இலங்கையின் வடபுலத்தில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளிற்கு நீதி கோரியும் அண்மைய பாலியல் படுகொலை சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் பெண்கள் அமைப்பினரால் இன்று காலை யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் புத்தூரில் இளம் யுவதியான அமிர்தலிங்கம் மைதிலி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்து வீசப்பட்ட கிணற்றினையண்டிய சூழலினிலேயே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
யாழ்.பருத்தித்துறை வீதியோரமாக புத்தூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் குடும்பத்தவர்கள் மற்றும் கிராம மக்களுடன் பெண்ணிய அமைப்பினை சேர்ந்தவர்களும் இணைந்து இவ்வார்ப்பட்டத்தை நடத்தியிருந்தனர்.படுகொலை செய்யப்பட்ட யுவதியின் புகைப்படங்களுடன் சுலோக அட்டைகளையும் தாங்கி அவர்கள் இவ்வெதிர்ப்பு போராட்டத்தினில் குதித்திருந்தனர்.நூற்றிற்கும் அதிகமானவர்கள் போராட்டத்தினில் இணைந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே யாழ்.நகரினையண்டிய நாச்சிமார் கோவிலடியினில் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட நிலையினில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பிலும் நீதி வேண்டி குறித்த பெண்ணிய அமைப்புக்கள் அதே இடத்திலும் அரியாலையிலும் ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















