இந்த மாதம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது. போக்குவரத்து ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள் என எல்லா முன்னோடி நடவடிக்கைகளும்
பூர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணைவாக பொதுநலவாய இளைஞர் மாநாடு, வர்த்தகர்கள் மாநாடு என்பனவும் இடம்பெறுகின்றன. வர்த்தக மாநாட்டில் பொதுநலவாய அமைப்பில் இல்லாத சில நாடுகளும் பங்குபற்றவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை முன்னிட்டு கொழும்பு நகரமே மெருகுபடுத்தப்பட்டு புதிய பொலிவுடன் காணப்படுகிறது. இதற்காகவே புதிய கொழும்பு கட்டுநாயக்கா அதிவேகப் பாதையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மின்னொளி அலங்காரங்கள், வளைவுகள் உட்பட கொழும்பு கோலாகலமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த விழா ஏற்பாடுகளில் மாணவர்கள் பங்கு கொள்ளவும், பார்வையிடவும் வசதியாக 31 பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இம்மாநாடு இலங்கையின் ஒரு பாரம்பரிய விழா ஒன்று போன்று தோற்றமளிக்கும் வகையில் எல்லா ஏற்பாடுகளும் பெரும் பொருள் செலவில் மிகவும் ஆடம்பரமான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு நூறு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த மாநாடு தொடர்பாக இலங்கையில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கு மெனவும் அதனால் இலங்கை பெரும் பொருளாதார நலன்களைப் பெற முடியும் எனவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வர்த்தக மாநாட்டை பொதுநலவாய அமைப்பு நாடுகளுக்கு வெளியே விரிவுபடுத்துவதும் இந்தக் காரணத்துக்காக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
எப்படியிருப்பினும் இந்த மாநாடு தொடர்பாக இலங்கையில் காணப்படும் நிலைமைகள் இந்த மாநாடு பெரும் வெற்றியுடன் இடம்பெறுமெனவே எண்ணும் வகையில் அமைந்துள்ளன.
எனினும் சர்வதேச நிலைமைகளைப் பார்க்கும் போது இலங்கை அரசு எதிர்பார்க்கும் வெற்றியை எட்ட முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
பல நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையயழுத்திட்ட அழைப்பிதழ்களை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேரில் கொண்டு சென்று கொடுத்த போதும் இதுவரை 53 நாடுகளில் 37 நாடுகளே மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன.
ஏனைய நாடுகளும் கலந்து கொள்ளும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்த போதும் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை முக்கியமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற கடந்தமுறை மாநாட்டில் முப்பத்தேழுக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டார்கள் எனவும் ஒருவித திருப்தியை வெளியிட்டுள்ளார்.
எப்படியிருந்த போதிலும் கனடா பிரதமர் தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் கனடா சார்பில் எந்த ஒரு பிரதிநிதியும் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் தெரிவித்து விட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதிலும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் இலங்கை போதிய முன்னேற்றம் காணவில்லை என்பதே கனடாவால் முன்வைக்கப்பட்ட காரணமாகும்.
அதேவேளையில் சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற மனித உரிமை அமைப்புகளும் பொதுநலவாய மாநாட்டைக் கொழும்பில் நடத்தக் கூடாதெனவும் அப்படி நடத்தப்பட்டால் அங்கத்துவ நாடுகள் அதைப் புறக்கணிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளன.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதாகவும் இலங்கை மீது சில அழுத்தங்களை பிரயோகிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள், போர்க்குற்றங்கள், நல்லிணக்கம் என்பன தொடர்பாக இலங்கை திருப்திகரமான நடவடிக்கை எடுக்காமை தங்காலை விடுதியில் வைத்து பிரிட்டன் பிரஜை கொலை செய்யப்பட்டதும் அவரின் நண்பி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பிலும் முன்னாள் பிரதம நீதியரசர் தொடர்பாக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரச்சினை எழுப்பப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பிரிட்டன் அரச கட்சியில் உள்ள சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளும் பிரிட்டன் பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்வதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மேலும் லண்டனில் உள்ள அமைப்புக்களும் கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி வருகின்றன. ஒரு தமிழ் இளைஞன் பிரதமரின் வாசஸ்தலம் முன்பு உண்ணா விரதம் இருந்து வருகிறான்.
