இன்னொரு சுருக்குக் கயிறு

lk-armyவடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, படையினரின் செயற்பாடுகள் குறித்து பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, படையினரின் செயற்பாடுகள் குறித்து பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக்குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண சபைத் தேர்தல் சுதந்திரமாக நடப்பதற்கு, இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமுறை கோரியிருந்தது. ஆனாலும், அதனைச் செய்ய அரசு முன்வரவில்லை.

தேர்தல் ஆணையாளரிடம் இதுபற்றிக் கோரிக்கை விடுத்தபோது, அதற்கான அதிகாரம் தமக்குக் கிடையாது என்று அவரும் கைவிரித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வே அதனைச் செய்ய முடியும் என்றும் அவருக்கே அந்த அதிகாரம் உள்ளது என்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இராணுவத் தலையீடுகளின்றி, சுதந்திரமாகத் தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும் படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­விடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நேரடியாகவே கோரிக்கை விடுத்திதார்.

வடக்குத் தேர்தலில் அதிகளவு இராணுவம்

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ அதில் அக்கறை செலுத்தியிருக்கவில்லை. இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கும் உத்தரவு கடைசிவரை பிறப்பிக்கப்பட வேயில்லை. தேர்தல் கடமைகளில் படையினர் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், பொலிஸாரே அதனைக் கவனிப்பதாகவும், இராணுவப் பேச்சாளர் அதனை நியாயப்படுத் தினார்.

தேசிய பாதுகாப்புக்காகவே படையினர் நிலை கொண்டுள்ளதாகவும், பொலிஸாரின் அனுமதியின்றி சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் அவர்கள் தலையிடமாட்டார்கள் என்றும் இராணுவத் தரப்புக் கூறியிருந்தது.ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இராணுவத் தலையீடுகள் காணப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டிருந்த படையினர், அந்த வெற்றியின் வீரியத்தைக் குறைப்பதற்காக ஏராளமான குறுக்கு வழிகளைக் கையாண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் தாக்கப்பட்டமை, மிரட்டப்பட்டமை போன்ற நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மறைமுகமாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

குறிப்பாக, அனந்தி சசிதரன் மீதான தாக்குதலில் படையினரே ஈடுபட்டதாக வலுவான குற்றச் சாட்டுகள் எழுந்தபோதிலும், அது பற்றிய முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதா என எந்த தகவலும் இல்லை.

இராணுவத்துக்குக் கிடைத்த பெரும் ஏமாற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கக் கூடாது என்று வீடு வீடாகச் சென்று படையினர் நடத்திய பரப்புரைகள், தேர்தல் பரப்புரை ஓய்ந்த பின்னரும், பல்வேறு வழி களில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவத் தலையீடுகள் அதிகமாகவே இருந்தன. எனினும், வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுக்களின் உன்னிப்பான அவ தானிப்புக்குள்ளாகியிருந்ததால், வாக்களிப்பில் படையினரின் தலையீடுகள் அதிகம் இருக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக, வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுக்கவும், ஆளும் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளவும், இராணுவம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இலங்கை இராணுவம் பாரபட்ச மின்றிச் செயற்பட்டதாகவோ, அரசின் வெற்றியைச் சார்ந்து செயற்படவில்லை என்றோ ஒருபோதும் கூறமுடியாது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக் காக, அதனை அரியணையில் ஏற்றுவதற்காக, இராணுவம் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பல்வேறு காரியங்களை மேற்கொண்டது.

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிந்த பின்னர், வவுனியா படைத் தலைமையகத்தில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க நிகழ்த்திய உரை, இந்தத் தேர்தல் முடிவு இராணுவத்தினருக்குக் கொடுத்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. தமிழ் மக்களுக்கு அரசு எவ்வளவோ செய்தும், அவர்கள் அரசு சார்பாக வாக்களிக்க வில்லை என்றும், அதுபற்றிப் படையினர் கவலை கொள்ள வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மக்களின் வெறுப்பு வெளிப்பட்டது

இந்தக் கருத்து, வடக்கிலுள்ள தமிழ் மக்கள் அரசுக்குச் சார்பாக வாக்களிக்க வேண்டும் என்ற இராணுவத்தினரின் எதிர்பார்ப்பையும், அதைச் செய்யாத தமிழ் மக்கள் மீது இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பையும் வெளிப்படுத்தியது. எனவே, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் இராணுவத்தினர் பக்கச்சார்பின்றி, விருப்பு வெறுப்பின்றி நடந்து கொண்டனர் என்று கூறினால் அது தவறானது.

இவையயல்லாவற்றையும், தெரிந்து கொண்டோ, தெரியாமலோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­, வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கண்காணிக்க வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடக்கில் இராணுவத்தினரின் செயற்பாடுகளில் திருப்தி வெளியிட்டதாக கூறியிருந்தார். அண்மை யில் நடந்த கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், உரையாற்றிய போதே அவர் அவ்வாறு கூறியிருந்தார்.

வடக்கில் படையினர் ஒழுக்கத்துடன் பணியாற்றுவதாகவும் அங்கு தேர்தல் நீதியாக நடத்தப்பட்டதாகவும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கூறியதாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தெரிவித்த சில மணிநேரத்தின் பின்னர் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியானது. அதில் இரண்டு விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன.

முதலாவது, வடக்கு மாகாணசபைத் தேர்தல் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ஜனநாயக ரீதியாக நடத்தப்படவில்லை. இரண்டாவது, தேர்தலில் இராணுவத்தினரின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது.

வாக்களிப்பு பெரும்பாலும் சுதந்திரமானதாகவே இடம்பெற்றுள்ளதாக, பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழு கூறியுள்ளது. ஆனால், வாக்களிப்புக்கு முந்திய பரப்புரைகளின் போது இராணுவத் தலையீடுகளும், குறுக்கீடுகளும் அதிகளவில் காணப்பட்டதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள், படையினர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்வதாக பாராட்டுத் தெரிவித்தனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ கூறியிருந்தார். அவர்கள் அப்படியேதும் கூறினரா என்று பலரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த போது தான், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

இதனை அரசு எதிர்பார்த்திருக்காது

வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றியைப் பெற்றுக் கொண்டதால், வடக்கில் தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்ற முழுமையான குற்றச் சாட்டில் இருந்து அரசு தப்பிக் கொண்டு விட்டது. ஆனாலும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வடக்கில் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடக்கவில்லை என்று பொது நலவாய கண்காணிப்புக்குழு அளித்துள்ள அறிக்கை, தமக்கான இன்னும் பெரிய வெற்றி குறைக்கப்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தநிலையில், தேர்தலில் காணப்பட்ட இராணுவத் தலையீடுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று, பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழு பரிந்துரைத்துள்ள நிலையில், அரசு அது பற்றி வாயைத் திறக்கவேயில்லை. இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தத் தவறினால், அதுவும் கூட எதிர்காலத்தில், இலங்கை மீதான சுருக்குக் கயிறாக மாறலாம்.

Tags: , , ,

Leave a Reply