பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்பங்கேற்பதை அந்நாட்டு அரசு இன்னும் இலங்கையிடம் உறுதிப்படுத்தவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம நேற்றுத் தெரிவித்தார்.
எனினும், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பார் என்ற நம்பிக்கை இலங்கைக்கு இருக்கின்றது என்றும் அவர் கூறினார். கொழும்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்க வேண்டும் என டில்லி வெளிவிவகார அமைச்சு பரிந்துரை செய்துள்ளது என “த இந்து’ நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன், பொதுநலவாய மாநாடு தொடர்பில் பிரதமரே இறுதி முடிவெடுக்க வேண்டும் என மத்திய கூட்டணி அரசின் பிரதான கட்சியான காங்கிரஸ் ஆலோசனை வழங்கியுள்ளது என்று ஏனைய இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனவே, மாநாட்டுக்குச் செல்லும் முடிவையே மன்மோகன் எடுப்பார் என டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இந்நிலையில், கொழும்பு மாநாட்டில் இந்தியப் பிரதம ரின் பங்குபற்றல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் நேற்று வினவப்பட்டது. பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பதை டில்லி அரசு உறுதிப்படுத்திவிட்டதா என்ற கேள்விக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம,
“இன்னும் இல்லை. எனினும், மாநாட்டுக்கு இன்னும் காலம் இருக்கின்றது.
அதுகுறித்து பதற்றமடைய வேண்டியதில்லை. மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பார் என்ற நம்பிக்கை இலங்கைக்கு இருக்கின்றது” என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதை 37 நாடுகளில் அரச தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என அரசு அண்மையில் அறிவித்தது. இந்தத் தொகை தற்போது அதிகரித்துள்ளதா என எழுப்பப்பட்ட மற்றுமொரு கேள்விக்கு,
“ஆம். 38 நாடுகள் தமது வருகையை ஸ்திரப்படுத்தியுள்ளன” என்று பதலளித்தார் அமுனுகம.
பொதுநலவாய மாநாட்டுக்குச் செல்லுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சவுத்பிரோக் பரிந்துரைத்துள்ளது எனக் கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு,
“ஆம். அவ்வாறுதான் செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன” என்று வெளிவிவகார அமைச்சின் செயலர் மேலும் கூறினார்.
















