சில அரசியல் வாதிகள் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்: வேணும் என்றால் எம்மால் அவர்களுக்கு செய்து காட்ட முடியும் என்கிறார் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்

sathiyalingamபட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகிறது. அதற்கு வடமாகாணசபையில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் ஆகிய எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக அரசு சார்பான பிரதிநிதிகளை மட்டும் அழைத்திருக்கின்றார்கள். சில அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். வேணும் என்றால் எம்மால் அவர்களுக்கு செய்து காட்ட முடியும் என வடமாகாண சுகாதார அமைச்சர்ட வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தில் நாம் வாசிப்பு பழக்கத்தை வளர்க்க வேண்டும். வாசிப்பதன் மூலம் பல விடயங்களை அறிந்திருக்கின்றோம். இன்னும் அறிந்து கொள்ள முடியும். வாசிப்பு என்பது வெறுமனே எமது பாடசாலைப் படிப்புக்காகவோ, நாம் எமது பதவியில் மேலே செல்வதற்கோ மட்டும் அல்ல. இந்த வாசிப்பானது எமது கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், வரலாறு, எமது இருப்பு என்பவற்றை தக்க வைப்பதற்கு அவசியம்.

நாங்கள் வாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆனால் இன்று எமது கல்வித் திட்டமிடலானது கூடுதலாக எமது சமூகத்தை நாம் தெரிவதிலும் விட வேறு சமூகங்களை தெரியக் கூடியதாகவே காணப்படுகின்றது. இன்று எமது மாணவர்களிடம் பண்டாரவன்னியனைப் பற்றி பத்து வசனம் எழுதச் சொன்னால் எழுதமாட்டார்கள். ஆனால் தென் பகுதியில் இருந்த அரசர்களைப் பற்றி எழுதச் சொன்னால் எழுதுவார்கள். ஏனென்றால் பாடசாலைப் புத்தகங்களில் அவையே உள்ளன. எமது மாணவர்களும் அவற்றைப் படிக்கிறார்களே தவிர வெளியில் வந்து படிப்பது மிகவும் குறைவு.

எமது கல்வித் திட்டத்தில் தமிழர்களின் வரலாறு சார்ந்த விடயங்கள் மிகவும் அரிது. இன்னும் அருகிக் கொண்டு போகின்றது. எனவே எமது அறிவு சர்ந்த மற்றும் வரலாறு சார்ந்த பல விடயங்களினை வெளியில் சென்று வாசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு வாசிக்காது விடுவோமானால் எமது வரலாறு சார்ந்த விடயங்களினை காலப் போக்கில் விட்டுவிடுவோம். முன்னாள் நகரசபைத் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களினதும் உறுப்பினர்களினதும் முயற்சியால் இந்த மாவட்டத்திற்கு அரியதொரு சொத்தாக நூலகம் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் தொகை குறைவாகவுள்ளமை கவலைக்குரிய விடயமாகவுள்ளது. இலத்திரனியல் ஊடகங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதும் வாசிப்பு குறைந்தமைக்கு ஒரு காரணமாகும். ஜரோப்பிய நாடுகளில் பார்த்தோமேயானால் அவர்கள் இலத்திரனியல் ஊடகங்களை எமக்கு முதலே பயன்படுத்துகின்றனர்.

அங்கு வாசிப்பு பழக்கம் இன்றும் காணப்படுகின்றது. அவர்கள் பொழுது போக்கு நேரங்களில் கூட புத்தகங்களை வாசிப்பார்கள். ஆனால் நாங்கள் அந்த பழக்கத்தை தொலைத்து விட்டோம். அதற்கு முக்கியமான காரணம் எமது கல்வி முறைமையில் உள்ள குறைபாடுகள் என்று சொல்லலாம். எத்தனை வாசிப்பு மாதத்தை நாம் கொண்டாடினாலும் சிறு வயதில் இருந்து இதனை கொண்டு வரவிட்டால் பயன் இல்லை. வாசிப்பு என்பது பழக்கமாக வரவேண்டும். சிறு வயதில் வாசிப்பு பழக்கம் உருவாக வேண்டும். அதற்கு எமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.

