காமன்வெல்த் மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்கிறார். இதனை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. ஆனால் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் யாழ்பாணத்துக்கு இந்திய குழுவை வழி நடத்திச் செல்வது பற்றியும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா பகீரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தொடரும் எதிர்ப்பால் மட்டுமே மாநாட்டை இந்தியா புறக்கணிக்கும் என்று கூறுவது தவறு என்று கூறிய அக்கட்சி, இலங்கை போர் குற்றம் புரிந்ததால் மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று இந்தியா அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து இன்னும் அறிவிக்கபடாதது வருத்தம் அளிப்பதாக கூறிய அக்கட்சி, முடிவு தாமதப்படுத்துவது மத்திய அரசின் அலட்சிய போக்கை காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் காமன்வெல்த் விவகாரம் குறித்து நேற்று சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூடி விவாதித்தது.
அப்போது, காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று சில அமைச்சர்களும், கலந்து கொள்ள கூடாது என்று சில அமைச்சர்களும் பிரதமரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காமன்வெல்த் விவகாரம் குறித்து பிரதமரே இறுதி முடிவு எடுப்பார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
















