காணாமல் போனோர் தொடர்பில் பொதுநலவாய மாநாடு ஆரம்பிக்கும் தினத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடும் கூட்டம் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரால் வவுனியா நெளுக்குளம் பிரதேசசபை கட்டிடத்தில் இடம் பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளிநடப்பு செய்துள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனோர் தொடர்பில் நீதி வேண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இது வரை காலமும் ஆர்ப்பாட்டங்களும் கவனயீர்ப்பு போராட்டங்களும் இடம்பெற்று வந்திருக்கின்றது.
அந்தவகையில், வவுனியாவில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்வதற்கு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு என சொல்லப்படும் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் திட்டமிடுவதற்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் நிமிர்த்தம் நாம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை கட்டிடத்திற்கு சென்றிருந்தோம். எனினும் அங்கு பிரஜைகள் குழு என தம்மை அடையாளப்படுத்திய சிலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கேலிக்குள்ளாக்கும் விதமாக செயற்பட்டனர். அதன் போது அக் கருத்துக்கு நாம் ஆட்சேபனை தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பே இதுவரை காலமும் இவ்வாறான போராட்டங்களை நடத்தி வந்துள்ளதாகவும், அதனை இம் முறையும் நாம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்த போதிலும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கீழ்த்தரமாக குற்றம் சாட்டியமையினால் நாம் அங்கிருது வெளியேறியிருந்தோம்.
வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் 7 பேரும் வெளிநடப்பு செய்திருந்தனர். இதன் போது வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் உட்பட வவுனியா மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர்களும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் அமைதியாக இருந்து விட்டு வெளியேறிவந்திருந்தனர். இதேவேளை இக் கூட்டத்தின்போது ஊடகவியலாளாகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் பிரஜைககள் குழுவினரால் தாம் தயாரித்த செய்திகளே வழங்கப்பட்டிருந்தது.
















