இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் அசியப்படலாம் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தல் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தல் போன்றனவற்றை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் மேற்கொள்ளத் தவறினால், சர்வதேச ரீதியான தலையீட்டை மேற்கொள்ள நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய தமிழர் பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாற்றத்தை தாம் எதிர்பார்பதாகவும், அமர்வுகளை புறக்கணிப்பதன் மூலம் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் மனித உரிமை விவகாரங்கள் மற்றும் ஏனைய விடயங்களில் போதியளவு மாற்றங்கள் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதனை உலகிற்கு எடுத்துரைக்க பொதுநலவாய நாடுகள் தவைலர்கள் அமர்வுகளை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அமர்வுகளை வெறுமனே புறக்கணிப்பது உசிதமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் யதார்த்தமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் இலகுவானதாக அமையாது என்ற போதிலும், புறக்கணிப்பது இராஜதந்திர அணுகுமுறையல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
