பரீட்சைக்கான படிப்பு என்பதை விட அது வாழ்க்கைக்கானதாக மாற வேண்டும். நாங்கள் படிக்கின்ற போது அம்புலிமாமா, நட்சத்திர மாமா என்றெல்லாம் புத்தகம் இருந்தது. இன்று அவற்றை காணமுடியாதுள்ளது. ஏனெனில் வாசிப்பு பழக்கம் இல்லாமல் போய்விட்டது. இன்று சிறுவர்கள் குரங்கு குட்டிக்கு பேன் எடுப்பது போன்று செயற்படுகிறார்கள். போனையோ, ஜபாட்டையோ வைத்து நோண்டிக் கொண்டு அதில விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் பெற்றோர்களே.

பெற்றோர்கள் அவற்றை அளவுடன் சிறுவர்கள் கையாள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே இலத்திரனியல் உடகங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட்டது என்று கூறமுடியாது. அவற்றை அளவோடு பயன்படுத்த வேண்டும். இலத்திரனியல் ஊடகங்களை கண்டு பிடித்து இன்றுவரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இடையில் தெரிந்து கொண்ட எமக்கு தான் பிரச்சனை.

நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சிறுவர்களுக்கான வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலமே அந்த பிள்ளை தொடர்ந்து வாசிக்கும். வளர்ந்த பின் உருவாக்க முடியாது. இதை உருவாக்குவதற்கு எமது வவுனியா நூலகத்தில் உள்ள வசதிகள் காணாது. எமது நூலகத்தில் சிறுவர்களைக் கவரக் கூடிய வகையில் சிறுவர் பகுதி மாற்றப்பட வேண்டும்.

1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந் நூலகம் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீன மயப்படுத்தப்படவேண்டும். குறிப்பாக சிறுவர்களை கவரக் கூடியதாகவும் அவர்கள் பெற்றோருடன் விரும்பி வந்து வாசிக்க கூடியதாகவும் மாற்றியமைக்கப்படவேண்டும். அதற்கு மாகாணசபை உங்களுக்கு உதவி செய்யும். நீங்கள் எந்த தயக்கமும் இல்லாமல் இதனை எம்மிடம் கேட்கலாம். நானும் எமது உறுப்பினர்களும் தயாராகவே இருக்கின்றோம். இவ் நூலகத்தை அமைந்தவரும் கூட இந்த மாகாணசபையில் எம்முடன் இருக்கிறார்.

இது தவிர, வவுனியாவில் பொழுது போக்கு வசிகள் மிகவும் குறைவு. இங்கு பீச்சோ கடலோ இல்லை. எனவே இருக்கின்ற மரங்களையும் குளங்களையும் தான் நாம் பயன்படுத்த வேண்டும். எனவே எமது நூலகத்துடன் இணைந்து காணப்படுகின்ற பூங்கா கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுகின்றது. அது பாதுகாக்கப்படவேண்டும்.

இந்த பூங்கா டெங்கு நோய் பரவும் இடமாக இருக்கிறது. அது மாற்றியமைக்கப்பட்டு சிறுவர்களை கவரும் பூங்காவாக நவீன மயப்படுத்தப்பட வேண்டும். பூங்கா என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அது நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கும் நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் சரியான திட்டத்தை முன்வைத்தால் மாகாணசபை அதற்கும் உதவி செய்யும். அதற்கு நாங்கள் தயாரகவுள்ளோம்.

