திரட்டி நாடத்திய வீரம்செறிந்த ஆனந்தபுரம் சமர் நயவஞ்சகமான இரசாயன ஆயுதப் பிரயோகத்தால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் உத்தரவுக்கமைய இங்கு தடைசெய்யப்பட்ட இராசயன ஆயுதம் பாவிக்கப்பட்டது என்பதற்கும் இறுதிப்போரில் பாவிக்கப்பட்ட இராசாயன ஆயுதத்தை இலங்கைக்கு வழங்கி உதவியது இந்தியாவின் மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு என்பதற்கும் சாட்சியங்கள் உண்டு. பன்னாட்டு சுயாதீன விசாரணை நடத்தப்பட்டால் இந்த உண்மைகள் நிச்சயம் வெளிவரும். இன்றும் இலங்கை இராணுவ உயர் பீடத்தில் சாட்சி சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மட்டுமல்ல வடமாகாண ஆளுநரின் வலது கரமாகச் செயற்படும் மேஜர் சுனத் ஜெயக்கொடியும் ஆனந்தபுரம் சண்டையில் படைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புக் குறித்தும் யுத்தம் நிறுத்தப்படாவிடில் படைகளுக்கப் அழிவு ஏற்படும் என்பதையும் நன்கு அறிந்திருந்தனர். இந்நிலையில் இந்தியாவின் ஆலோசனைக்கமைய படையினர் பின்வாங்கப்பட்டு இரசாயன ஆயுதம் பிரயோக்கிக்கப்பட்டு போரின் போக்கு மாற்றப்பட்டது.

வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேகா, ‘Gota ordered to Kill them’ என்று சண்டே லீடர் ஆசிரியர் பெட்ரிக்கா ஜோன்ஸிற்கு தான் முன்பு வழங்கிய பேட்டியின் போது கூறியதையே தானும் போர்க் குற்றவாளி யாக்கப்படுவேன் என்பதை உணர்ந்ததால் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பின்பு நீதிமன்றில் மறுத்துரைத்தவர்.

சரணடைந்தவர்களைக் கொல்லுமாறு இந்தியா வழங்கிய உத்தரவையே இலங்கைப் படையினர் செய்து முடித்தனர். இசைப்பிரியா போன்ற ஊடகவியலாளர்களுக்கும் மற்றும் தமிழ்ப் பெண்களுக்கும் இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தில் நேரடியாகவே மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசின் கை கறைபட்டுள்ளது. இதற்கு இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்கசவும் மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலருமான கோட்டாபாய ராஜபக்சவும் “நாம் இந்தியாவின் யுத்தத்தையே செய்து முடித்தோம்” என்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியதை மேற்கோள்காட்டி சருவதேச ஆய்வாளர்கள் சிலர், சரணடைந்த பொதுமக்களையும் போராளிகளையும் கொல்லுமாறு உத்தரவு வழங்கி தமிழின அழிப்பில் இந்திய காங்கிரஸ் அரசின் நேரடி பங்களிப்பைப் பகிரங்கப் படுத்தியிருந்தனர். இந்த சரணடைதல் என்ற நாடகத்தில் சதீஸ் நம்பியார், விஜய் நம்பியார் மற்றும் பான்கி மூன் எப்படி இந்தியாவின் ஆளும் காங்கிரசின் விருப்பினை பூர்த்தி செய்தனர் என்பதற்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் போல் நியூமன் (Paul Newman) கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமை பேரவையில் ஆற்றிய உரையும் சான்று பகரும். (http://www.colombotelegraph.com/index.php/justice-not-mourning-or-doles-is-what-the-victims-want/) போரின் போது பெருமளவு பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டதையும் வைத்தியசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பல தடவைகள் தாக்கப்பட்டதையும் களத்தில் நின்ற ஐ.நா பணியாளர்களும் செஞ்சிலுவைத் தொண்டர்களும் மருத்துவர்களும் உறுதிப்படுத்திய போதும் ஐ.நா R2P ( Protect to Responsibility ) ஐ பிரயோகிக்காமல் கடமை தவறியதற்கு சதீஸ் நம்பியார், விஜய் நம்பியார் பான்கி மூன் கூட்டே காரணமாகும்.

2009 மே 18 இல் நேரடி யுத்தம் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கனடா தலைமையில் மேற்கு நாடுகள் சில ஜெனீவா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம் பெற்ற இனப் படுகொலையைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வந்த வேளை தீர்மானத்துக்கு எதிராகத் தீவிர பிரசாரத்தை முன்னேடுத்து அந்தத் தீர்மானத்தை தோற்கடித்ததுடன் இலங்கை பயங்கரவாதத்தை அழித்ததைப் பாராட்டும் தீர்மானத்தை நிறைவேற்றுவதன் பின்னணியில் இருந்தது – “விக்னேஸ்வரன்” யாழ்ப்பாணத்திற்கு வாருங்கள் என்று செங்கம்பளம் விரிக்கும் மன்மோகன் சிங் தலைமை வகிக்கும் காங்கிரஸ் அரசே.

