அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கைக்கு பணிந்து ஈரானிடம் இரகசியமாக எண்ணெய் கொள்வனவு செய்வதை இலங்கை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக, ஈரானிய எண்ணெயை இலங்கை கொள்வனவு செய்து வந்தது.
இது பற்றிய புலனாய்வுத் தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்ததை அடுத்து, அண்மையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அலரி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கும் இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியை கையளித்திருந்தார்.
அச் செய்தியில், ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்திக் கொள்ளாவிடின் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனால், ஈரானிய எண்ணெயை மட்டும் சுத்திகரிக்கும் வசதியைக் கொண்டுள்ள, சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டுள்ளதுடன், சிறிலங்காவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
















