கொழும்பு வருவாரா மன்மோகன்சிங்; தொடர்கிறது சந்தேகம்

manmohan_singh2காங்கிரஸ் மற்றும் உள்நாட்டிலும் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளுக்குப் பணிந்து, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று மதியம் மன்மோகன்சிங்கின் இல்லத்தில் நடந்த காங்கிரஸ் உயர் மட்டக்குழுவின் கூட்டத்தில், தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை அடுத்தே, கொழும்புப் பயணத் திட்டத்தை இந்தியப் பிரதமர் கைவிடலாம் என செய்திகள் கூறுகின்றன.

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பதா என்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் உயர்மட்டக் குழு சுமார் ஒன்றரை மணி நேரமாக ஆராய்ந்தது.

இந்தக் கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங், மூத்த அமைச்சர்கள், ஏ.கே.அன்ரனி, ப.சிதம்பரம், சுசில்குமார் ஷிண்டே, கபில் சிபல், சல்மான் குர்ஷித், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டால், அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கட்சியின் நலனை கருதி, தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் பிரதமர் அதில் கலந்து கொள்ளக் கூடாது’’ என மூத்த அமைச்சர்கள் ஏ.கே.அன்ரனி, ப.சிதம்பரம் போன்றோர் கூறியதாக தெரியவருகின்றது.

அதேபோன்று, ‘‘பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் அது அனைத்துலக அளவில் குறிப்பாக பொதுநலவாய நாடுகளிடையே இந்தியாவின் நிலையை பாதிக்கும்’’ என்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட சிலர் குரல் எழுப்பினர்.

இதனால், இறுதி முடிவை எட்ட முடியாமல் குழப்பம் நீடித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களின் நலனை மனத்தில் கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும். மேலும், தேச நலன் மற்றும் சிறிலங்கா தமிழ் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட முதல்வரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்தியாவில் உள்ள தமிழ் மக்களுக்கு, சிறிலங்காவின் மனிதஉரிமை மீறல்கள் கவலைக்குரிய விடயமாக உள்ளது.

தேச நலன் தான் அளவீடு. அதுதான் எல்லாவற்றுக்கும் மேலானது. அதையொட்டியே பிரதமர் முடிவெடுப்பார்.” என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி, பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன.

இது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்தநிலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பில்லை என புதுடெல்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: , ,

Leave a Reply