இந்தியாவின் இந்த இலங்கையை ஆதரிக்கும் தீர்மானத்தின் காரணமாகவே 250,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் அடிப்படை வசதிகள் அற்ற முகாம்களில் பலவந்தமாக அடைபட்டுக் கிடந்த போதும் நள்ளிரவில் இம் முகாம்களில் கேட்பாரின்றி ஆட்கடத்தல்கள் இடம்பெற்றபோதும், இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்ற போதும் மனிதாபிமானத்தில் கரிசைனை கொண்ட உலக நாடுகளால் தலையீடு செய்ய முடியாமற் போனது.

அதன் பின்பு 2012 பங்குனியில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா தலைமையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகளைஐக்கிய நாடுகள் நேரடியாகக் கண்காணிக்கக் கூடிய பொறிமுறையை ஏற்படுத்தக் கூடிய தீர்மானத்தைக் கொண்டு வந்த வேளை மீண்டும் தீர்மானத்தை நேரடியாகவே எதிர்த்து இலங்கையின் இறை யாண்மையைப் பாதிக்கும் எந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்க மாட்டோம் என்று கூறி அதை பிசுபிசுக்கச் செய்தவரே இந்த மன்மோகன் சிங் தான்.

இன்று வரை தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் இனப் படுகொலை, போர்க் குற்றம், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் காரணமாக சர்வதேச மட்டத்தில் மகிந்த தலைமையிலான இலங்கை அரசு கடும் சவாலை எதிர்கொள்ளும் நிலையில் இலங்கையை முண்டுகொடுத்துக் காப்பாற்றி வரும் முக்கியமான வேலையை செய்து வருவதே மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கமே. அதேவேளை இத்தகைய உதவிகளுக்கு தமிழ் மக்களையே பகடைக் காய்களாக உருட்டி வருவதை சம்பூரில் இருந்து தமிழ் மக்களைப் பலவந்தமாக வெளியேற்றிய போதும் அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்காமல் இந்தியா தனது சுயநலத்தை முன்னிலைப் படுத்தியதன் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

இலங்கையில் இறந்த இந்திய இராணுவத்துக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் தீவிரமாக இருந்த காங்கிரஸ் அரசாங்கம் இன்று வரைக்கும் இந்திய இராணுவத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொது மக்களுக்காகவோ பாலியல் வன்புணர்வுக் குள்ளாக்கப்பட்ட பெண்களுக்காகவோ வருத்தப்பட்டுக் கவலை தெரிவிக்க வில்லை. காங்கிரஸ் அரசு அமைதிப் படை என்ற போர்வையில் தன்னால் இழைக்கப்பட்ட போர்க் குற்றத்திற்காக இலங்கைத் தமிழர்களிடம் இன்றுவரை மன்னிப்புக் கூட கேட்டதில்லை என்பதையும் இந்த நேரத்தில் தமிழ்ச் சமூகம் நினைவில் கொள்ள வேண்டும்.

புலிகள் இருக்கும் காலத்தில் அவர்களின் மீது கொண்ட வெறுப்பினால் தான் காங்கிரஸ் அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு உதவத் தயங்குவதாக சில அரசியல் பண்டிதர்களும் புலிகளுக்கு எதிரானவர்களும் எழுதியும் கூறியும் வந்தார்கள். இறுதி யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்த பின்பும் காங்கிரஸ் அரசு ஈழத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொள்ள சிறிதளவாவது உதவி செய்ததா ? இன்று வரைக்கும் தமிழர்களுக்கு சர்வதேச அமைப்புகளின் ஊடாக கிடைக்கக் கூடிய உரிமைகளையும் ஆதரவையும் தடுத்து நிறுத்திக் கொண்டு துவிச்சக்கரவண்டி வழங்கல், வீட்டுத் திட்டம் போன்ற மலிவான ஏமாற்று வேலைகளைச் செய்து ஈழத் தமிழர்களை தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்று எண்ணுகிறது இந்திய அரசு.

ஆனால் “கெடுவான் கேடு நினைப்பான்“ என்பது போல காங்கிரஸ் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை இலங்கையிலும் படுதோல்வி அடைந்ததற்கு ஆதாரமாக நெடுந்தீவில் இருந்து அம்பாந்தோட்டை வரைக்கும் இந்தியாவின் வடபகுதியினுள் நுழையத் துடிக்கும் சீனா உளவுபார்ப்பதற்கு தேவையான துறைமுகம், செய்திப் பரிமாற்ற கோபுரம் போன்றவற்றுடன் தென்திசையிலும் பிரசன்னமாகி இருப்பதைக் குறிப்பிடலாம். இது போதாது என்று ஒரு சிறிய நாடாகிய இலங்கையின் தூதுவர் இந்தியா பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் சருவதேச அளவில் தனிமைப் படுத்தப்படும் என்றும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை முறித்துக் கொள்வோம் என்றும் மிரட்டும் அளவுக்கு மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் வெளியுறவுக் கொள்கையும் இந்தியாவை பலவீனப் படுத்தி உள்ளது.