இந்த மாகாணசபை பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்றது. அதற்கு காரணம் நாங்கள் 30 பேரும் இல்லை. நீங்கள் தான். ஏன் என்றால் நீங்கள் போட்ட வாக்கின் காரணமாகவே நாங்கள் பலமாக உள்ளோம். இந்த மாகாணத்தில் மூவின மக்களும் வாழகிறார்கள். நாங்கள் தமிழ் பேசும் மக்கள். ஆனால் மாகாணசபையிலே வேறுபாடுகள் இல்லாமல் எதிரணியில் உள்ள எட்டுப் பேரையும் எம்முடன் இணைத்து வேலை செய்ய தாயாரக இருக்கிறோம்.

ஆனால் இதனை சீர்குலைக்கும் விதத்தில் சில அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் நடந்து கொள்வது கவலைக்குரிய விடயம். முன்பு ஒரு நிலை இருந்தது. பாராளுமன்ற உறுப்பினரைக் கூட பொது நிகழ்வுக்கு கூப்பிட முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. இன்றைக்கு பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மாகாணசபையில் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றோம். இந்த மாவட்டத்தில் ஆறு மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கின்றோம்.

ஆனால் இரண்டு பேரை மட்டும் கூப்பிட்டுள்ளார்கள். ஏன் இந்த பாகுபாடு. கூட்டமைப்பு சார்பாக நாங்கள் நான்கு பேர் இருக்கின்றோம். எங்களை ஏன் கூப்பிடவில்லை. இது தொடர்பாக இந்த பட்டதாரிகள் நியமன நிகழ்வை ஒழுங்கு படுத்திய அதிகாரிகளை எழுத்து மூலம் கேட்க வேண்டும். ஏனென்றால் இந்த மாவட்டத்தில் கூடியளவிலான வாக்குகளைப் பெற்ற கட்சி இருக்கின்றது. அந்த கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் இருக்கின்றோம். இன்று எம்மை கூப்பிட வில்லை. நாங்கள் அதாவது உங்கள் பிரதிநிதிகள் அவமதிக்கப்பட்டுள்ளார்கள். எங்களை கௌரவப்படுத்தச் சொல்லி நாம் கேட்கவில்லை. அரச அதிகாரிகள் எம்மை கௌரவப்படுத்த வேண்டும் என யோசிக்கவும் இல்லை.

ஆனால் நாம் அதிக வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள். எம்மை கட்டாயம் கூப்பிட வேண்டும். எங்களுக்கு அழைப்பு தரப்பட வேண்டும். மத்திய அரசின் கீழ் வருகின்ற பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படுகிறது. வடமாகாணசபை திணைக்களங்களுக்குள் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு இன்று நியமனம் வழங்கப்படவில்லை.

இந்த பாகுபாடு வேண்டாம். நாங்கள் இதெல்லாம் வேண்டாம் என்று தான் இன்று ஒன்றாக நிற்கின்றோம். உங்களுக்கு வேணும் என்றால் நாங்கள் செய்து காட்டலாம். ஏனென்றால் இன்றைக்கு வடக்கில் எமது அரசாங்கம் இருக்கிறது. நாங்கள் வேணும் என்றால் அதைச் செய்யலாம். ஆனால் அப்படி நடந்து கொள்ள நாம் விரும்பவில்லை. எமது வடமாகாணத்தில் உள்ள எட்டு எதிர்கட்சி உறுப்பினர்களை கூட நாம் எதிர்கட்சியாக கருதவில்லை. எங்களைப் போல் அவர்களும் மாகாணசபை உறுப்பினர்கள். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்களையும் மக்கள் விரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த மக்களுக்கு சேவை செய்கின்ற கடப்பாடு இருக்கிறது. அதற்காக அவர்களையும் இணைத்து வேலை செய்ய தீர்மானித்துள்ளோம். ஆனால் சில அரசியல் வாதிகளும் அரச அதிகாரிகளும் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம். மக்களையும் பிரிந்தாளுகின்ற வேலை அது. இதனால் இதற்கான விளக்கத்தை பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

Tags: , , ,

Leave a Reply