மண்ணைக் கவ்விய ‘அழகுராஜா’? : கார்த்தியும், ஞானவேல் ராஜாவும் செய்த மாபெரும் தவறுகள்!

karthi-ganavelrajaபிரபல தயாரிப்பாளர் அவர். இப்போதும் இருக்கிறார், ஆனால் முன்பு போல இல்லை. பெரிய பெரிய பட்ஜெட் படங்களைக் கொடுத்து பிரம்மாண்டமான வெற்றிகளையும் தமிழ்சினிமாவில் தந்தவர்.

டைரக்டர்களின் திறமை அறிந்து அவர் தயாரித்த பெரும்பாலான படங்கள் ஹிட்டாகின. சில படங்கள் மெகா ஹிட்டாகின. நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அவருடைய தயாரிப்பு தொழில்.

ஆனால் திடீரென்று ஒரு தவறை திரும்பத் திரும்ப செய்ய ஆரம்பித்தார். அதாவது ஒரு படம், இரண்டு படங்கள் ஹிட் கொடுத்த டைரக்டர்களையெல்லாம் தனது கம்பெனிக்கு கூப்பிட்டு அவர்கள் கையில் ஒரு பெரிய தொகையை திணித்து தனது கம்பெனியில் அடுத்த படத்தை இயக்குவதற்காக அவர்களை கமிட் செய்தார்.

ஆனால் அப்படி அவர் தயாரித்த எல்லாப் படங்களுமே தோல்வியைத் தழுவியது. இப்படித்தான் அவர் தயாரிப்பில் கடைசியாக வந்த அடுத்தடுத்த படங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போனது. அப்போது தான் அவருக்கு சினிமாவில் பெரிய சறுக்கல் ஏற்பட ஆரம்பித்தது. இன்று அதிலிருந்து மீளவே ‘ஆரம்பம்’ என்ற படத்தை தயாரித்து தனது கடன்களை அடைத்து வருகிறார்.

நாம் சொல்லும் அந்த தயாரிப்பாளர் வேறு யாருமல்ல ஸ்ரீசூர்யா மூவிஸ் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான்.

‘சாமி’ என்ற ஹிட் படத்தை கொடுத்தவுடன் டைரக்டர் ஹரிக்கு பெரிய தொகையை கொடுத்து ‘கோவில்’ என்ற படத்தை தனது பேனரில் தயாரித்தார். சாமி ஓடியது, ஆனால் கோவில் ப்ளாப்பானது. ராதாமோகன் ‘அழகிய தீயே’ என்ற ஹிட் படத்தை கொடுத்ததும் அவருக்கு ஒரு பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து அடுத்த படமாக ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தை தனது பேனரில் தயாரித்தார். ‘அழகிய தீயே’ ஓடியது, ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ ப்ளாப்பானது. அடுத்து ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ என்ற இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த டைரக்டர் பேரரசுவுக்கு பெரிய தொகையை கொடுத்து தனது பேனரில் ஒரு படத்தை டைரக்ட் செய்யச் சொன்னார். ‘திருப்பாச்சி’யும், ‘சிவகாசி’யும் ஓடியது. ஆனால் இவரது பேனரில் ரிலீசான ‘தர்மபுரி’ ப்ளாப்பானது.

கடைசியாக அவர் தமிழில் தயாரித்த ‘பீமா’ படமும் தோல்வியைத் தழுவ கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது ரிலீசாகியிருக்கும் அஜித்தின் ‘ஆரம்பம்’ படம் தான் கடன் சுமையிலிருந்து அவரை மீட்டெடுத்துள்ளது.

இப்படி ஒரு படமோ அல்லது இரண்டு படங்களோ தொடர்ச்சியாக ஹிட்டானதும் அந்த டைரக்டரிடம் கதையே கேட்காமல் ஒரு பெருந்தொகையை கொடுத்து “நீங்க என்ன எடுத்தாலும் சரி, எங்க கம்பெனிக்கு ஒரு படம் பண்ணிக்கொடுத்தாப் போதும்”என்று கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து தயாரிக்கக் கிளம்புவது என்பது சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது போலத்தான்.

கிட்டத்தட்ட இதே பார்முலாவைத் தான் தற்போது தமிழ்சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவும் அழகுராஜாவில் கடை பிடித்து விட்டாரோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

தீபாவளிக்கு வந்த மூன்று படங்களில் அதிக எதிர்மறை விமர்சனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’.

சுமாரான ‘சிறுத்தை’, ‘சகுனி’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்று அடுத்தடுத்து தோல்விப்படங்களை கொடுத்து வரும் கார்த்திக்கு இந்தப்படம் தான் சுருங்கிக் கொண்டே இருக்கும் அவரது மார்க்கெட்டை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள உதவும் படமாகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கார்த்தியின் அந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ஒரு லோடு லாரி மண்ணை அள்ளி கொட்டிவிட்டுப் போயிருக்கிறார் டைரக்டர் ராஜேஷ்.

டைரக்டர் ராஜேஷுக்கு ஒரு அடி தேவை தான். காரணம் எந்தவித லாஜிக்கும் இல்லாமல், கதை என்ற ஒற்றை வரிச் சமாச்சாரம் கூட இல்லாமல் அவர் ஹிட் கொடுக்க நினைக்கிறார். சந்தானம் என்ற ஒரே ஒரு காமெடியனின் முதுகிலேயே ட்ராவல் செய்து ஹிட் கொடுத்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார். ஆனால் அவரின் இந்த ராஜ தந்திரத்தில் கார்த்தியின் அழகுராஜா சிக்கிக் கொண்டது தான் கார்த்தியின் கெட்ட நேரம்.

வித்தியாசமான, புதுமையான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை, ஹீரோ புதுமுகமாக இருந்தாலும் பரவாயில்லை இதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உணர்த்தும் விதமாக அவர் வாங்கி வினியோகம் செய்த அட்டகத்தி, கும்கி, சூது கவ்வும், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய ஹிட் படங்கள் அவர் கண் முன்னால் நிற்கிறது.

ஆனாலும் அவர் கார்த்தியை வைத்து தயாரிக்கும் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியான கமர்ஷியல் ஃப்ளேவர்களில் இருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து கோலிவுட்டின் வெற்றிச் சூத்திரத்தை புரிந்து கொண்டவர்கள் யாருமே இல்லை தான். அப்படி இருக்கும் போது கார்த்தி இனிமேலாவது தன்னைத் தேடி வரும் டைரக்டர்களிடம் அல்லது அவர் தேடிப்போகும் டைரக்டர்களிடம் கொஞ்சமாவது காதை கொடுத்து கதையைக் கேட்டால் அவருடைய சினிமா கேரியருக்கு நல்லது. தயாரிப்பாளர் ஞானவே ராஜாவும் இதை மனதில் பதித்துக் கொண்டால் நல்லது.

தவறுகள் ஒருமுறை செய்யலாம், ஆனால் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்து கொண்டிருக்கக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா..?

Tags: , ,

Leave a Reply