உண்மையில் மன்மோகன்சிங் தமிழரின் ஆதரவைப் பெறவேண்டுமானால் இழந்த இந்தியாவின் கௌரவத்தை மீளப்பெற வேண்டுமானால் யாழ்ப்பாணத்துக்கு வராமலே அதை இலகுவாக தமிழருக்கு சமஉரிமை வழங்கும் திட்டம் ஒன்றுக்கு இலங்கையை வலியுறுத்தி இணங்க வைப்பதன் மூலமாக செய்திருக்க முடியும். மேலும் அன்னை இந்திரா காந்தி இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் செய்யாமலே தமிழ் இன அழிப்பில் இருந்து தமிழர்களைக் காக்க எடுத்த நேர்மையான நடவடிக்கைகள் காரணமாக தமிழர்களின் பெரு மதிப்பைப் பெற்றிருந்தார். அது அன்னையின் அகால இழப்பின் போது பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த தமிழ் மக்கள் தமது சொந்த அன்னையை இழந்தது போல கறுப்புக் கொடி கட்டி சோக கீதம் இசைத்த போது வெளிப்பட்டது என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இன்று கமலேஸ் சர்மா கூறுவது போல் வடமாகாண மக்களுடன் இந்தியா இணைந்து நிற்கும் என்று கூறுவதன் பின்னணி தான் என்ன? சடுதியாகத் தமிழரில் கரிசனை கொண்டு மன்மோகன்சிங் யாழ்ப்பாணத்துக்கு வருவதன் நோக்கம் தான் என்ன? 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோற்பது சுயாதீன ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும் தற்போது காங்கிரஸ் அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்து சேடம் இழுத்துக் கொண்டு இருக்கும் நிலையிலும் தமிழ்நாட்டில் வாக்கு வங்கியை மீண்டும் பலப்படுத்துவதற்குத் தான் இந்த இறுதிக் கட்ட கபட நாடகம். இந்த நேரத்தில் மன்மோன் சிங்கை அழைக்கும் விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் கூட்டணியின் தாற்பரியத்தையும் நாம் அலசிப் பார்க்க வேண்டியது அவசியம்.

தென் ஆபிரிக்கா, கிழக்குத் தீமோர் உட்பட இன விடுதலை பெற்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட இனத் தலைவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் இன அழிப்பு மற்றும் இனப் படுகொலைகளை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்து உரிமைகளைப் பெற முயற்சிக்கவில்லை.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இன அழிப்பாக இறுதி 8 மாதங்களில் 150,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வன்னியில் கொல்லப்பட்டும் இன்று வரைக்கும் ஏன் சம்பந்தன் கூட்டணி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இன அழிப்பு என்ற வார்த்தையை உச்சரிக்கவே இல்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறதா? இது புதிரல்ல!

யுத்தம் தீவிரமடைந்த போதே மாவை – சம்பந்தன் கூட்டணிக்கு காங்கிரஸ் அரசால் வழங்கப்பட்ட உறுதிமொழியின்படி சம்பந்தன் கூட்டணி இலங்கையில் தமிழினப் படுகொலை நடந்தது என்றோ அல்லது நடக்கிறது என்றோ மறந்தும் சொல்லப் போவதில்லை. ஏனெனில் இந்தியாவை மீறி அல்லது இந்தியாவைப் பாதிக்கும் எந்த வார்த்தையையும் மாவை – சம்பந்தன் கூட்டு இனிமேலும் உச்சரிக்கப் போவதில்லை. இது தேசியப் பட்டியல் எம்பி சுமந்திரனுக்கும் நன்கு தெரியும் என்பது மட்டுமல்ல உடன்பாடான விடயமும் கூட.

அண்மையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி வலிகாமம் பகுதியில் வீடுகள் அழிக்கப்படும் போது தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து இன அழிப்பில் ஈடுபடும் சிங்களத்தின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தாமல் அதை உள்நாட்டு விவகாரம் என்று பூசி மெழுகுவது எதற்காக? திட்டமிட்ட முறையில் தமிழ்ப் பகுதிகளில் கருஅழிப்பு இடம் பெறும் போது அதைப் பற்றி மூச்சுவிடாமல் இருப்பது எதற்காக அல்லது யாருக்காக? இவற்றின் பின்னணி எப்படி இருந்தாலும் விக்னேஸ்வரன் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணம் வருகை தருமாறு விடுத்த அழைப்பு தமிழருக்கு எந்தவித உரிமைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை. மாறாக தமிழ்நாட்டு சட்ட சபைத் தீர்மானத்தையும் மீறி மன்மோகன் சிங் இலங்கை வந்து பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தித் தந்துள்ளது என்பது தான் ‘சம்பந்தன் முன்மொழிந்த வடமாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரன்’, மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த கயமை வெளிப்படுத்துகிறது. இது மகிந்த-மன்மோகன்-சம்பந்தன் கூட்டணியின் வெளித் தெரியாத இராச தந்திரம். தமிழினம் அழியும் நெருப்பில் குளிர் காயும் பதவி அரசியல். ரோம் எரியும் போது பிடில் வாசித்தற்கு ஒப்பாகும்.

Tags: , , ,

Leave a Reply