எப்படி இருப்பினும் இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரிட்டன் கலந்து கொண்டாலென்ன கலந்து கொள்ளாமல் விட்டாலென்ன எந்த முடிவானாலும் இலங்கைக்குப் பாதகமான சூழ்நிலை வருவதை ஏற்படுத்தும் என்பது இப்போதே தெளிவாகிறது.
இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதா இல்லையா என் பது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகளும் வாதப்பிரதி வாதங்களும் இடம் பெற்று வருகின்றன. எனினும் இந்திய அரசோ அல்லது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கோ இதுவரை திட்டவட்டமாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
எனினும் அவர் தமிழக மக்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொண்டே தான் முடிவு எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழக சட்டசபை இந்தியப் பிரதமர் கொழும்பு மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது எனவும், அவர் மட்டுமல்ல இந்தியாவின் சார்பில் வேறு எவரும் கூட கலந்து கொள்ளக் கூடாது எனவும் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் தோழர் தியாகு நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கலைஞர் கருணாநிதி அளித்த வாக்குறுதியின் பேரில் கைவிடப்பட்டது.
தமிழகத்தின் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புக்கள், வழக்கறிஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்களான சிதம்பரம், ஜி.கே.வாசன், பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆகியோர் பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது எனக் கடுமையான முறையில் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே வேளையில் இந்திய வெளிவிவகார அமைச்சு பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளையில் தான் இலங்கை மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாக இந்தியப் பிரதமர் ஏற்கெனவே அறிவித்து விட்டார். தமிழ் நாட்டில் போராட்டங்கள் வலுத்து வரும் வேளையில் மத்திய அமைச்சர்கள் சிலரும் எதிர்க்கும் சந்தர்ப்பத்தில் பிரதமர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எனினும் இந்தியாவின் ஒரு பிரதிநிதி கலந்து கொண்டாலும் கூட அது இலங்கைத் தமிழர்களுக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
குறிப்பாகப் பிரிட்டன் பிரதமர் இலங்கை அரசுக்கு எதிராகச் சில பிரச்சினைகளை முன்வைக்கும் போது இந்தியா இலங்கையைக் காப்பாற்ற தன்னாலான சகல முயற்சிகளையும் எடுக்கும் என்பதைக் கடந்த கால அனுபவங்கள் எமக்குப் புகட்டுகின்றன.
இதைத் தமிழக மக்களும் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளனர். பொதுநலவாயத்தின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மா தன் பதவிநிலை குறித்து மறந்து ஒரு கீழ்த்தர அரசியல்வாதியாக மாறிக் கருத்து வெளியிடுவது கவலை தரும் விடயமாகும்.
அவர், இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்ற வகையிலும் அயல் நாடு என்ற வகையிலும் இந்தியா மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையைக் கோருவது யதார்த்தத்துக்குப் புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு வக்காலத்து வாங்கும் ஒரு சரணாகதி நிலையே என்பதில் சந்தேகமில்லை. இந்தியா, இந்திய இலங்கை மக்களின் நலன்கள், மனித உரிமைகள் என்பவற்றை விட இந்தியப் பெரு முதலாளிகளின் நலன்களிலேயே கூடுதலாக அக்கறை செலுத்தி வருகிறது.
எனவே இந்திய எண்ணெய் நிறுவனம், திருகோணமலை எண்ணெய்க்கு தம், சம்பூர் அனல்மின் நிலையம், காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலை, துறைமுகம், ரயில் பாதைகள் அமைப்பு போன்ற பல முதலீடுகளைத் தொடர இந்தியா இலங்கையுடன் நட்பைப் பேணவே விரும்பும். இங்கு இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களோ மனித உரிமைகளோ புறமொதுக்கப்படும்.
எனவே இந்தியப் பிரதமரோ அல்லது சக்தி வாய்ந்த ஓர் அமைச்சரோ பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதாகக் கடைசி நிமிடத்தில் முடிவெடுப்பார்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.
இதன் மூலம் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரை இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய நண்பன் அல்ல என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படும். இந்தியாவின் ஒரு பிரதிநிதி கலந்து கொண்டாலும் கூட அது இலங்கைத் தமிழர்களுக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
















