இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் மற்றைய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில் நாமும் கலந்து கொண்டு எமது பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் வன்னி தொகுதிக்கான நிர்வாகிகள் தெரிவு நேற்று(09) வவுனியா இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அதன் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், நான் ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரியுள்ளேன். அவர் அதனை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனை அவர் செய்யவும் வேண்டும். அத்துடன் வீடுடைப்பது மற்றும் காணி பறிப்பதையும் நிறுத்துமாறும் கடிதம் மூலம் கேரியுள்ளேன். இந் நிலையில் பொது நலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்த தீர்மானமாக இருந்தால் அதனைப் பற்றி நான் எதுவும் கதைத்திருக்க மாட்டேன். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ள மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நானும் ஒரு கட்சியின் தலைவர். என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கப்படவில்லை. உண்மையில் என்னிடம் கேட்டிருந்தால் இவர்கள் எடுத்த தீர்மானத்திற்கு மாறான தீர்மானத்தை சொல்லியிருப்பேன். கூட்டமைப்பில் உள்ள சிலருக்கு பொது நலவாய அமைப்பு என்றால் என்ன வென்று தெரியாது. அதைப் பற்றி தெரிந்திருந்தால் இந்தியாவைக் கூட போக வேண்டாம் என கூற மாட்டார்கள்.
அம் மாநாட்டில் மனித உரிமை விடயம் மட்டும் பேசப்படும் விடயம் அல்ல. எமக்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றது. அவ்வாறான பிரச்சனைகள் வந்த போதெல்லாம் நாம் பொது நலவாய அமைப்பை நாடியுள்ளோம். அவை எமக்கு உதவியுள்ளது. ஆகவே நாம் அங்கு சென்று பேசலாம். ஏன் பகிஸ்கரிக்க வேண்டும். நாம் அங்கு சென்று பிரித்தானியாவிடம் நீங்கள் தந்த சோல்பரி அரசியல் அமைப்பு என்ற முள்ளுத் தானே எமக்கு குத்துகின்றது என சொல்ல வேண்டும். அதனை விடுத்து சிலரின் அரசியல் வளர்ச்சிக்காக அவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று கூற முடியாது. எனவே அம் மாநாட்டுக்கு செல்வது சிறப்பானதாக இருக்கும்.
இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் தமிழரசுக் கட்சியின் சிலர் தன்னிச்சையாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வட மாகாண சபைத் தேர்தலில் எனது தோல்விக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல் முழுமையாக குற்றத்தை சொல்ல முடியாது. ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைபில் அங்கம் வகிக்கும் கட்சியான தமிழரசுக் கட்சியே எனது தோல்விக்கு காரணம். மாகாண சபைக்கு முன்னர் அனைத்து மாவட்டத்திலும் ஐந்து தலைவர்களையும் உள்ளடக்கி கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த வகையிலேயே நான் சில கூட்டங்களில் பங்கேற்று பேசியுள்ளேன்.
ஆனால் சில கூட்டஙகள் தொடர்பில் எனக்கு அறிவித்தல் தருவதில்லை. அந்த வகையில் கிளிநொச்சியில் எனக்கோ மற்றைய வேட்பாளர்களுக்கோ தெரியாமல் அத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் என கூறும் சிறிதரன் தான் தெரிவு செய்திருந்தவர்களுக்கு வாக்களிக்குமாறு செய்திருந்தார். உண்மையில் அவர் எனது கட்சியை சேர்ந்தவராக இருந்திருந்தால் நான் அவரை தூக்கி எறிந்திருப்பேன். ஆனால் சம்மந்தன் அதை செய்யவில்லை. கிளிநொச்சியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவை சேனாதிராஜாவும், செல்வம் அடைக்கலநாதனும் முதல் கூட்டத்திலேயே அந்த மூவருக்குமே வாக்களிக்குமாறு கூறி விட்டு சென்றுள்ளனர்.
அத்துடன் பளைப் பகுதியில் சி. வி. விக்னேஸ்வரனை வைத்து தமது கட்சிக் காரர்களின் துண்டு பிரசுரத்தை கொடுக்க வைத்துள்ளனர். இது அற்பத்தனமான செயற்பாடு. மக்கள் முன் கதைக்கவே அருகதையில்லாத தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பின் சுமந்திரன் கிளிநொச்சி சந்தையில் வந்து நோட்டீஸ் கொடுத்துள்ளார். வேட்பாளர்களுடைய விண்ணப்ப படிவம் நிரப்பத் தெரியாத சுமந்திரன் இன்று எனக் கெதிராக நோட்டீஸ் கொடுக்கிறார். அத்துடன் இராஜதந்திரிகளின் சந்திப்புகளுக்கும் என்னை அழைப்பதில்லை. அது மட்டுமல்ல நீண்ட அரசியல் வாதி என்று என்னிடம் ஆலோசனையை கேட்கின்றனரா? அல்லது சந்திப்பின் பின்னர் என்ன நடந்தது என கட்சித் தலைவர் என்ற வகையில் என்னிடம் தெரிவிக்கின்றனரா. இவையெல்லாம் திட்டமிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக சிலர் செய்யும் சூழ்ச்சியே.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போகக் கூடாது என்பதற்காகவே நான் இவ்வளவு காலமும் பொறுமையாக இருந்து வருகின்றேன். எனினும் உடைப்பதற்காக இடம் பெறும் சதிக்கு நான் எடுபடப்போவதில்லை. கடந்த மூன்று வருடங்கள் எனது இனத்திற்காக சொல்ல முடியாத துன்பங்களை நான் சுமந்து கொண்டிருக்கின்றேன். எனினும் எனது சுய கௌரவம் என்பது இருக்கின்றது. எனினும் சில காலங்களுக்கு இந் நிலையை பார்ப்பேன். இனியாகினும் திருந்துகின்றார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். இந் நிலையில் எமது கட்சி தொடர்பான நிலைப்பாட்டை மக்களுக்கு விளங்கப்படுத்தி தமிழர் விடுதலைககூட்டணியை எழிச்சி பெற வைக்க வேண்டியது எனது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.
வன்னித் தொகுதிக்கான தமிழர் விடுதலைக் கூட்டனியின் தலைவராக திரு.இராஜகுகனேஸ்வன் அவர்களும் செயலாளராக இந்திரன்ஸ் சஜீந்திரா அவர்களும் பொருளாளர் ஆக கந்தசாமி சிறிசங்கர் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
















