நாட்டின் நீதி மற்றும் சமாதானம் தொடர்பில் ஆட்சியில் இருக்கும் மஹிந்த அரசு கவனம் செலுத்துவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ.பெரேரா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதி மற்றும் சமாதானத்தை கட்யெழுப்புதல் பொலிஸாரின் கடமை எனவும், அதற்காக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு அமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
கொழும்பு – 07 இல் கடந்த வாரம் சூதாட்ட நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 23 பேருக்கு பொலிஸ் மா அதிபர் இடமாற்றம் வழங்கியுள்ளார். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு அமைக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் தடுக்கப்படும்.
பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டிற்கு வரும் தலைவர்கள் பார்வையிடுவதற்காக நாடாளுமன்றத்திற்கு அருகில் மிருகக்காட்சிசாலை ஒன்றை அமைத்துள்ளனர்.
நகரத்தை அழகுபடுத்துவதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கவில்லை. பணத்தை விரயப்படுத்துவதையே நாம் எதிர்க்கின்றோம்.
பொதுநலவாய மாநாட்டு ஆரம்பத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எமது கட்சி உறுப்பினர்களுக்கு தத்தமது வருகையை உறுதிப்படுத்துமாறு அழைப்பு வந்தது.
எனினும் கட்சி உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற்ற கடிதம் உறுதிப்படுத்துவதற்கான திகதியின் பின்னதாகவே கிடைக்கப்பெற்றது. இது திட்டமிட்ட செயல். இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சருக்கும் அந்த அமைச்சில் உள்ளோருக்கும் பாலர் வகுப்பு மாணவர்களின் அறிவே உள்ளது – என்றார்.
















