இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கொலைக்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியுள்ள ஜனநாயகப் பிரஜைகள் குழு இயக்குனரும் சமூக ஆர்வலரும் ஆன என்.ரஜீவன் இது தொடர்பாக தனது கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன துளிகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜ.நாவும் அயல் நாடுகளின் உதவியுடன் எம்மினத்தை அழித்த பெருந்துயரம் முள்ளியவாய்க்காலில் நடந்தேறியது.
காலங்கள் கடந்தோட தமிழ் இனவழிப்பு ஆதாரங்கள் காணொளி மூலமாக சனல் 4 இல் வருகிறது. கடந்த வாரம் இசைப்பிரியாவின் கொடூர கொலை ஆதராம். இன்னும் வரலாம் என எதிர் பார்க்கிறது இலங்கை இராணுவம்.
உலகின் கண் எனும் ஊடகத்தில் தனை இணைத்து பணிபுரிந்த ஊடகப் போராளி இசைப்பிரியாவின் கொடூர கொலைகள காணொளி பார்த்து கலங்கிப் போன உன் சகோதரனின் கண்டனக் கடிதம் இது.
காலம் இட்ட கட்டளையில் கரிகாலன் சேனையில் களமாடி, பின் ஈழத்தின் அவல நிலையை வெளிக் கொணரும் ஊடகப் போராளி ஆகி நடிப்பிலும் இசையிலும் தனை வளர்த்து இசையரசியாக பெயர் பெற்று பின்னர் ‘ இசையால் வசமாகாத உள்ளம் உண்டோ’ என்பதற்கமைய இசைப்பிரியா என அனைவராலும் அழைக்கப்பட்டு தன் பணி புரிந்தாள்.
ஆதரவற்ற அநாதைகளாய் ஆளுக்கொரு திசையில் தொலைந்து போன தமிழ் உறவுகளில் இசைப்பிரியாவும் ஒருத்தி. கண்னிப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்ட வெண்புறா போல யாரும் அற்ற சேற்று வயல் பகுதியில் காடையர் கூட்டத்தின் நடுவே கண்டு கண்கள் கலங்கிப் போகுதம்மா. காடையர் கூட்டம் கண்பட அந்த காரிருள் மேகங்களும் களைந்து போனதோ.
ஜயோ! குரங்கின் கையில் சிக்கிய பூமாலையான உன் நிலை கண்டு என் உள்ளம் வெந்து இரத்தம் கொதிக்கிறதே. வெண்துணி போர்த்தி மானம் மறைக்கும் மடையர் கூட்டத்தின் மதி கெட்ட நிலை கண்டு புத்த ஞானம் உண்டோ? என்று எண்ணுவதற்கு இடையில், அரை நிர்வாண ஆமிக்காரன் அருகில் வந்ததும் இலங்கை இராணுவத்தில் அரைநிர்வாணப் படையும் உண்டு என்பது வெளிச்சத்திற்கு வந்து விட்டதம்மா இசைப்பிரியா.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்கரம் செயவது போல் அரசியல் வாதிகளின் கண்டனங்கள் காலத்திற்கு ஏற்றனவே. எனவே நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்கிறார்கள் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















